2019 ஏப்ரல் 27-28 நாட்களில் கலாலயா தனது 5ம் ஆண்டு விரிகுடாப் பகுதித் தியாகராஜ ஆராதனை விழாவை சான் ஹோசே எவர்கிரீன் வேலி உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடியது. விரிகுடாப்பகுதி இசைச் சமூகம் இதனை ஒருமனதாக ஆதரித்து வெற்றியடையச் செய்தது.
இதன் இரண்டாம் நாள் இசைவிழாவை மஹாவித்வான் திரு நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் திரு திருமலை ஸ்ரீனிவாஸ் துவக்கி வைத்தனர். விழாவில் சற்றொப்ப 10 இசைப்பள்ளிகளின் 200 மாணவர்கள் பங்கேற்றனர். இசை மற்றும் வாத்தியம் பயிற்றுவிக்கும் குருமார்களின் வரவும் ஈடுபாடும் விழாவை மிளிரச் செய்தது.
'இசை மூவரின் முத்துக்கள்' என்ற கருத்தில் விரிகுடாப் பகுதிக் கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சியும், அடுத்து சந்தானகோபாலன் அவர்களின் தலைமையில் இசைத்த பஞ்சரத்னக் கிருதிகளும் விழாவின் மகுடமாக அமைந்தன. தவிர நெய்வேலி சந்தானகோபாலனின் இசைக்கச்சேரியும் இவ்விழாவுக்குப் பெருமை சேர்த்தது. அவருக்கு அருண் ராமமூர்த்தி (வயலின்), ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), கணேஷ் ராமநாராயணன் (கஞ்சிரா) ஆகியோர் நேர்த்தியாகப் பக்கம் வாசித்தனர்.
இளைஞர் குரலிசைக் கச்சேரி, ஸ்ரீகிருஷ்ணா சிவகுமார், ஸ்ரீகாந்த் சிவகுமார், சாஷ்வத் மஹாலிங்கம், மாளவிகா ஸ்ரீராம், ரஞ்சனி ரவீந்திரபாரதி, காவ்யா கொடுங்கல்லூர், அபர்ணா தியாகராஜன், அபூர்வா ஆனந்த், அஜய் கோபி, ஷ்ரேயஸ் ராமஸ்வாமி ஆகியோரைக் கொண்டிருந்தது.
இசைக்கருவிக் குழுவின் கச்சேரியில் குஹன் வெங்கடராமன், ஷ்ஷாங்க் சுப்ரமணியம், ரிஷிகேஷ் சாரி, விக்னேஷ் தியாகராஜன், ஷ்ரேயஸ் பரத்வாஜ், அமித் ரங்கநாதன், சந்தோஷ் ரவீந்திரபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிகள்: சப்தலயா மியூசிக் அகடமி, நாதோபாசனா ஃபைன் ஆர்ட்ஸ் அகடமி, டிரினிடி சென்டர் ஃபார் மியூசிக், கலாலயா, நாதநிதி, இன்டர்நேஷனல் அகடமி ஆப் இண்டியன் மியூசிக், பிரகிருதி ஸ்கூல் ஆஃப் மியூசிக், சாரதா ஸ்கூல் ஆஃப் தாளவாத்யா, ச்ருதிஸ்வரலயா, ஜிகே ஸ்கூல் ஆஃப் மியூசிக்.
இரவீந்திர பாரதி , சான் ஹோசே, கலிஃபோர்னியா |