தோற்றம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் பெரியோர். காரணம், நாம் அதுபற்றிச் சரியாக அறிய முடியாது என்பது மட்டுமல்ல; அறிந்தால் 'இவ்வளவுதானா' என்ற அலட்சியம் தோன்றக்கூடும் என்பதனாலும்தான். நதிகளின் பிரம்மாண்டத்தையும், ரிஷிகளின் அளவற்ற ஆற்றலையும் அறிந்தபின், தொடக்கத்தை ஆராயப் புகுந்தால் சில சமயம் ஏமாற்றம் மிஞ்சலாம். பிரம்மரிஷி என்றும் ராஜரிஷி என்றும் போற்றப்படும் விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் ஆசாபாசமுள்ளவராக, ஒரு நாட்டின் மன்னராக இருந்தவர். ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் வேடனாக, வழிப்பறி செய்பவனாக இருந்தவர். தமிழ்நாடு, கர்நாடகா என்று பரந்து சீறிப்பாயும் காவிரி சிறிய ஊற்று ஒன்றிலிருந்துதான் தோன்றுகிறது. மகான்கள், சித்தர்கள், ஞானிகளின் வாழ்வும் இப்படித்தான். இன்ன தன்மை கொண்டவர்கள் என்று அவர்களை நம்மால் நிர்ணயிக்க இயலாதவாறே அவகளில் பலரின் வாழ்க்கை அமைந்துள்ளது. அப்படிப்பட்ட மகா சித்தர்களுள் ஒருவர் அன்னை ஸ்ரீ மாயம்மா.
மாயம்மா கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் யோகினியாய் உலவி வந்தவர். இவர் எங்கு, எப்போது பிறந்தார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இவரை வங்காளி என்றும், நேபாளி என்றும் சிலர் கூறுகின்றனர். வட இந்தியாவிலிருந்து கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்த ஒரு குழுவில் இருந்தவர் என்றும், இவரை விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டதாகவும் செவிவழிச் செய்தி சொல்கிறது. காசியிலும், இமயத்திலும் பல ஆண்டுகள் தவம் செய்துவிட்டு, இந்தியாவின் மறுகோடியான கன்னியாகுமரிக்குத் தவமியற்ற வந்த சித்தர் என்ற கருத்தும் உண்டு. இவ்வாறு மாயம்மாவின் வருகைபற்றிப் பலவாறாகச் சொல்லப்பட்டாலும், அவர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்பது மட்டும் உண்மை. பெரும்பாலும் பேசாது மௌன யோகினியாய் வாழ்ந்த மாயம்மா எப்போதாவது மட்டும் சில வார்த்தைகள் பேசுவதுண்டு. அது பெரும்பாலும் ஹிந்தி அல்லது பிறரால் புரிந்து கொள்ள முடியாத மொழியாக இருக்கும். சில சமயம் சைகை மொழியிலும் பக்தர்களுடன் உரையாடுவதுண்டு.
சரியாக வாரப்படாத தலை, அழுக்கான ஆடை, வரி வரியாகச் சுருக்கம் விழுந்த முகம் என வித்தியாசமான தோற்றத்தில் கன்னியாகுமரி கடற்கரையை வலம் வந்த மாயம்மாவை, ஆரம்பத்தில் சாதாரண யாசகர்களுள் ஒருவராகவே மக்கள் கருதிவந்தனர். ஆனால், பலரும் அறியும்படி நடந்த ஓர் அற்புதச் சம்பவம் அவரை இனம் காட்டியது.
அம்மா செய்த அற்புதம் ஒரு சமயம் கன்னியாகுமரிக்கு பக்தர்கள் சிலர் பேருந்தில் சுற்றுலா வந்திருந்தனர். வேகமாக வந்த பேருந்து சாலையில் படுத்திருந்த நாயின்மீது ஏறி இறங்கியது. அது மிகச் சரியாக நாயின் வயிற்றில் ஏறி இறங்கியதால், அதன் குடல் வெளியே வந்தது. நாய் நகர முடியாமல் ஊளையிட்டது. அதற்கு உயிர்ப் போராட்டம். மக்களோ ஏதும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததனர்.
அப்போது அங்கே வந்தார் அன்னை மாயம்மா. அதனருகில் சென்று அமர்ந்தார். அப்படியே தூக்கித் தனது மடியில் வைத்துக்கொண்டார். வெளியே வந்திருந்த குடலை நாயின் வயிற்றுக்குள் தள்ளி, தான் வைத்திருந்த வைக்கோலால் அதைத் தைத்தார். தன்னிடமிருந்த பழைய துணிகளிலிருந்து ஒன்றைக் கிழித்து காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். அதன் உடல் முழுவதும் தடவி விட்டவாறே அதன் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்கள் சென்றன. மாயம்மாவின் மடியில் இருந்து துள்ளி எழுந்தது நாய். தன் உடலைச் சிலிர்த்தது. சிறிது நேரம் வாலை ஆட்டிக்கொண்டு அங்கே நின்றது. பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த போதே வேகமாக அவ்விடம் விட்டு ஓடி மறைந்தது.
பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து மாயம்மாவின் காலில் விழுந்தனர். அவரது நோய் தீர்க்கும் ஆற்றலையும், அவர் மிகப்பெரிய சித்தர் என்பதையும் அறிந்து கொண்டனர். அதுமுதல் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அவரை அணுக ஆரம்பித்தனர். நாளடைவில் அம்மாவின் அருளால் பலரது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் வந்தன. அன்னை மாயம்மாவின் புகழ் பரவ ஆரம்பித்தது.
அளவற்ற அற்புதங்கள் ஒரு சமயம் மாயம்மா பகவதி கோயிலின் வாயிலில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு மனிதன் வந்தான். திடீரென கீழே விழுந்து புரண்ட அவன், "ஐயோ அம்மா வயிறு வலிக்கிறதே, தாள முடியவில்லையே!" என்று கதறினான்.
உடனே எழுந்துகொண்ட மாயம்மா, அவனை எழுப்பி அமர வைத்து, "இந்தா, இதைச் சாப்பிடு" என்று தான் உண்டுகொண்டிருந்த உணவின் மீதத்தை அவனுக்கு வழங்கினார். அவனும் பக்தியோடு அதனை வாங்கி உண்டான். சற்று நேரத்தில் அவன் வயிற்றுவலி குணமானது. நாளடைவில் அவன் முற்றிலும் குணமானது மட்டுமின்றி வாழ்க்கையிலும் உயர்வடைந்தான். இதுபோன்று அம்மா செய்திருக்கும் அற்புதங்கள் அநேகம். பலரது கர்மவினைகளைத் தீர்த்திருக்கிறார். உடலைத் துண்டு துண்டாகப் பிரித்துப் பின் மீண்டும் சேர்க்கும் நவகண்ட யோகம் செய்திருக்கிறார். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் காட்சி அளித்ததாகவும் தகவல் உண்டு. கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மாயம்மாவைப் பார்த்ததாகச் சொன்னதுண்டு. அதே நேரத்தில் அம்மா கடற்கரையிலோ, கடை வீதியிலோ இருந்ததும் உண்டு. அவர் செய்த அற்புதங்கள் அளவில்லாதவை.
அம்மா செய்த தவம் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ள விரும்பாத அன்னை மாயம்மா எப்போதும் நாய்கள் சூழவே வலம் வருவார். பெரும்பாலும் கடற்கரைப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்த அவர், கடைவீதிப் பக்கமும் போவதுண்டு. அவரை வரவேற்று அவருக்குத் தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை அளிப்பது பல கடைக்காரர்களின் வழக்கம். அப்படி அளிப்பவர்களின் கடைகளில் அன்று நிறைய வியாபாரம் ஆகும் என்பது நம்பிக்கை. பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகள் கொண்டவர்கள் மாயம்மாவைத் தங்கள் கடைக்கோ, இல்லத்திற்கோ எழுந்தருளச் செய்து உணவு படைத்து வணங்குவர். அதிசயமாக சில நாட்களிலேயே பிரச்சனை நீங்கிவிடும். அதனாலேயே ஒரு சித்த யோகினியாக மாயம்மா கன்னியாகுமரி மக்களால் மதிக்கப்பட்டார். வணங்கப்பட்டார். அவர் ஓர் இடத்திற்கு வந்தாலோ கால் வைத்தாலோ அங்கே நல்லது நடக்கும் என்பது பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை.
மாயம்மாவின் நடவடிக்கைகள் புதிரானவை. கடற்கரையில் நீராடுவார். வெளியே வருவார். பிறகு மீண்டும் சென்று நீராடுவார். கந்தலைக் கசக்கிக்கொண்டே இருப்பார். கல்லில் அடித்துத் துவைப்பார். நீரில் அலசுவார். பின் மீண்டும் துவைப்பார். பார்ப்போர் மலைத்துப் போகும்படி தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டே இருப்பார். பாறைமீது அமர்ந்திருப்பார். சில சமயம் படுத்தவாறு இருப்பார். சூரியனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. சுற்றி இருக்கும் நாய்களுடன் விளையாடுவதும் உண்டு. சமயங்களில் கடற்கரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள குப்பைகளை, கடற்பாசிகளை அவர் பொறுக்கிச் சேர்ப்பதுண்டு. நிறையச் சேர்ந்ததும் அவற்றைக் குவித்து அருகில் அமர்ந்து எரிப்பார். நன்கு எரிந்து சாம்பலாகும் வரை அருகிலேயே இருந்து கிளறிவிடுவார். அதன் சாம்பலை நீரில் கரைத்த பின்னரே அங்கிருந்து எழுவார்.
இதனை அவர் தினந்தோறும் செய்து வந்தார். தன்னை நாடிவரும் பக்தர்களின் கர்மவினையை அவர் எரித்துக் கரைப்பதாகவே பக்தர்கள் கருதினர். அதற்கேற்றவாறு மாயம்மாவைச் சரணடைந்த பல பக்தர்களின் வினைகள் உடனடியாக நீங்க ஆரம்பித்தன. பலரது வாழ்வு உயர்வுபெற்றது. இதில் பாமரர் முதல் பணம் படைத்தவர்வரை பலரும் அடக்கம். அவர்களுள் ராஜமாணிக்கம் என்பவர் ஒருவர். பகலில் கடற்கரையிலும், இரவில் கோவில் வாசலிலும் தங்கி வந்த அன்னை மாயம்மா, நிரந்தரமாகத் தங்குவதற்காக, கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கோயிலின் பின்புறம் குடில் ஒன்றை அவர் அமைத்துக் கொடுத்தார். அதுமுதல் அம்மா அங்கேயே தங்கியிருந்தார். நாளடைவில் அம்மாவுக்கு உதவி செய்ய ராஜேந்திரன் என்ற பக்தர் வந்து சேர்ந்தார். அம்மாவின் அணுக்கத் தொண்டராக இருந்து உதவிவந்தார். மகானைப் போற்றிய மகான்கள் யோகிகள், ஞானிகள் உள்பட பலரும் அன்னை மாயம்மாவைப் புகழ்ந்துள்ளனர். கலியுகத்தில் நாம ஜபமே முக்திக்கு வழி என்று போதித்தவர் ஞானானந்தகிரி சுவாமிகள். அவரிடம் பக்தர் ஒருவர், கன்னியாகுமரியில் வசிக்கும் மாயம்மா பற்றிக் கேட்டதற்கு, சுவாமிகள், "கன்னியாகுமரி கோயிலில் பகவதியாக வீற்றிருப்பவளே, கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள். அவள் எளிய தோற்றத்தை வைத்து ஏமாந்துவிடாதீர்கள்" என்று கூறியிருக்கிறார். அதுமுதல் அன்னை மாயம்மாவை வந்து தரிசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. மட்டுமல்ல; பூண்டி மகான், கோடி சுவாமிகள், கசவனம்பட்டிச் சித்தர், மருந்துவாழ்மலை நாயனார் சுவாமிகள் எனப் பல சித்தர் பெருமக்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர் அன்னை மாயம்மா.
சித்தரும் யோகியும் ஒரு சமயம் பக்தர் ஒருவர் காரில் அன்னை மாயம்மாவை தரிசிக்க வந்தபோது அன்னை எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்துகொண்டார். கார் பல இடங்களுக்குச் சென்றும் அன்னை காரில் இருந்து இறங்கவுமில்லை. பதில் பேசவுமில்லை. பின்னர் ஒருநாள் இரவு திருவண்ணாமலை தலத்தை அடைந்தது கார். அங்கே இருந்த யோகி ராம்சுரத்குமாருக்கு அன்னை மாயம்மாவின் வருகை பற்றிச் சொல்லப்பட்டது. உடனே அங்கு வந்த யோகி அன்னைக்கு வணக்கம் செய்தார். அதன்பின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஏதும் பேசாமல் விடிய விடியப் பார்த்துக் கொண்டே இருந்தனர். விடிந்ததும் மாயம்மா பதிலேதும் பேசாமல் புறப்பட்டார். இதுபற்றி பின்னால் பக்தர் ஒருவர் யோகி ராம்சுரத்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது அவர், "இந்தப் பிச்சைக்காரனை ஆசிர்வதிப்பதற்காகவே அன்னை மாயம்மா வந்தார்" என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தாராம்.
ஞானிகள் சாதாரண மானுடர்கள் போல் நேருக்கு நேர் வார்த்தையாடும் அவசியம் இல்லை. ஒருவரின் நிலையை மற்றொருவர் அறிந்து கொள்ள இயலும். அதுவே இங்கேயும் நிகழ்ந்தது.
மகான்கள் மட்டுமல்ல; அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் என பலர் அன்னை மாயம்மாவின் மகிமை பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வந்து தரிசித்துள்ளனர். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதிகள் வி.வி. கிரி, ஜெயில்சிங், பாடகர் தண்டபாணி தேசிகர், எழுத்தாளர்கள் சுந்தரராமசாமி, அ.கா. பெருமாள், பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி, இசைஞானி இளையராஜா என அன்னை மாயம்மாவை வந்து தரிசனம் செய்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. அ.கா. பெருமாளும், டாக்டர் ந. சஞ்சீவியும் இணைந்து அம்மாவின் வரலாற்றை 'அன்னை மாயம்மா' என்ற பெயரில் எழுதியுள்ளனர்.
ஜீவசமாதி இளையராஜா உள்ளிட்ட பக்தர்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று, அவர்கள் இல்லத்திற்கு விஜயம் செய்து சில நாட்கள் தங்கிய மாயம்மா, இறுதியில் சேலத்தை வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்தார். அங்கும் தன்னை நாடி வந்த பக்தர்கள் பலரது வினைகளைத் தீர்த்து அருளாசி அளித்து, பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய அம்மா, தான் முன்னறிவித்தபடி பிப்ரவரி 9, 1992 அன்று ஜீவசமாதி ஆனார். அன்னை மாயம்மாவின் சீடர் ராஜேந்திரனால் அங்கு சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது. ஆண்டுதோறும் குருபூஜை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் அருகில் அந்தச் சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் தன் ஜீவ சமாதியிலிருந்து சிறப்பான அருளாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்னை மாயம்மா.
கன்னியாகுமரியில் ஆலயம் அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து சிறப்புற நடந்து வருகின்கிறன. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக நோயுள்ளவர்கள் அம்மாவை உண்மையான அன்போடும், பக்தியோடும், நம்பிக்கையோடும் வணங்கினால் பலன் நிச்சயம் என்பது கண்கூடு.
பா.சு. ரமணன் |