ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-10)
அருணின் கோபம் கீதாவிற்குப் புதிதல்ல. தான் ஆப்பிள் விஷயத்தைத் தொடர்ந்து முயல்வதை அம்மா விரும்பவில்லை என்பதில் அருணுக்குக் கோபம். அருண் அடித்தளம்வரை சென்று அறிய விரும்பினான். உண்மையில் டேவிட் ராப்ளேயை மறுபடியும் ஒரு சிக்கலில் மாட்டிவிட அருணுக்கு ஒரு ரகசிய ஆசை இருந்ததாகத் தோன்றியது. ஹோர்ஷியானா நிறுவனத்தோடு மோதச் சந்தர்ப்பம் பார்த்தமாதிரி இருந்தது.

"கீதா, நான் போய் அவனைச் சமாதானப் படுத்துகிறேன்" என்று பாலா வீட்டின் பின்புறம் போகத் தயாரானார். தன்னால்தான் இந்த ரகளை என்ற குற்ற உணர்வு அவருக்கு இருந்தது. கீதாவுக்கு அது புரிந்தது.

பாலா போகும்போது கீதா, "ரொம்ப தாங்க்ஸ் அண்ணி, நீங்க போய்ப் பேசினால் அவனுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்" என்றார். பாலா அனுவையும் அரவிந்தையும் அழைக்க அவர்கள் வீட்டின் பின்புறத்திலிருந்து ஓடிவந்தார்கள். "நீங்க மாடிக்குப் போய் குளிச்சுட்டு வாங்க" என்றார் பாலா. அவர்கள் மாடிப்பக்கம் சென்றனர். கீதா சமையல் வேலையைத் தொடர, பாலா அருணிடம் பேச வீட்டின் பின்புறம் போனார்.

"ரமேஷ், அஷோக், நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் அந்தப் பக்கம் போங்க. எனக்கு அருணோட தனியாப் பேசணும்" என்று பாலா வீட்டின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த அப்பாக்கள் இருவரையும் பார்த்துச் சொன்னார்.

பாலா மெதுவாக அருண் அருகே சென்றார். அவன் காலை உதைத்த படி, கன்னாபின்னா என்று கத்திக்கொண்டு இருந்தான். நடுநடுவே வானத்தைப் பார்த்து கத்தினான். பாலாவைப் பார்த்ததும் "அத்தை, என்கிட்ட வராதீங்க. எனக்கு கெட்ட கோபம் வரும்" என்று கத்தினான். அம்மா சமையலறை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் கவனித்து, இன்னும் கூச்சல் போட்டான்.

பாலா ஒன்றும் பேசவில்லை. அவரும் இரு குழந்தைகளின் தாய் அல்லவா. அவருக்குத் தெரியாதா எப்படி அருணைச் சமாளிக்க வேண்டும் என்று. அருணருகே மெதுவாக நெருங்கினார். அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார். "மன்னிச்சுடுடா செல்லம் அத்தைய, என்னால்தானே உனக்கு இந்த சிரமம்."

அருண் நெகிழ்ந்து போனான். ஒன்றுமே பேசவில்லை. தான் நடந்து கொண்டதுக்கும் பாலா அத்தைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அதை எப்படிச் சொல்வது என்று யோசித்தான். "அத்தை ப்ளீஸ், மன்னிப்பு கேக்காதீங்க. இந்த மாதிரி நான் கோபப்படறது சகஜம். என்னுடைய தவறுதான். இந்த உலகமே நான் சொல்றபடி நடக்கணும்னு நினைக்கிற திமிரான எண்ணம் எனக்கு" என்று வருத்தப்பட்டான்.

அருணின் பதில் ஒரு பெரிய ஞானியைப் போன்று இருந்தது. பாலா பிரமித்துப் போனார். தான் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அருணை இன்னோரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அருணும் வந்து உட்கார்ந்தான். சமையல் அறைக்குள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கீதாவிற்கு அப்பாடா என்று நிம்மதி ஏற்ப்பட்டது.

அருண் பாலா அத்தையிடம் பேச ஆரம்பித்தான். "அத்தை, எப்ப நம்ம பக்கரூ உடல்நலம் இல்லாமல் ஒரு தடவை கஷ்டப்பட்டானோ, அப்போதிலிருந்தே அந்தப்பய டேவிட் ராப்ளேவுடன் எனக்கு ஒரு பகைமாதிரி ஆயிடுச்சு. அதனால், எந்தக் கெட்ட விஷயத்தை இந்த ஊருல கேட்டாலும், அந்த ஆளையே சந்தேகிக்கிறேன். அதான், இந்த ஆப்பிள் மெழுகு சமாச்சாரத்துக்கும் இப்படி கோபம் வருது."

அருண் ஓவென்று அழுதான். பாலா செல்லமாக அவன் முதுகில் தட்டினார். ஒரு தாயின் ஆறுதல் அவனுக்குத் தேவையாக இருந்தது. பாலா ஹோர்ஷியானா அதிபருடன் அருண் போட்ட சண்டைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். பாலா தனக்கு இந்த வயதிலும்கூட அருண் அளவுக்குச் சமூக உணர்வு இல்லையே என்று உள்ளூர வெட்கப்பட்டார்.

"சாரி அத்தை, பாவம் அனுவுக்கும் அரவிந்துக்கும் என்னால கஷ்டம். நான் திரும்பவும் இப்படி நடக்கமாட்டேன்" என்று மன்னிப்புக் கேட்டான். பாலா புன்னகைத்தார். அவனும் அழுகையை நிறுத்திவிட்டுச் சிரித்தான். காலடிச் சத்தம் கேட்டு திரும்பினார்கள். வந்ததது கீதாதான். "அருண், மேலே மாடி ரூம் ஜன்னலைப் பார். பக்கரூ முதற்கொண்டு எல்லோரும் இங்கேயே பார்த்திட்டு இருக்காங்க" என்று கையைக் காட்டினார்.

பாலாவும் அருணோடு சேர்ந்து மேல் நோக்கிப் பார்த்தார். "அடப் பாருடா, சினிமா பார்க்கிற மாதிரியில்ல பாக்கறாங்க, பக்கரூகூட" என்று சொல்லிச் சிரித்தார் பாலா. "கீதா, நாம இதுக்கு மேல ஏதாவது செய்யணுமா?"

"எதைப்பத்தி?" என்று கீதா புரியாமல் கேட்டார். "நீ உன் கான்டாக்ட்ஸை வைத்து நம்ம ஆப்பிள்பத்தின சந்தேகத்துக்கு விடை கிடைக்குமான்னு கண்டு பிடிக்கணும்னு தோணுது" என்று பாலா சொன்னதுதான் தாமதம், அருணின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. அத்தையைக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான். அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை.

"ஆமாம் அம்மா, நீங்க உங்க சக பணியாளர்கள் கிட்ட இந்த ஆப்பிளைப் பத்தி விசாரிக்க முடியுமா?" அருண் ஆவலுடன் கேட்டான். "அப்படியே, நான் நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட் மேனேஜரிடம் பேசி அவர் என்ன நினைக்கிறார் என்று கேக்கப் போறேன். கடைக்கு வரவங்ககிட்ட ஆப்பிளின் பளபளப்பு பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு கேக்கப்போறேன்."

கீதா தயங்கினார். அருணிடம் நேரடியாக ஏதும் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. டேவிட் ராப்ளேவுடன் இன்னொரு போர் உண்டாவதற்கான சாத்தியம் ஏற்படப் போவதை நினைத்து கீதா கவலைப்பட்டார். "சரி, நம்மால் ஆனதை முயற்சி பண்ணுவோம். ரொம்பவும் வற்புறுத்தாதே" என்றார் கீதா.

"ரொம்ப நன்றி அம்மா" என்று அருண் துள்ளிக் குதித்து ஓடினான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்

© TamilOnline.com