2019 மே 31 முதல் ஜூன் 2ம் தேதிவரை பாலாஜி மடக்கோவில் (5004 North First Street, San Jose, CA) தனது 7வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது.
முதல் நாளன்று மதியம் பாலாஜி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ நாராயணானந்த சுவாமிகள் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். அன்று நவக்கிரகம், கணேசர், சிவபெருமான், நந்தி மற்றும் தேவி கலசஸ்தாபனங்கள் நடைபெற்றன. துவாரபூஜை, கிருஹப்ரவேசத்துக்குப் பின்னர் மஹாலக்ஷ்மி அபிஷேகம் நடைபெற்றது. ஷோடசோபசார பூஜைக்குப் பின் மங்கள ஹாரத்தி நடந்தது. இரண்டாம் நாள் காலையில், சுவாமிகள் பக்தர்களுடன் பங்கேற்ற கணேச, ருத்திர, நவக்கிரக, வாஸ்து ஹோமங்கள் நடைபெற்றன. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் முழங்க பாலாஜிக்குத் திருமஞ்சனம், அலங்காரம், மங்கள ஹாரத்தி நடைபெற்றன. 'பாலாஜி ஸ்தோத்ரமாலா' என்ற நூலை சுவாமிகள் வெளியிட்டுப் பேசினார். மாலையில் சிவலிங்கம், நந்தி, நவக்கிரகங்களுக்கு அஷ்டபந்தனம் நடைபெற்றது.
இறுதிநாளன்று கணேச பூஜை மற்றும் ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சுவாமிஜி மூலகலசத்துடன் கோவிலை வலம் வந்தார். சிவன், நந்தி. நவக்கிரக ஸ்தாபன பூஜைகள் நடைபெற்றன. அடுத்து வேத பண்டிதர்கள் வெகு அழகாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண விழாவை நடத்தினர். இதனையடுத்து சுமங்கலி பூஜை நடைபெற்றது. அடுத்து குருபூஜை விழா நடைபெற்றது. அப்போது அதன் முக்கியத்துவத்தை ஸ்ரீ விட்டல்தாஸ் நித்யானந்தா விளக்கி உரைத்தார். ஸ்ரீதேவி, பூதேவிப் பிராட்டியாருடன் உத்சவ மூர்த்தி பாலாஜி திருக்கோவிலைச் சுற்றி ரதத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். மங்கள ஹாரத்தியுடன் விழா நிறைவுற்றது.
கோவிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் இளங்கோ வேலாயுதன், செயலர் கிருஷ்ண சீலம் மற்றும் பல அன்பர்கள் நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்த உதவினர். சுவாமிகள் வேத பண்டிதர்களையும் விழா வெற்றிபெற உதவிய அன்பர்களையும் வாழ்த்திப் பேசினார்.
செய்திக்குறிப்பிலிருந்து |