ஜூன் 1, 2019 அன்று நியூ ஜெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டுவிழா மேற்கு விண்ட்சர் நகரில் உள்ள தாமஸ் குரோவர் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழா நண்பகல் 2:30மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளி ஆசிரியர்கள் திருமதியர் தீபா, மதி, பிரேமா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
பள்ளி நிர்வாகக்குழு துணைத்தலைவர் திரு ரமேஷ் தியாகராசன் வரவேற்றுப் பேசினார். உதவித் தலைமையாசிரியர் திருமதி பொற்செல்வி வேந்தன் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து வகுப்புவாரியாகக் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம் ஆயின. அமெரிக்காவில் வளர்ந்தாலும் தங்களாலும் தமிழில் நிகழ்ச்சிகளை அழகாகக் கொடுக்க முடியும் என மாணவர்கள் காண்பித்தனர்.
நாட்டிய நாடகங்களும், நாடகங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. தமிழர் நிலத்திணைகள் நாடகத்தில் மாணவர்கள் தமிழர்களின் ஐவகை நிலங்களையும் கண்ணுக்கு விருந்தாக்கினர். சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தின் சில பாடல்கள் நாட்டிய நாடகமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து குற்றாலக் குறவஞ்சி நாட்டியம் மகிழ்வூட்டியது. 'தெனாலிராமன்', 'மின்னணுச் சாதனங்கள்', 'தமிழகச் சுற்றுலா' ஆகிய நாடகங்கள் மாணவர்களின் அழகுத் தமிழில் அரங்கேறின. தொடர்ந்து வள்ளலார் மற்றும் முத்துத்தாண்டவர் பாடல்கள் கொண்ட தமிழிசை, ஒயிலாட்டம், கோலாட்டம், பறையிசை என வரிசையாக நிகழ்ச்சிகள் நடந்தேறின.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நியூ ஜெர்சி தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளும், நகரத் தமிழ்ப் பேரவை நிர்வாகிகளும் வந்திருந்தனர். பிற தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை தந்தனர். ஆசிரியர் திருமதி நித்யா ரமேஷ் நன்றியுரை கூறினார்.
இறுதி நிகழ்ச்சியாக ஆசிரியர்கள் பங்கேற்ற 'உள்ளங்கையில் உலகம்: புதையலே, புதைகுழியே' என்ற தலைப்பில் சுவையான நகைச்சுவைப் பட்டிமன்றம் நடந்தது. புகழ்பெற்ற நடுவர் திரு மோகன்ராமன் நடுவராக இருந்து சிறப்பித்தார்.
முத்தமிழுடன் கூடவே தலைவாழையிலை விருந்து என வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டுவிழா இனிதே நிறைவுற்றது.
தமிழ்ச்செல்வி, மேற்கு விண்ட்சர், நியூ ஜெர்சி |