அரங்கேற்றம்: சிரேயா ராமசுப்பன்
ஜூன் 8, 2019 அன்று செல்வி சிரேயா ராமசுப்பனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சான் ஹோஸே இன்டிபென்டென்ஸ் உயர் நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது. ஃப்ரீமான்ட் ஸ்ரீ லலித கான வித்யாலயாவில் இசை பயிலும் இவர் சான் ஹோஸே சம்மிட் ரெயினியர் உயர்நிலைப் பள்ளியில் இறுதிநிலை மாணவி.

கரூர் தேவுடு ஐயரின் ஸ்ரீராக வர்ணம் மற்றும் புரந்தரதாஸரின் "கஜவதனா" கிருதிகளுடன் தொடங்கியது நிகழ்ச்சி. தியாகராஜரின் "ஜகதானந்தகாரகா" நாட்டை ராகப் பஞ்சரத்ன கிருதியை அடுத்து வந்தது தேவியரின் மீதான மூன்று கிருதிகள்: மைசூர் வாசுதேவாச்சாரியரின் ஹிந்தோள ராக "மாமவது ஸ்ரீ சரஸ்வதி" , நீலாம்பரி ராக பொன்னையாப் பிள்ளையின் "அம்பா நீலாம்பரி", மற்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் தேவகாந்தார ராக "பஞ்சாஷட் பீட ரூபிணி". நிகழ்ச்சியின் மையப் பாடலாகக் கமாஸ் ராகத்தில் "சீதாபதே" என்ற தியாகராஜ கிருதியை ஆலாபனையுடன் தொடங்கி கல்பனா ஸ்வரங்களுடன் நேர்த்தியாகப் பாடினார். பாபநாசம் சிவனின் "பராத்பரா" வாசஸ்பதியிலும், அகஸ்தியரின் "ஸ்ரீசக்ரராஜ " ராகமாலிகையிலும் நன்கு மிளிர்ந்தன. ஸ்ரீ முத்தையா பாகவதர் இயற்றி ஸ்ரீ மதுரை மணி அய்யர் பிரபலப்படுத்திய இங்லீஷ் நோட்ஸை, விக்ரம் ரகுகுமாரின் வயலின் மற்றும் ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் மிருதங்கத்தின் பக்கபலத்துடன் சுவைபட இசைத்தார்.

இரண்டாம் பகுதியில் ஜனரஞ்சகமான பாடல்கள் இடம்பெற்றன. நவ்ரோஜில் பாபநாசம் சிவனின் "கிருஷ்ணா முகுந்தா", ஏகநாதரின் அபங், சுப்ரமண்ய பாரதியாரின் "ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்", "ஹரிவராசனம்" நெஞ்சை அள்ளின. டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தளவராளி தில்லானாவின் துரிதகதி கேட்க ஆனந்தம். செஞ்சுருட்டி ராகத் திருப்புகழுடன் நிகழ்ச்சியை நிறைவுசெய்தார். குரு லதா ஸ்ரீராம் சிரேயாவைப் பாராட்டி இசைப்பள்ளியின் சான்றிதழ் பதித்த வெள்ளித் தட்டை அளித்துப் பாராட்டினார்.

சுமதி கணேஷ்,
ப்ளெசன்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com