வெறுப்பு என்பது விஷம்...
பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை, ஆனால் எரிச்சலூட்டும் விஷயம். என் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரி மகள் எங்களுடன் வந்து தங்கி இருக்கிறாள். இந்தியாவில் மாஸ்டர்ஸ் செய்து அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவளுக்கு ஆறுமாதம் இங்கே ப்ராஜெக்ட் ஒர்க். நாங்கள் இருக்கும் இடத்திலேயே. அவள் அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. என் கணவருக்குச் சொந்த சகோதரிகள் கிடையாது. இரண்டே பையன்கள். அதனால் இந்தக் கசினுடன் மிகவும் நெருக்கம். ஆகவே அவரும் நானும் விருப்பத்துடன் இந்தப் பெண்ணை எங்களுடன் தங்க அழைத்தோம். எனக்கு ஒரு பையன், ஒரு பெண். பையன் படித்துவிட்டு வேலைக்குப் போய்விட்டான். பெண் மூன்றாமாண்டு கல்லூரியில் படிக்கிறாள். என் குழந்தைகள் என்பதால் சொல்லவில்லை, ரொம்ப சூட்டிகையான, ஒழுக்கமான குழந்தைகள். குழந்தை வளர்ப்பில் அதிகம் பிரச்சனை எதுவும் இருந்ததில்லை. வளர்க்கும் போதே கொஞ்சம் பக்தி, ஆன்மிகம் என்று அந்தப் பாதையில் வளர்த்துவிட்டோம். நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம்

இரண்டு வருடமாக 'empty nest syndrome', கொஞ்சம் பாதிக்கத்தான் செய்தது. அப்போது இந்தப் பெண் வந்து தங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வந்து இரண்டு, மூன்று வாரம் நன்றாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகு அவளுடைய பழக்க வழக்கங்கள் கொஞ்சம் புரிபடாமலும் பிடிக்காமலும் இருந்தன. ஒரே பெண். செல்லமாக வளர்ந்திருக்கிறாள். வீட்டுவேலை எதுவும் செய்வதில்லை. சாப்பிட்ட தட்டைப் போட்டது போட்டபடிப் போய்விடுகிறாள். அதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமல்ல. நாங்கள் நேரம் தவறாமையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறோம். எங்கேயாவது போக வேண்டும் என்றால், 5:00 மணி என்றால் நாங்கள் (என் குழந்தைகள் உள்பட) 4:50க்கே தயாராக இருப்போம். ஆனால், இந்தப் பெண் மிகவும் சோம்பேறி. பொறுப்புணர்வும் அதிகமாக இல்லை. எங்கு கிளம்பவேண்டும் என்றாலும் அரைமணி நேரம் அவளுக்காகக் காத்திருக்க வேண்டும். துணியெல்லாம் அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவாள். எனக்குப் பொறுக்க முடியாமல் நானே வாஷ் செய்து மடித்துவைப்பேன். வந்தவுடன் பார்த்துவிட்டு, "Oh! Thank you sooo much aunty!" என்று சொல்லுவாள். நானும் என் கணவரும் பலமுறை நாசூக்காகச் சொல்லிப் பார்த்தோம். என் கணவர் போனவாரம் கொஞ்சமாக கடுமையாகவே பேசிவிட்டார். அவளுக்கு மிகவும் அழுகை வந்துவிட்டது. அவள் அம்மாவிடம் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. ஒரு வாரமாக அந்த அக்காவிடமிருந்து எந்த ஃபோனோ WhatsApp மெசேஜோ வருவதில்லை. இவளும் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள்.

அப்படியும் நாங்கள்தான் மாற்றி மாற்றி அவளை வேலைக்குக் கொண்டு விட்டு வந்து கொண்டிருக்கிறோம். வயது 23 ஆகிவிட்டது. அப்படியொன்றும் டீனேஜர் இல்லை. பணியிடத்தில் எப்படிச் சமாளிக்கிறாள் என்று தெரியாது. She seems to have taken everything for granted. முடிக்குமுன் இதையும் சொல்லி விடுகிறேன். என் கணவரின் அத்தை பெண்தான் இவள் அம்மா. அந்த அத்தை திருமணமாகிச் சென்றபின் அவள் கணவருக்கு பிசினஸ் மிகவும் கொழித்தது. அந்த அத்தை, என் கணவருக்கு இங்கே வந்து படிக்கப் பண உதவி செய்துள்ளார். பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டாலும் காலத்தில் செய்த உதவிக்கு என் கணவர் எப்போதும் அந்தக் குடும்பத்துக்கு நன்றியோடு இருக்கிறார். இது 25 வருடம் முன்னால் நடந்த கதை ஆனாலும் அதை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கசின் தன் பெண்ணை இன்னும் நன்றாக நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை. இந்தப் பெண் வந்து 3 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இவளை இனிமேல் இருக்கவேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை; வழிக்கும் கொண்டுவர முடியவில்லை. ஓரளவுக்கு மேல் குறை சொல்லவும் முடியவில்லை. பெண்ணின் மேலுள்ள பாசத்தால் அவள் அம்மாவும் எங்களைத்தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை இருந்திருக்குமே! என் கணவர் மிகவும் மன இறுக்கத்தில் இருக்கிறார். எவ்வளவுக்கு எவ்வளவு அந்தப் பெண்ணிடம் முதலில் ஆசையாக இருந்தாரோ, இப்போது பாராமுகமாக இருக்கிறார். எப்படி இந்த நிலைமையைக் கையாள்வது என்று தெரியவில்லை. அவள் அம்மா சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தால், எனக்கு இப்படியெல்லாம் தோன்றாது. இந்தியாவில் சமையல்காரி, டிரைவர், வேலையாள் என்று இருந்து, அவள் அம்மாவுக்கும் எங்கள் நிலைமை முழுவதாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே,
பிரச்சனை பொதுவாக இருக்கிறது. ஒரு சம்பவத்தை விவரித்திருந்தால் அதன் ஆழம், பாதிப்பு எனக்கு இன்னும் சுலபமாகப் புரிந்திருக்கும். இருந்தாலும் அழகாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.

என் கருத்து - பொறுமை, கடமை, உடைமை.
பொறுமை - ஆறு மாதம் ப்ராஜெக்ட் என்றால் மூன்று மாதத்திற்கு மேல் சமாளித்து விட்டீர்கள். 'Rough it out. Not a big issue'. உங்களால் முடிந்த அறிவுரையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டீர்கள். ஒரு காலகட்டத்தில் அவள் பொறுப்பை உணர்வாள். உங்கள் அறிவுரை, கொஞ்சம் நாள் பொறுத்து வேலை செய்யும். இப்போது இல்லை. பரவாயில்லை.
கடமை - அழைத்து வந்துவிட்டீர்கள். பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். சவால்கள் இருக்கத்தான் செய்யும்.
உடைமை - அந்தப் பெண்ணை உங்கள் குடும்ப அங்கத்தினராக ஏற்றுக் கொள்ளும்போது, அவள்பேரில் கோபமோ, தாபமோ இருந்தாலும், அக்கறையும் அன்பும் இருந்துகொண்டேதான் இருக்கும். அப்போது கடமையில் இருக்கும் கணம் தெரியாது. குழந்தைகளை அருமையாக வளர்த்த உங்களுக்கு, இந்தப் பெண்ணும் அவளது அம்மாவும் பாராமுகமாக இருப்பதைப் புன்சிரிப்போடு புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கிறது. மறுபடியும் இந்தப் பெண்ணுக்கு ஏதேனும் நல்லதாக நடக்கும் சம்பவத்தில் சகஜநிலைக்குத் திரும்பிவிடுவாள். உங்கள் கணவருக்கும் அப்போது இறுக்கம் குறையும். நீங்கள் மட்டும் தொடர்ந்து அந்தப் பெண்ணின்மேல் அன்பைச் செலுத்துங்கள். அவள் உங்களை அழகாகப் புரிந்துகொள்வாள். இப்போது இல்லை. பின்னால். என் கருத்தை நிறையப் பேர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். நமக்கு வாழ்க்கையில் உறவு வகையில் நிம்மதியும் திருப்தியும் வேண்டும் என்றால், நம்மால் முடிந்ததைச் செய்து அன்பைத் தொடரவேண்டும். வெறுப்பு என்பது விஷம். அதை ஏன் நமக்குள் நாமே செலுத்திகொள்ள வேண்டும்?

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com