பொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட்டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான் புண்ணியோசனம். வாரத்திக்கி ரெண்டு வாட்டி அதுக்குத்தான் எல்லாரும் போன்ல பேசிக்கிட்டுருக்கோம். நீயென்ன பெருசு, நானென்ன சிறுசு, நீ சொல்லி நாங்கேக்கறதுனு வசவசன்னு கணேசண்ணன் மொதக் கெளம்பிப் போய் இப்ப ஊர்லதான் இருக்கு. "தோளுக்கு மேல நிமுந்த புள்ளக. ஆளுக்குப் பத்துப் பணம் சம்பாதிக்குதுக. அதான் அம்பட்டம் நானுன்னு குதிக்குதுக"ன்னு அம்மா எதுவும் பேசறதில்ல. ஆளுக்குக் கொஞ்சம் பணத்தப் போட்டு வீட்டக் கட்டியாச்சு. இதுல. பின்னாடி ஆருக்கு எவ்வளவு பங்குன்னு வீட்டுக்காரிக கொடச்சல் வேற எல்லாருக்கும்.
போன வாரந்தான் வீட்டுக்கு முன்னாடி வெக்கறதுக்கு கிரானைட்டு கல்லு போட்டோ எடுத்து அண்ணன் அனுப்புச்சு. 'அப்பா வாழும் குடில்'ன்னு. அதப் பாத்ததுக்குப் பொறகு கொஞ்சம் சலசலப்புக் கொறஞ்சிருக்கு. யாரு யாரைக் கூப்புடணம்ணு பேச்சு வந்தப்போ மறுபடியும் சலசலப்பு கூடிப்போச்சு. "எம் பொறந்தது எதயும் கூப்புட வேணாம். ஒங்கொப்பன் பக்கம் யாரு யாரைக் கூப்பிட நெனக்கிறீகளோ கூப்புட்டுக்குங்க. வேணாங்கல. அவனவன் கட்டுன பக்கம் குடுத்த பக்கம் கூப்புட்டுக்குங்க" அம்மா சொல்லிப்புடுச்சு. நானும் அண்ணனுந்தான் கொள்ளுக்காடு மாமனக் கூப்புடணும்னு ஒத்தக்கால்ல நிக்கறோம். தம்பிக ரெண்டும் "அந்தாளு செஞ்ச வேலக்கி அவரப் படியேத்தக் கூடாது"ன்னு மேலயுங் கீழயும் குதிச்சானுவ. எப்படியோ, அப்படியும் இப்படியும் இழுத்துப்புடுச்சு கொள்ளுக்காடு மாமனக் கூப்புட முடிவு செஞ்சாச்சு.
தாத்தனுக்கு மூணு வேலி மஞ்சக்காடு, வாய்க்காலுக்குப் பக்கத்துல. ஏழு வேலி மேட்டுக்காடும் இருந்துச்சு. நல்லாத் தண்ணி பாஞ்சா மொத மூணு வேலிக்குத் தண்ணி எட்டும். இல்லன்னா எட்டுன அளவுக்குத்தான் தண்ணிப் பாசனம். அப்பறம் எல்லாமே வானம் பாத்துத்தான். அப்பன் கூடப்பொறந்தது மூத்தது அத்த ஒண்ணு. அத்தயத்தான் கொள்ளுக்காட்டு மாமனுக்குக் குடுத்தது. அப்பா டவுனுக்கு வேலக்கின்னு வந்த பொறவு வெவசாயம் எல்லாமே மாமன் பொறுப்புத்தான். தாத்தனும் பாட்டியும் சாகறவரைக்கும் அத்த மாமன் கிட்டத்தான் இருந்தாங்க. மாமனுக்கு அத்தயக் கட்டிக்குடுத்ததே ஒரு கத.
நாப்பது நாப்பத்தஞ்சு வருசத்துக்கு முந்தி தம்புராங்கரட்டுல ஒரு கெடா வெட்டு. வெள்ளப்புளியாமரம் நாட்டாம வீட்டுக்காரங்க கெடா வெட்டு. தாத்தன் கிட்டதான் கெடாய்க்கு சொல்லி அது ஒரு ரெண்டு மூணு வருசம் தாத்தன் கெடையில கொள்ளுக்காட்டுல இருந்துச்சு. ஒரு ஞாயித்துக்கெழம. கெடா வெட்டு அன்னிக்கு. தாத்தன் கெடாயப் புடிச்சுக்கிட்டு தம்புராங்கரட்டுக்குப் போச்சு. ஊர்ல இருந்து முக்கோணம் வந்து மேல்கரட்டு வழியா தம்புராங்கரடு ஒரு ஏழு மைலு இருக்கும். கெடாயக் கொண்டுக்கிட்டு வரும்போது கருப்பராயன் சொனைக்கிப் பக்கத்துல கெடாய் அத்துக்கிட்டு ஓடிடுச்சு. கெடா வெட்டு விசேஷமும் நின்னு போச்சு. கறிச்சோத்துக்கு வந்த ஊரு முச்சூடும் தாத்தனைக் கரிச்சிக்கிட்டே போயிருக்கு. தாத்தனுக்கு கெடாயத் தொலச்ச வெசனத்தக்காட்டிலும் ஊருக் கரிச்சலும் சாமி குத்தம் நேந்து போச்சேன்னும் குளுரு காச்சல் வந்திருச்சு.
பொஞ்சாதியும் நானும் ரெண்டு. புள்ளக ரெண்டு. கெடாயும் ஒண்ணு. காப்பத்துப்பா கருப்பராயான்னு. அஞ்சு கூழாங்கல்ல வேட்டியக்கிழிச்சு முடிஞ்சு கருப்பராயன் கரட்டு மரத்துல கட்டிட்டு வந்துடுச்சு. அத்துக்கிட்டுப் போன கெடாயி மானுப்பட்டி மந்தயிலே தனியாத் திரிஞ்சுகிட்டு இருந்திருக்கு. நேந்து விட்ட கெடாயிக்கு நெத்தியெல்லாம் மஞ்ச தடவியிருந்ததெப் பாத்து கரட்டுலெயும் ஊருக்குள்ளாறயும் வெசாரிச்சுக்கிட்டு மாமன்தான் கொள்ளுக்காட்டுல கொண்டாந்து தாத்தன்கிட்ட உட்டுச்சு. தாத்தனுக்கு எல்லாங் குளுந்து போச்சு. அந்த வருசந்தான் பெரிய வெள்ளாம. அந்த வருசந்தான் வாய்க்காமேடு மூணு வேலி மஞ்சக்காடும் வாங்குச்சு. மாமனுக்கு அப்பன் ஆத்தா இல்ல. மானுப்பட்டியில கெடைச் சோலிதான் பாத்துக்கிட்டு இருந்துச்சு. தாத்தன் அப்புடி இப்புடின்னு பாத்து. அத்தக்கி மூல நட்சத்திரம். அப்பன் ஆத்தா இல்லாத நல்ல புள்ளன்னு. மாமனுக்கு அத்தயக் கட்டிக்குடுத்து கொள்ளுக்காட்டுல குடிவச்சிச்சு. ரெண்டு புள்ளங்களும் பெறந்துச்சு. மூத்தவ செம்பகம். எளையவ மலரு.
மாமன் அம்புட்டு வெள்ளந்தி. நல்ல கருப்பு.தெளிஞ்ச மொகம். எப்பவுமே தோள்ல ஒரு துண்டு. டயரு செருப்பு. தூக்கிச் சீவுன தலமுடி. நெத்திக்கு மேல பெரிய புருடு. அத்த கொஞ்சம் நல்ல சூதானம். தாத்தன் இருக்கற வரைக்கும் குடும்பத்துக்குள்ள காசு பணம். மேடு பள்ளம் எதுவும் பெருசாத் தோணல.மூணு பஸ் மாறி ஒவ்வொரு பொங்கலுக்கும் கொள்ளுக்காட்டுக்குப் போய் நாலஞ்சு நாள் இருப்போம். பொங்கலப் பாத்துட்டு ஏதாவதொரு சண்டயோட ஊரு வந்து சேருவோம். ஆனா நாங்க ஊருல இருக்கறப்ப மாமன் ஆலாப் பறக்கும். காலு தரயில நிக்காது. சேவல அடிச்சு கறிச்சோறு போடாம அனுப்பாது. காசு பணம் கொஞ்சம் பொரண்டா. கொடலும் தலயும் கறிக்கொழம்பும் இருக்கும். மேகாட்டுல வெளஞ்ச கொள்ளும் சோளமும் சிமிட்டிப் பையில எங்களுக்குக் கட்டி வெச்சிரும், அத்தகிட்ட அவ்வளவு மல்லுக்கட்டி. நெலக்கடலயோ. கொத்தமல்லியோ. தக்காளியோ. மொளகாயோ. எது வெளஞ்சாலும் ரெண்டு மூணு மஞ்சப்பையிலே ஊருக்குக் கொண்டாரும். கூடவே ஊரு செட்டியார் கட தேன் முட்டாயும் அரிசி முறுக்கும் கொண்டாரும். காட்டுல வர்ற வருமானம் எதுக்கு மிஞ்சும். தாத்தனையும் பாட்டியையும் பாத்து, ரெண்டு புள்ளங்கள வளத்து, ஊருல சீரு செனத்தி பண்ணி, பெருசா என்ன மிஞ்சிப்போகும்? "ஆனா நெலத்துல பத்து பைசா நம்ம புள்ளங்கிளுக்கு இல்லயே"ன்னு அம்மா பொலம்பும். இதுல ஒரு கெணத்த வெட்டிப் பாக்கலாம்னு போய் மஞ்சக்காட்டு மேல ஒரு முப்பதாயிரம் ஒத்தி ஆகிப் போச்சு. தண்ணியும் பெருசாக் கூடல.
"அண்ணனும் மதினியும் காசு பணத்தக் கண்ணுல காட்ட மாட்டீக. கெழவனும் கெழவியும் ஒங்க கைக்கு அடக்கமாப் போச்சுக. பெத்த புள்ளையும் ஊருக்குத் தள்ளிப் போச்சு. அதான் உங்களுக்கெல்லாம் நல்ல தெனவாப்போச்சு." அம்மாவின் வெறுமையும் ஆற்றாமையும் வார்த்தைகளாய் வெடிக்கும். ஆனாலும் மாமன் குமிஞ்சுகிட்டே எதுவும் பேசாது. போட்டதச் சாப்பிட்டு பேசாம கெளம்பும். பெரியண்ணன் கணேசன் பாலிடெக்னிக்கு சேரும்போது நெலத்து ஒத்திக்கி மேல நாலாயிரம் வாங்கி அத்தக்கித் தெரியாம மாமன் கொண்டாந்து அப்பன்கிட்ட குடுத்துச்சு. "நீயும் நெலத்துக்கு உரும உள்ளவந்தான்யா. உம்புள்ளகளுக்கும் உருத்து இருக்கு. நல்ல வெளமானம் இருந்தா நானே குடுத்துப்புடுவேன். வாயிக்கும் வயித்துக்கும் செரியா இருக்கு. பெருசுக்கு ஆஸ்பத்திரி, மருந்து செலவு. செம்பகமும் சமஞ்சு நிக்கா. சம்சாரி, நம்ம பொழப்ப நெனச்சா கண்ணக்கட்டுதய்யா. ஆனா ஒண்ணுய்யா, பெரியவன் கணேசனுக்கும் செம்பகத்துக்கும் முடுச்சுப் போட்டுறனும்யா. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆச்சுன்னா எல்லாம் மேவிப் போகும். தம்புராங் கரட்டுலதான் வருசா வருசம் பன்னெண்டு கல்லு கட்டிகிட்டு இருக்கேன். கெடக்கட்டும். எல்லாம் நல்லா நடக்கும்யா." பாலிடெக்னிக் கேண்டீனில் உளுந்து வடயப் பிச்சுக் குடுத்து டீயைக் குடித்துக்கொண்டே சொன்னார்.
தாத்தனுக்கு முடியாமப் போனபோதுதான் நெலத்தப் பிரிச்சிகிடலாம்னு பேச்சு வந்துச்சு. தாத்தன் பாட்டியோட நகைகள வித்து, பத்தாததப் போட்டு ஒத்தியில இருந்ததெ மீட்டு அப்பாவ வச்சுக்கச் சொல்லுச்சு. கொள்ளுக்காட்ட மாமனுக்கும் அத்தக்கின்னும் எழுதிக்கச் சொல்லுச்சு. அப்ப மாமன் பேசுன பேச்சுத்தான் இன்னிக்கும் நட்டுப்போச்சு. "அப்புனு," மாமன் தாத்தனை அப்படித்தான் கூப்பிடும், "வாய்க்கா மஞ்சக்காட்டை செம்பகத்துக்கும் பெரியவன் கணேசனுக்கும் சேத்து எழுதறதா இருந்தாத்தேன் ஒப்புக்குவேன். நானே உழுதுட்டு அவுக கல்யாணத்தப்ப எழுதிக் குடுத்துடறேன். வேணும்னா இப்ப நானே மஞ்சக்காட்டை மீட்டுக்கறேன்." இத மாமனே சொல்லுச்சா, இல்ல அத்த சொல்லி சொல்லுச்சா, தெரியாது. ஆனா மாமனுக்கு அவ்வளவு வெவரம் இல்ல, அது நல்லாத் தெரியும். இதக் கேட்டதும் அம்மா ஆத்திரத்துல ஆடு ஆடுன்னு ஆடி விட்டுட்டா. அப்படி இப்படின்னு பஞ்சாயம் பேசி எம்பதாயிரம் ரூவாய்க்கு நெலத்தெ மாமனுக்கும் அத்தக்கிமே குடுத்துட்டோம். அத்த அவளோட நக நட்டு, சிறுவாடு, சீட்டுப்பணம் எல்லாஞ் சேத்து தாத்தன் செத்த மறுவாரமே பணத்தக் குடுத்துட்டா. எங்களெ தாத்தனுக்கு நெய்ப்பந்தம் புடிக்க விடல. மாமந்தான் மல்லுக்கட்டி எங்களையும் நெய்ப்பந்தம் புடிக்க வச்சுச்சு. அன்னிக்கு டவுனு அக்ரகாரத்துல வாங்குன வீட்டுக்குத்தான் இப்ப புண்ணியோசனம்.
கணேசண்ணனுக்கும் ஆத்தூர்ல மலர்விழி அண்ணியப் பொண்ணு கட்டுன பொறகு சுத்தமா இருவது வருசம் கொள்ளுக்காட்டுக்குப் போக்குவரத்து நின்னு போச்சு. ஆளுக்கொரு வேல அங்கிட்டு இங்கிட்டுன்னு ஊரும் ரொம்ப தொலவு ஆயிருச்சு. ஆருமே கொள்ளுக்காட்டுக்குப் போய்க் கூப்புடறதுக்கு தயாரா இல்ல. எல்லாரும் கழண்டுக்கிட்டாங்க.
நாந்தான் கொள்ளுக்காடு போயிருந்தேன். மாமந்தான் இருந்துச்சு. பாத்து கண்ணுல சடசடன்னு தண்ணி. கடையிலே கலரு வாங்கியாந்துச்சு. "அத்த, மலரு ஊருக்குப் போயிருக்குய்யா. ரெண்டாவது பையன். பொறந்து மூணு மாசம் ஆவுது.அங்கதான் இருக்கா. நல்ல வேளய்யா இன்னிக்கு வந்த. நாளக்கி மில்லு லீவு. நானும் ஊருக்குப் போயிருப்பேன்." நான் பத்திரிகையக் குடுத்தேன். "என்னய்யா விசேஷம்? கண்ணு வெளிச்சம் கம்மிய்யா." நானே மெல்லச் சொன்னேன். "சந்தோசம்யா. கண்டிப்பா வர்றன்யா. இருய்யா"ன்னு உள்ள போயிட்டு வெளிய வந்தாரு. "வேணாம்யா. படிச்ச புள்ள நீ எதுக்கு சொமந்துகிட்டு. நானே வார்றப்ப கொண்டாறேன்." ரெண்டு மஞ்சப்பை நெறய கொய்யாப் பழம் போட்டுக் குடுத்தாரு. வந்து பஸ் ஏத்திவிட்டாரு. வர்ற வழிலே அவராவே பேசிக்கிட்டு வந்தாரு. "இப்புடி ஊரு தள்ளிப்போய், வராமப் புடிக்காம இருந்திட்டீங்களேய்யா. மஞ்சக்காட்டை மலரு கல்யாணத்தப்ப குடுத்தட்டன்யா. கொள்ளுக்காட்டுலயும் பாதிய மில்லுக்குக் குடுத்தாச்சு. அங்கதான் பொழுது போகணும்னு வாட்ச்மேனாப் போயிக்கிட்டு இருக்கேன். செரி, எதெது எப்புடி நடக்கணுமோ அப்புடித்தான நடக்கும். கரட்டுராயன் புண்ணியத்துல புள்ள குட்டிகளோட நீங்கெல்லாம் நல்லா இருக்கணும். பாத்துப் போயிட்டு வாய்யா"ன்னு பஸ் ஏத்தி விட்டாரு. நான் வீட்டுக்கு வந்து சொன்னேன், "யாரும் வருவாங்கன்னு தோணல."
புண்ணியோசனத்துக்கு ரெண்டு நாளக்கி முன்னமே மொதப் பஸ்சுக்கு மாமன் வந்துருச்சு. ரெண்டு கோணிப்பை நெறய கொள்ளும் சோளமும் ஈரத்துணில கட்டி, ரெண்டு படி மல்லிப்பூ, மருதாஞ்சி இலை. தெப்பக்குளம் மாரியம்மாள் ஸ்வீட்ஸ்லேர்ந்து பலகாரம் எல்லாம் கொண்டாந்துச்சு. மாமன் அதே வெள்ளந்தியா எல்லாரையும் விசாரிச்சுது. "ஒங்க அப்பன் இருந்திருக்கணும்யா. தோளு நிமிந்து புள்ளக நின்னு செஞ்சதப் பாக்க அவனுக்குக் குடுத்து வெக்கல. வீடு அருமையா இருக்குய்யா. நாம நெனச்சதெல்லாமா நடக்குது!" கண்ணுல சடசடன்னு தண்ணி. மத்தியானம் கடலைக் கொழம்பு அவ்வளவு சந்தோசமா அப்புடி சாப்பிட்டாரு. எவ்வளவு சொல்லியும் விசேசத்துக்கு இருக்கல. கெளம்பிட்டாரு. போறப்ப அம்மாவக் கூப்பிட்டு"பெரியவன் கணேசன் கல்யாணத்துக்காவது கூப்புடுவீங்கன்னு இருந்தேன். கூப்புடாம விட்டுட்டீங்களேத்தா. இப்படி வராமப் போகாம ஆயிப்போச்சே." கண்ணுல மறுபடியும் தண்ணி. சின்னதா மடிச்ச மஞ்சப்பைய அம்மாகிட்டக் குடுத்தாரு. "மருமகளுககிட்டயே குடுங்க"ன்னு அம்மா சொல்லிருச்சு.
நாந்தான் பஸ் ஸ்டாண்டுக்கு கூட மாமன விடப்போனேன். மனசு கேக்காம ஐநூறு ரூவாய மாமன்கிட்ட குடுத்தேன். "எதுக்குய்யா பணம்? இருக்குய்யா. வேணாம்யா"ன்னு எவ்வளவு சொல்லியும் வாங்கமாட்டேன்னுடுச்சு. டீ குடிச்சுட்டு பஸ்சுக்கு நின்னுட்டு இருக்கும்போதுதான் சொல்லுச்சு. "அய்யா சோறும் கொழம்பும் அவ்வளவு அருமைய்யா. அரிசி எம்புட்டு சன்னம்யா. அரிசி என்னய்யா கிலோ வெல?" அதே வெள்ளந்தி கொள்ளுக்காட்டு மாமன்.
பீரோவில் இன்னும் பிரித்துப் பார்க்காமல் வைத்திருந்த சின்ன மஞ்சப்பையில் வெத்தல, பாக்கு, மஞ்சக்கெழங்கு, நூத்தி ஒரு ரூவா, கணேசன் மலர்விழிக்குன்னு போட்டு. ரெண்டு நாளக்கி முன்ன வட்டி கட்டித் திருப்பியிருந்த மோதிர ரசீதில் அவசரத்தில் மடிச்சு வெச்ச ஒரு பழைய அரை சவரன் தங்க மோதிரமும் இருந்தது.
ரமேஷ் கோபாலகிருஷ்ணன், ஃபீனிக்ஸ், அரிசோனா |