பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019 ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. புலம்பெயர்ந்த தமிழ் வழித்தோன்றல்களால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் மாநாடு என்பது இதன் தனிச்சிறப்பு. அனைத்து அமைப்புகளையும் சேர்த்தணைத்தது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA). விழாவுக்குப் பொறுப்பேற்றது சிகாகோ தமிழ்ச்சங்கம். அன்புடனே அனுமதி அளித்தது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தொழில்முனைவோர் அமைப்பும் கை கோத்தது.

மாநாட்டில் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர், அறிஞர்கள், உயர்பதவிகளில் வீற்றிருப்போர், செல்வந்தர் எனப் பலதரப்பட்டோர் பங்கேற்றனர். இருப்பினும், "தமிழ் மொழி என்தாய்மொழி, தமிழினம் எனது இனம்" என்கிற தெளிவோடு, “தமிழனாய் வாழ்வோம், தமிழால் இணைவோம்" என்ற முழக்கத்துடன் பேரணி நடத்திக் காட்டினர்.



முத்தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் ஆழிப் பேரலைக்கு இரையாயின. முச்சங்கம் அழிந்தால் என்ன, முன்னூறுக்கு மேற்பட்ட சங்கங்கள் அந்நிய மண்ணில் முளைத்தோங்கிவிட்டன என்பதை இங்கே காணமுடிந்தது. தமிழ் ஆடவரும் பெண்டிரும் கலாச்சார உடையணிந்து நடனமாடி, கும்மியடித்து, முளைப்பாரி ஏந்தி, சிலம்பாட்டம், புலியாட்டங்களுடன் எங்கெங்கும் தமிழ் மணக்கச் செய்துவிட்டனர். காண வந்தோர்தமை தமிழர் கூட்டம் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துவிட்டது.

வ.ச. பாபு,
ஷோம்பர்க், இல்லினாய்ஸ்
மாநாட்டுக் குழு முதன்மை உறுப்பினர்.

© TamilOnline.com