ஜூன் 2019 தென்றலில் திருக்குறள் முனுசாமியின் நேர்காணல் படித்தேன். சந்தர்ப்பவசத்தால் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பறித்துவிட்டது. இதை விதியின் சதி என்றுதான் கூறவேண்டும். இருப்பினும் மனம் தளராது வாழ்க்கையைத் தொடர்ந்த அந்த இணையர் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களது சீரிய வாழ்வினை வெளியிட்ட தென்றலைப் பாராட்டுகிறேன்.
புதுக்கோட்டை P. தியாகராஜன், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா
*****
சொல்லருவி முத்து சீனிவாசன் நான் படித்த ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கலாசாலையிலேயே படித்திருக்கிறார். என்னை வழிகாட்டி நடத்தி முனைவர் பட்டம் பெறவும் பின்னர் உதவிப் பேராசிரியர் பதவிபெறவும் உதவிய திரு ஆர். சுந்தரராஜ ஐயங்கார், சீனிவாசனுக்கும் நல்லுரை நல்கி மேம்படுத்தி இருக்கிறார். மிகவும் அருமையான நேர்காணல். 'ஏர் பிடித்த கை' கவிதை மிகவும் இனிமை. 'உயிர் தழைக்கும் மண்' கட்டுரை மிகவும் சுவையாக இருந்தது. "I am an adult; I need to be mentored not controlled; I need to be directed & not dictated" - Simlply Superb. 'அன்புள்ள சிநேகிதி' குழந்தைகளின் மனப்பாங்கை எப்படிப் புரிந்து கொண்டு நாம் நடக்கவேண்டும் என்று விளக்குகிறார். சதாசிவ பிரம்மேந்திரர் தொடர் மிகவும் அற்புதம். மகாபாரதம் கவர்ச்சிகரம். 'நீங்களுமா' சிறுகதை ஒரு பெரிய வெடிகுண்டைப் போட்டு, பல நிமிடங்கள் திக்குமுக்காடச் செய்துவிட்டது. 'பற்றும் பாசமும்' கதையில் பாபா இன்ப துன்பங்களின் காரணம் என்ன என்பதை மிகவும் தெளிவாக உணர்த்தி இருக்கிறார். மொத்தத்தில் தென்றல் ஜூன் 2019 இதழ் தேனில் ஊறிய பலாச்சுளை.
பேராசிரியர் சுப்பிரமணியம், சாரடோகா, கலிஃபோர்னியா
*****
ஜூலை இதழில் திருக்குறள் முனுசாமியின் நேர்காணல் வாழ்க்கையில் எந்த நிலையில் இருப்பவர்க்கும் திருக்குறளின் மூலம் உயர்வு நிச்சயம் என்பதை உணர்த்தியது. அவருடைய எளிமை மற்றும் பண்பாடு மனதைத் தொடுவதாக இருந்தது. ஒரு சிறைச்சாலையின் உண்மையான நடைமுறைகளை தென்றல் தன் பேட்டியில் வெளிக் கொணர்ந்தது மிகவும் சிறப்பு. திரைப்படச் சிறைகள் நம் மனங்களில் பதித்த தவறான சித்திரத்தை மாற்ற இந்த நேர்காணல் ஒரு தூண்டுகோல் என்பது தெளிவு.
வித்யாலட்சுமி, சிமி வேலி , கலிஃபோர்னியா |