அரங்கேற்றம்: நம்ரதா வேதகர்பா
ஜூன் 1. 2019 அன்று நம்ரதா வேதகர்பாவின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சான் ஹோசே (கலிஃபோர்னியா) இன்டிபென்டன்ஸ் உயர்நிலைப் பள்ளி கலையரங்கில் நடை பெற்றது. ஃப்ரீமான்ட் இர்விங்டன் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு மாணவியான நம்ரதா, ஃப்ரீமான்ட் ஸ்ரீ லலித கான வித்யாலயா இசைப்பள்ளியில் கடந்த 11 வருடங்களாக குரு ஸ்ரீமதி லதா ஸ்ரீராமிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

கொத்தவாசல் வெங்கட்ராம அய்யரின் சாவேரி வர்ணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. "விநாயக நின்னு" என்ற வீணை குப்பையரின் ஹம்சத்வனி கிருதி, "நா மனவினி" என்ற சக்ரவாகராக அமைந்த கர்பரி வாசரின் கிருதியுடன் தொடர்ந்தது. அடுத்ததாக சியாமா சாஸ்திரிகளின் "கனகசைல" என்ற புன்னாகவராளி கிருதியை அழகாகப் பாடினார்.கானடா ராகத்தில் சுவாதித் திருநாளின் "மாமவ சதா ஜனனி" கிருதியைக் கல்பனா ஸ்வரங்களுடன் பாடினார். பட்டணம் சுப்ரமணியம் ஐயரின் "ரகுவம்ச சுதா"வை அடுத்து தியாகராஜரின் "ஞானமோ சகராதா" கிருதியை ராக ஆலாபனையுடன் தொடங்கி நிரவல், கல்பனா ஸ்வரங்களுடன் விரிவாகப் பாடினார்.

இரண்டாம் பகுதியில் "பாவயாமி ரகுராமம்", "மருகேலரா", "மானஸ சஞ்சரரே", "வெங்கடாசல நிலையம்", "பிபரே ராம ரசம்" என்று எல்லோருக்கும் பிடித்த பல பாடல்களைப் பாடினார். ஆஹிர் பைரவில் நாமதேவரின் அபங்கையும், வைத்தியநாத பாகவதரின் கமநாஸ்ரம ராகத்தில் அமைந்த துருபத் பாடியது வித்தியாசமாக அமைந்தது. "பாதி மதி நதி" என்ற திருப்புகழ், "பாக்யாத லக்ஷ்மி" பின்னர் மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. மிருதங்கத்தில் ரவீந்திர பாரதி ஸ்ரீதரனும், வயலினில் விக்ரம் ரகுகுமாரும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். குரு திருமதி லதா ஸ்ரீராம் வெள்ளியில் பதித்த சான்றிதழ்த் தட்டை நம்ரதாவுக்கு அளித்துப் பாராட்டினார்.

ரமாதேவி ராமசுப்பன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com