அரங்கேற்றம்: ஷ்ரியா & ஈஷா
ஜூன் 15, 2019 அன்று ஷ்ரியா நாராயணன் மற்றும் அவரது சகோதரி ஈஷா நாராயணன் இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர்களது குரு மீனாக்ஷி பாஸ்கர் சேக்ரமென்டோவில் 1997 முதல் 'பாஸ்கராஸ் அகாடமி' கலைப்பள்ளியை நடத்திவருகிறார்.

நிகழ்ச்சி புஷ்பாஞ்சலியில் தொடங்கியது. அலாரிப்பு, ஜதிஸ்வரம், ஹனுமான் துதி, கணபதி துதி, "போ சம்போ", அங்கயற்கண்ணி நவரசவர்ணம், "விஷமக்கார கண்ணன்", தசாவதாரம், தில்லானா எனப் பல்வேறு பகுதிகளையும் மிக நேர்த்தியாக மனதில் நிற்கும்படி வடித்துக் காட்டினார்கள். பாவமும் ஜதிகளும் உடல் அசைவுகளும் உணர்வை வெளிக்காட்டுதலும் இதைவிட மிஞ்ச முடியாது என்ற அளவில் துல்லியமாக வெளிப்பட்டன.

ஹனுமானின் புகழை விவரிக்கும் நாட்டியத்தில் ஷ்ரியா பார்த்தோரை வியப்பில் ஆழ்த்திவிட்டார். நவரசங்களையும் அதில் வழங்கினார். ஓர் அசைவும் இருவர்க்கும் பிறழவே இல்லை. எவ்வளவு நீண்டஆடலிலும் சர்வ சாதாரணமாகப் புன்னைகையுடன் ஆடியது மெச்சத் தகுந்தது. தசாவதாரத்தில் ஒவ்வோர் அவதாரத்தையும் கண்முன்னே நிறுத்தினார்கள். அதிலும் நரசிம்மர் இரணியனின் குடல் கிழித்த காட்சியில் மெய்சிலிர்த்தது.

பக்க வாத்தியக் கலைஞர்கள் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தது சொல்லமுடியாத சிறப்பு. திறமையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட இந்த இருவரும் நாட்டியத் தாரகைகளாக மிளிரப்போவது உறுதி.

ஸ்ரீமூலநாதன்,
ஆஸ்ப்ரேய் டிரைவ், ஃபோல்சம், கலிஃபோர்னியா

© TamilOnline.com