ஜூலை 14, 2019 அன்று அட்லாண்டாவின் (ஜார்ஜியா) டுலூத் உயர்நிலைப் பள்ளி அரங்கில், செல்வி அக்ஷரா ஜெயராமன், செல்வி ஹரிகா ஜனந்த்யாலா ஆகியோரின் ஒருங்கிணைந்த பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
அக்ஷரா, ஹரிகாவின் இளைய சகோதர்கள் அக்ஷய், ஆதித்யா வரவேற்புரை வழங்கினர். கடவுளர், குரு, மற்றும் சபையோரின் நல்லாசியை வேண்டும், ஹம்ஸத்வனி புஷ்பாஞ்சலியில் நிகழ்ச்சி தொடங்கியது. விநாயக கவுத்துவத்தில் தாளப் பரிமாணங்களும், அபிநயங்களும் மிகவும் ரசிக்கும்படி இருந்தன. கண்களில் பாவம், கழுத்து, கை, கால் அசைவுகள் என, சதுஸ்ர தாளத்தில் படிப்படியாக மலர்ந்த அலாரிப்பும், பின் வந்த ஜதியும், கோர்வையும் கலந்த வசந்தா ராக ஜதீஸ்வரமும் வண்ணமயம். அடுத்து, நடனத்தின் முக்கியப் பகுதியான வர்ணம். அதில் கூறப்படும் கதைகளைப் புரிந்துகொள்ளும் வண்ணம், அவற்றை முன்கூட்டியே நடன அசைவுகள், பாவங்கள் மூலம் விளக்கிக் காட்டியது, சிறப்பு. அக்ஷராவும் ஹரிகாவும் கமாஸ் ராக, ஆதிதாள வர்ணத்தில் தமது திறமையால் வர்ணத்துக்கே வர்ணம் தீட்டினார்கள்.
சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த, ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் "அசைந்தாடும் மயில்" என்ற பதத்தில், சந்தோஷம், அன்பு, சோகம் என்ற பல்வகை தெய்வீக உணர்ச்சிகளைக் காட்டிக் கரவொலி பெற்றார்கள். பிறகு வந்தவை, இரண்டு தனி நடனங்கள். "பிரம்மம் ஒகடே" என்ற அன்னமாச்சாரியாவின் கீர்த்தனையை ஹரிகாவும், "போ சம்போ" என்ற தயானந்த சரஸ்வதியின் கீர்த்தனையை அக்ஷராவும் விறுவிறுப்போ, சக்தியோ சற்றும் குறையாமல் ஆடினார்கள். அவர்களது நளினமான அசைவுகளும், பிரமிப்பூட்டும் நிற்கும் நிலைகளும் பார்வையாளர்களை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றன. நிகழ்ச்சியின் சிகரமாக வந்த தில்லானா, கதனகுதூகல ராகத்தில் சிறப்பாக அமைந்தது.
மங்களத்துடனும், பெற்றோர்கள் திரு ஆனந்த் - திருமதி காயத்ரி, திரு ஹரி - திருமதி மஞ்சு, குரு, சிஷ்யைகளின் உரைகளோடும் விழா இனிதே நிறைவுற்றது. செல்வி ஜெயாவும் செல்வி ஷ்ரேயாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
அக்ஷரா, ஹரிகாவின் குரு, திருமதி காயத்ரி வெங்கடாசலம். இவர் அக்ஷராவின் தாயாரும் ஆவார். இவரும், இவரது இரண்டு சகோதரிகளும் நாட்டியத்தில் தேர்ந்தவர்கள். இவர்களின் குரு, தாயார் திருமதி தாரா வெங்கடாசலம். மூன்று தலைமுறைகளுக்கு நம் பாரம்பரியக் கலையான பரதத்தை இவர்கள் கொண்டு வந்துள்ளது போற்றத்தக்கது. திருமதி காயத்ரியின் மற்றுமொரு குரு திருமதி மாதவி சந்திரசேகர். வழிகாட்டி டாக்டர் ஸ்ரீவித்யா சுந்தரேசன்.
அக்ஷராவும், ஹரிகாவும் ஐந்து வயதிலேயே நாட்டியம் பயிலத் தொடங்கி விட்டனர். தீவிர ஆர்வமும், பன்னிரண்டு வருடக் கடினப் பயிற்சியும், இவர்களை அரங்கேற்றத் தருணத்துக்கு அழைத்து வந்துள்ளன. அக்ஷராவும், ஹரிகாவும் நடனத்தைத் தவிர, முறையே வயலின், பியானோ பயின்று வருகிறார்கள். டென்னிஸிலும் வல்லவர்கள். ஜார்ஜியா டெக் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பில் சேரவிருக்கும் இவர்கள், தொடர்ந்து நடன அமைப்புகளில் சேர்ந்து, பரதக் கலையை முன்னெடுத்துச் செல்லவிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!
ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா |