என்ன ஆனாலும் இயல்பைக் கைவிடாதே
சன்யாசி ஒருவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். நீரில் ஒரு தேள் மிதந்து போவதைக் கண்டார். 'தேள் என்ற வடிவத்திலும் பெயரிலும் அடைபட்ட தெய்வம் இது' என்பதாக அவர் உணர்ந்தார். அதை அவர் காப்பாற்ற விரும்பினார். உள்ளங்கையில் எடுத்ததும் அது நறுக்கென்று கொட்டியது, கையை உதறினார். தேள் நீரில் விழுந்தது.

அவருக்கு வருத்தமாகிவிட்டது. அதை மீண்டும் கையில் எடுத்தார். இப்படி அவரை ஐந்தாறு முறை தேள் கொட்டியது. ஒருவழியாக இறுதியில் அவர் தனது கருணைச் செயலில் வெற்றிபெற்றார். தேள் தரையில் போய் விழுந்து உயிர்தப்பிச் சந்தோஷமாக ஓடிப்போனது. அந்த விடாமுயற்சியைக் கண்டவர்கள் அவரது மிதமிஞ்சிய கருணை என்ற 'முட்டாள்தனத்தை' எள்ளி நகையாடினார்கள்.

"தேள் எனக்கு ஒரு பாடம் கற்பித்தது. அதற்கு நான் நன்றிக்கடன் படுகிறேன்" என்றார் சன்யாசி. "அது என்ன?" என்றார்கள் மக்கள். "எது நடந்தாலும் உனது உள்ளார்ந்த இயல்பைக் கைவிடக்கூடாது என்பதுதான் அந்தப் பாடம். யாரானாலும், எப்போதும் கொட்டுவது தேளின் இயல்பு. மனிதனின் இயல்பு மெய்ஞ்ஞானம் அடைவது. மனிதனின் ஆதாரம் ஆனந்தம். அன்புதான் அவனைக் காக்கும் ரத்தவோட்டம். சாந்தி என்னும் கண்ணோட்டம் அவனை வழிநடத்தும். அதனால்தான் அவனை உபநிஷதங்கள் "அம்ருதஸ்ய புத்ர" என அழைக்கின்றன. அவன் அமரத்துவத்தின் புதல்வன். அவனுக்குப் பிறப்பில்லை, மரணமில்லை" என்றார் அவர்.

நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2018

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com