அரங்கேற்றம்: சஞ்சனா சாய்கிருஷ்ணன்
ஜூலை 20, 2019 அன்று சாக்ரமென்டோ ஃபோல்சமில் உள்ள ஹாரிஸ் சென்டரில் சஞ்சனா சாய்கிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. கலாஷ்ரயா நடனப் பள்ளியின் நிறுவனர் குரு ஹேமாவதி சத்தியநாராயணனிடம் பல வருடங்களாக நாட்டியம் பயின்றுவருகிறார் சஞ்சனா.

புஷ்பாஞ்சலியில் ஆதி தாளம் கம்பீர நாட்டையில் "மூஷிகவாஹன" பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். பின்னர் மிஸ்ரசாபு தாள அலாரிப்பில் திருப்புகழுக்கும், அடுத்து ஸாவேரி ராகம் ரூபக தாளத்தில் ஜதிஸ்வரத்துக்கும் அருமையாக ஆடினார். லதாங்கியில் அமைந்த மதுரை முரளிதரனின் பதவர்ணம் "கொஞ்சும் சலங்கை" நுட்பமான சஞ்சாரிகளை உள்ளடக்கியது. விரைந்த, நுட்பமான ஜதிகளுடன் அமைந்த இந்த வர்ணத்தை 45 நிமிடம் நேர்த்தியாக ஆடிக் கரகோஷம் பெற்றார்.

இடைவேளைக்குப் பிறகு டாக்டர். பாலமுரளி கிருஷ்ணாவின் லவாங்கி ராக "ஓம்காரகாரிணி" பாடலில் மஹிஷனை அழித்த கோபம், பக்தர்களுக்கு அருளிய கருணை மற்றும் நவரசத்தையும் சஞ்சனா முகபாவங்களில் வெளிப்படுத்தியது அருமை. பார்த்தோரைக் கண்கலங்க வைத்த ஆனந்தபைரவி ராக "ஷீர்டிபுரீஸ்வரா சாயீசா" பாடலில் பொற்கொல்லரின் குழந்தை நெருப்பில் விழுந்ததும் தாயின் பரிதவிப்பு, ஷீரடி சாய்பாபாவின் அருள் ஆகியவற்றைத் தன் அபிநயத்தாலும் முகபாவத்தாலும் வெளிப்படுத்திய சஞ்சனாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடுத்தது ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் செஞ்சுருட்டி ராக, ஆதி தாளப் பாடல் "விஷமக்கார கண்ணன்". நிறைவாக, பூச்சி ஸ்ரீனிவாசா அய்யங்காரின் பரஸ் ராக தில்லானாவைக் கச்சிதமாக ஆடி, நாகை P. ஸ்ரீராம் மிருதங்கதுக்கு ஜுகல்பந்தியில் ஜதி தாளகட்டு ஆடியது கச்சிதம்.

அபர்ணா சர்மா (பாடல்), ஹேமாவதி சத்யநாராயணன் (நட்டுவாங்கம்), நாகை P. ஸ்ரீராம் (மிருதங்கம்), K. கணேசன் (வயலின்), சித்தூர் K. பதஞ்சலி (குழலிசை) ஆகியோர் அரங்கேற்றத்திற்கு சிறப்புச் சேர்த்தனர்.

சஞ்சனாவின் வேண்டுகோள்படி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் Sacramento Autistic Spectram and Special Needs Alliance என்ற தன்னார்வ நிறுவனத்துக்கு நன்கொடை அளித்தனர். நிகழ்ச்சியைப் பிரியா ராஜேஷ் மற்றும் விஷால் சாய்கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்கள். சஞ்சனாவை SAHANA (South Asia Heritage Arts in the North America) அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரம்யா ஸ்ரீனிவாஸ் மற்றும் சுதிர் குமார் வாழ்த்திப் பேசினர். பெற்றோர் ஸ்ரீவித்யா சாய்கிருஷ்ணன், சாய்கிருஷ்ணனை அனைவரும் பாராட்டினார்கள். இறுதியில் செல்வி.சஞ்சனா நிகழ்ச்சிக்கு வந்திருத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பத்மா மணியன்,
சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com