அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து 2.25% ஆக்கியிருக்கிறது. சென்றமுறையும் குடியரசுக் கட்சி ஆட்சிக் காலத்தின் (2008) பொருளாதாரச் சரிவில்தான் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை வேறு. வேலைவாய்ப்பு சிறப்பாக உள்ளது, பணவீக்கம் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. அதாவது, ஃபெடரல் வட்டிவிகிதக் குறைப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதிபர் ட்ரம்ப் இதுகூடப் போதாது என்கிறார்! உண்மையிலேயே பொருளாதாரச் சரிவு ஏற்படும் காலத்தில் உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை ஊக்குவித்து, பொருளாதாரச் செயல்பாட்டை அதிகரிக்கும் ஒரு முக்கியக் கருவியான வட்டிவிகிதக் குறைப்புக்கு இப்போது அவசியமில்லை என்பது பொருளாதர நிபுணர்களின் கருத்து. காரணம், உண்மையான மந்தநிலை வரும்போது இந்தக் கருவியைப் பயன்படுத்தப் போதிய இடைவெளியும் இல்லாமல் போய்விடும் என்பதுதான்.
பிழைபட்ட குடிவரவுக் கொள்கை, பெரிய வர்த்தகக் கூட்டாளிகளான சீனா, மெக்சிகோ ஆகியவற்றுடன் சுங்கவரிப் போர் ஆகியவற்றால் தொழிலாளர் தட்டுப்பாடு, மூலப்பொருள் தட்டுப்பாடு போன்றவற்றை இவ்வரசு ஏற்படுத்தியுள்ளது. பெருவணிகங்களுக்குக் குறிப்பிடத்தக்க வரிவிலக்குகளைக் கொடுத்துள்ளது. அவையோ, அந்த உபரியைத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், பங்குகளைத் திரும்ப வாங்கியும், பங்கு லாபமாக வினியோகித்தும் அதை விரயம் செய்துகொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், தனிநபர் கொடுக்கும் சொத்துவரி, மாநில வருமான வரி ஆகியவற்றுக்கு மத்தியில் முழுமையாக வரிவிலக்குத் தராததால், அவரது செலவிடத்தக்க வருமானம் (disposable income) கணிசமாகக் குறைத்துவிட்டது. பொதுவாகவே உலக அளவில் பொருளாதார மந்தநிலை இருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல மதியூகத்துடன் தேர்ந்தெடுத்த வழிமுறைகளால் தேசம் நிர்வகிக்கப்படாவிட்டால், நிதிநிலை மற்றும் பொருளாதாரம் எந்த நிமிடமும் அதலபாதாளத்தில் சரிந்து விழும் விளிம்பைத் தொட்டுவிடும். $1000 ஐஃபோனைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு, புற்றுநோய் மருந்துக்கு $250,000 கொட்டியழும் பக்கவாதச் சமூகமாகவே எப்போதும் இருக்கமுடியாது, கூடாது.
*****
சட்டம் படித்துச் சிலகாலம் வழக்குரைஞராக இருந்தபின், சுய ஆர்வம் மற்றும் குடும்பத்தொழில் கட்டாயத்தால் பேனர் ஓவியர் ஆனார் ஜீவானந்தன். ரத்தத்திலேயே ஊறியிருந்தது ஓவியம். பலவகைச் சவால்களுக்கு நடுவில் கலை, இலக்கியம், சினிமா என்று பல ஈடுபாடுகளையும் மிகவும் ரசனையோடு செய்து பெயர் பெற்றிருக்கும் இவரது நேர்காணலை நாமும் ரசனையோடு படிக்கலாம். இளம் சாதனையாளர்கள் நம் நெஞ்சை நிமிர வைக்கிறார்கள். ஞானியார் 'அன்னை ஸ்ரீ மாயம்மா' அதிசயிக்க வைப்பார். கொங்குத் தமிழில் 'கொள்ளுக்காட்டு மாமன்' கதையை ஒரே மூச்சில் வாசித்துவிடலாம். அத்தனை சுவாரசியம். பச்சைக் குழம்பும் மஞ்சள் பொங்கலும் உங்கள் சமையலறைக்கு வண்ணம் ஊட்டுவதுடன், நாவிலும் எச்சிலூற வைக்கும். எல்லாவற்றையும் நீங்களே தோண்டித் துருவிப் பாருங்கள்.
விழாக்காலம் தொடங்கிவிட்டது. வாசகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, பக்ரீத், இந்திய சுதந்திரநாள் வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
ஆகஸ்டு 2019 |