ம.ந. ராமசாமி
"சமுதாயம் தரங்கெட்டு தள்ளாடிக் கொண்டிருக்கையில் ம.ந.ரா. போன்ற மகான்கள் அவதாரம் எடுக்க நேர்ந்துவிடுகிறது. எழுத என உட்கார்ந்தால் சாமி வந்தாப்போல ஒரு கிறுகிறுப்பும் கண் சிவப்பும் அவர்களை இயக்குகிறதோ என்னவோ" என்று வியந்து கூறுகிறார் எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் இவரைப்பற்றி. இப்படி விதந்தோதப்படும் ம.ந. ராமசாமி, 1927 மே 15ம் நாள் மானாமதுரையில் பிறந்தார். அங்கேயேதான் பள்ளிப்படிப்பு. உயர்கல்வி தாராபுரத்தில். ராணுவ வீரர்களுக்கான கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. சில காலம் அங்கு பணி செய்தார். தொடர்ந்து நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் எழுத்தராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். வாழ்க்கை அனுபவங்கள் இவரை எழுதத் தூண்டின. முதல் கதை 'தியாகி யார்?' நவயுவன் இதழில் 1947ல் வெளியானது. தொடர்ந்து தீபம், தினமணி கதிர், கணையாழி, சிவாஜி, செம்மலர், தாமரை, கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன், கண்ணதாசன், தாய் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி வாசக கவனம் பெற்றன. சில கதைகள் விவாதங்களையும் ஏற்படுத்தின.

கணையாழியில் இவர் எழுதிய 'யன்மே மாதா' சிறுகதை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கதாநாயகன் வெங்கடேசன் தந்தைக்குச் சிராத்தம் செய்யத் துவங்குகிறார். அவருக்கு மந்திரம் மட்டுமல்ல, அதன் பொருளும் தெரியும். சாஸ்திரிகள் சொல்லச் சொல்ல இவர் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சாஸ்திரிகள், "யன்மே மாதா பிரலுலோப சரதி" என்று ஆரம்பித்துச் சொல்ல, தடுக்கிறார் வெங்கடேசன். அதன் பொருளை சாஸ்திரிகளிடம் கேட்க அவருக்குத் தெரியவில்லை. உடனே, "எனது தாயின் பதிவிரதைத் தன்மையைக் கேவலப்படுத்துவதாக இந்த மந்திரம் இருக்கிறது; எனது தகப்பனார் எங்கள் குடும்பத்தை நடுத்தெருவில் தவிக்கவிட்டுவிட்டு ஓடிப்போனவர். என் தாய் சொன்னதால்தான் நான் சிராத்தம் செய்கிறேன். எங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தெய்வமான தாயைக் கேவலப்படுத்தும், என் தாய் உத்தமி இல்லை என்று சொல்லும் இந்த மந்திரத்தை நான் சொல்ல மாட்டேன்" என்கிறார். தன் தாயிடம். "அம்மா, உன்னைக் கேவலப்படுத்தும் இந்த மந்திரத்தை நான் சொல்ல மாட்டேன். மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் ஒருவேளை இது சரியான மந்திரமாய் இருந்திருக்கலாம். இப்போது பொருந்தாது" என்று சொல்லி மன்னிப்புக் கேட்கிறார். திதியையும் நிறுத்தி விடுகிறார். "நீ திவசம் பண்ணாமல் உன்னிடம் நான் தட்சிணை வாங்க என் மனம் இடம் தரவில்லை" என சாஸ்திரிகள் உடன் வந்தவர்களுடன் சென்று விடுகிறார். இப்படி ஒரு வித்தியாசமான, மாறுபட்ட சிந்தனைப் போக்கில் ராமசாமி படைத்திருந்த இந்தச் சிறுகதை, வெளியான சமயத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பரவலாக விவாதிக்கப்பட்ட இந்தச் சிறுகதை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் கணையாழியில் எழுதிய 'கலாசார மயக்கம்' என்ற சிறுகதைக்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. காரணம் அதில், வர்ணாஸ்ரம தர்மம் என்பதான பிரிவினை திராவிடர்களின் கலாசாரம்தான் என்று ஆதாரங்களுடன் எழுதியிருந்ததுதான்.

ம.ந. ராமசாமியின் பல சிறுகதைகள் மாறுபட்ட கதையம்சம் மற்றும் வித்தியாசமான சிந்தனைப் போக்கைக் கொண்டவையாக இருக்கின்றன. நீரோட்டம் போன்ற நடையைக் கொண்ட இவரது கதைகளில் அநாவசிய வர்ணனைகளோ, வாசகனைக் குழப்பும் உத்திகளோ, தேவையற்ற சிடுக்குகளோ இருப்பதில்லை. பாத்திரப் படைப்பின் மூலமும், சம்பவங்கள் மூலமும் இவர் எழுப்பும் கேள்விகள் வாசகர் மனதில் சிந்தனையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துபவையாக உள்ளன. எழுத்தில் தெரியும் அறச்சீற்றம் வாசகர் மனதிலும் அதனைத் தூண்டுகிறது. சமூகத்தின் போலி வேஷங்களை, பாசாங்குகளை, நடிப்பை மிகைப்படுத்தாது பதிவு செய்வது இவரது வழக்கம்.

'வாழத் துடிப்பவர்கள்' இவரது முதல் சிறுகதைத் தொகுதி. இதைப்பற்றி, "சிறப்பான தமிழ் நூல்களுக்குப் பரிசளித்து வரும் அரசுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பார்வைக்கும் அவசியம் கொண்டுவர வேண்டிய நூல் இது" என்று கவனப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் மாயாவி. இவரது மற்றுமொரு முக்கியமான சிறுகதைத் தொகுப்பு 'அன்னம்மா'. இதுபற்றி, "ஐஸ்கிரீமை வாயில் போட்டுக் கொண்டால் எப்படி உருகுமோ, அதுபோலச் சற்றும் இடறாத, படிக்கத் தொடங்கினால் கதை முடியும்வரை ஒரே மூச்சில் சரசரவென்று நகரும் பாணி ராமசாமியுடையது" என்று புகழ்கிறார் தினமணியின் கலாரசிகன். 'ரத்தினக்கல் குவியல்', 'பாகிஸ்தானிலிருந்து', 'குலக்கொடி' போன்றவை இவரது பிற சிறுகதைத் தொகுப்புகள். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதை மட்டுமல்லாமல் நாவல், குறுநாவல், கட்டுரை, சிறுவர் கதை, வானொலி நாடகம் என இருநூற்றிற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதிக் குவித்திருக்கும் ராமசாமி, ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்தவர். மொழிபெயர்ப்பிலும் மிகத் தேர்ந்தவர். திருவாழத்தான் என்ற புனைபெயரிலும் எழுதியிருக்கிறார்.

இவரது நாவல்களும் சிறப்பானவை. நகரத்து இளைஞனின் கிராமத்து அனுபவங்களைப் பேசும் நாவல் 'சிரிப்பின் நிழல்'. 'நாதலயம்' இசை வித்வம்ஸினி பற்றிய நாவல். ம.ந. ராமசாமி, "இந்த நாவலை வாசித்த வித்வான் ஒருவர் வீடுதேடி வந்து, என்னையும், என் மனைவியையும் தரையில் விழுந்து வணங்கி எழுந்தார். 'புத்தகத்தை வைக்கவே மனம் இல்லை. அழுதுவிட்டேன்' என்றார்" என்று குறிப்பிடுகிறார். இவர் எழுதிய 'நாலாவான்' ஒரு சரித்திர நவீனம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழகச் சூழலைக் கொண்டு படைக்கப்பட்ட இந்நாவல், ஔவையாரின்,

நூல் எனிலோ கோல் சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம்
கோல் எனிலோ அங்கே குடி சாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணை ஆவான்
அந்த அரசே அரசு!


என்ற வெண்பாவை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்நாவலுக்கு புதியபார்வை மற்றும் குன்னூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசுகள் கிடைத்தன. அக்காலக் குருகுலத்தின் பெருமைகளை, வாழ்க்கையைப் பேசும் நாவல் 'மந்த்ரபுஷ்பம்'. இவரது 'தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை' நாவல் திண்ணை இணையதளத்தில் தொடராக வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டது. 'சதுரங்கப் பட்டணம்' குறுநாவல் யுகமாயினி அமரர் நகுலன் நினைவுப் பரிசு பெற்றது. இவரது 'கனவுபூமி" நாவலும் முக்கியமானது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்தும் குழுவினர் பற்றிய கதையை 'மாதே ஸ்வதந்த்ர தேசம்' என்ற தலைப்பில் குறுநாவலாக எழுதியிருக்கிறார். 'அறுபத்தொன்பது விழுக்காடு', 'ஓவியங்கள் நிறைந்த அறை' போன்றவை பிற குறுநாவல்கள். 'ஜீவாத்மா' என்ற குறுநாவல் கணையாழி தி. ஜானகிராமன் நினைவுப்போட்டியில் பரிசு பெற்றது. 'பயம் என்னும் பேய்' சிறுவர்களுக்கான கதை நூல். 'பாரதி பாடாத கவிதை' என்பது கட்டுரைத் தொகுப்பு. "வானின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று" என்ற குறளுக்கு விளக்கம் அளித்து இந்த நூலில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை சிந்திக்கத் தகுந்தது. கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், கவி காளமேகம், சிட்டி பற்றிய கட்டுரைகள் சிறப்பானவை. மதுரை நகரத்தின் பெயர்ச் சிறப்பைப் பற்றி ஆராய்ந்து இவர் இந்த நூலில் எழுதியிருக்கும் 'மதுரை - ஓர் ஆய்வு'கட்டுரை குறிப்பிடத் தகுந்த ஒன்று.

தன்னுடைய எழுத்துலக அனுபவங்கள் பற்றி ம.ந. ராமசாமி, "என் படைப்புகள் சிலரைப் பாதித்தது உண்டு. மேல் எழுந்த சிறு தடுமாற்றம் அவ்வளவுதான். ஒரு அரிச்சந்திரன் கதை ஒரு மகாத்மாவை உருவாக்கி இருக்கலாம். மற்றபடி எந்த எழுத்தும் எவரையும்அதிகமாக மாற்றிவிடுவதில்லை. 'யன்மே மாதா' சிறுகதையை வாசித்துவிட்டு எவரும் திதி, திவசம் செய்வதை விட்டுவிடவில்லை. 'மந்த்ரபுஷ்பம்' வரலாற்று நாவலை வாசித்த இரு பெரியவர்கள் பரவசப்பட்டு கடிதங்கள் எழுதினர். அவர்களில் ஒருவர் தன்னைச் சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார்" என்கிறார். இப்படிப் பல அனுபவங்களை அவர் தனது கட்டுரைகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மொழிபெயர்ப்பிலும் மிகத் தேர்ந்தவர் இவர். புக்கர் டி. வாஷிங்டன் எழுதிய 'Up From Slavery' நூலை 'அடிமையின் மீட்சி' என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருக்கிறார். அதற்காக 'நல்லி - திசை எட்டும்' அமைப்பு வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்தது. ஆண்டன் செகாவின் 'ஸ்டெப்பி', 'மகா புல்வெளி' என்ற தலைப்பில் இவரது மொழியாக்கத்தில் வெளியானது. வில்லியம் ட்ரவர், சல்மான் ருஷ்டி, தாஸ்தயேவ்ஸ்கி, டி.ஹெச். லாரன்ஸ் போன்றோரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை 'மாற்றான் தோட்டம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாதெமிக்காக பாரவி, அஸ்வகோஷர் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்புகளில் சாமர்செட் மாமின் 'மழைதாரை', ஜான் ஸ்டீன்பெக்கின் 'முத்து', அயன் ராண்டின் 'கீதம்' போன்றவை முக்கியமானவை.

தற்போது கோவையில் வசித்து வரும் ம.ந. ராமசாமியின் படைப்புகளின் மேன்மை கருதி எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் அவை நூல்வடிவம் பெற ஊக்குவித்து வருகிறார். மொழிபெயர்ப்புப் பரிந்துரைகளும் செய்து வருகிறார். 92 வயதிலும் சளைக்காமல் சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ராமசாமி, தற்போது சம்ஸ்கிருதத்திலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். சில நூல்கள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன. ம.ந. ராமசாமியை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று அழைப்பதே பொருத்தம்.

அரவிந்த்

© TamilOnline.com