மைத்ரி நாட்யாலயா: ஆண்டுவிழா
ஜூன் 8, 2019 அன்று திருமதி ஷிர்ணி காந்த் துவக்கி நடத்தும் மைத்ரி நாட்யாலயா நடனப்பள்ளியின் வருடாந்திர நிகழ்ச்சி மிஷன் சிட்டி சென்டர், சான்ட கிளாராவில் 'பவதீயா-நித்யமான நன்றி' என்ற தலைப்பில் தனது அனைத்து குருமார்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் அரிய கலைத் தொண்டினைப் போற்றும் விதமாக இந்நிகழ்ச்சியை அவர் வடிவமைத்திருந்தார்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், சங்கீத யோகி அன்னமாச்சார்யா, ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஸ்ரீ வேம்பட்டி சின்ன சத்யம் மற்றும் திருமதி ருக்மிணி தேவி அருண்டேல் ஆகியோரின் படைப்புகள் இந்நிகழ்ச்சியை அலங்கரித்தன.

பாலமுரளி கிருஷ்ணா எழுதிய பிரம்மாஞ்சலிப் பாடலுக்குப் பின், "பிருந்தாவன நிலையே" (ஊத்துக்காடு), குரு வேம்பட்டி சின்ன சத்யம் நடன அமைப்பில் அருமை. வசந்தா ராகத்தில் தஞ்சை நால்வரின் ஜதிஸ்வரத்துக்கு குரு ஸ்ரீ லக்ஷ்மண் நடனம் அமைத்திருந்தார். அன்னமாச்சாரியாவின் ஸ்ரீமன் நாராயண, கோவிந்தா பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார் திருமதி ஷிர்ணி காந்த். ஹிந்தோளராகத் தில்லானா, ருக்மிணி தேவி நடன அமைப்பில் அற்புதமாக இருந்தது.

தியாகராஜரின் "எந்தரோ மஹானுபாவுலு" நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இப்பாடல் மற்றும் நடனத்திற்கு இசைக்கலைஞர்கள் ஸ்ரீபாதுகா அகாடமியின் அனிருத் ராஜா, அவினாஷ் அனந்த் (வாய்ப்பட்டு), குரு ஸ்ரீ ரமேஷ் ஸ்ரீனிவாசனின் சிஷ்யர்களான அஸ்வின் சூர்யா, ஆதித் கொல்லி (மிருதங்கம்), குரு ஸ்ரீ சுசிலா நரசிம்மன் மற்றும் அவரது சிஷ்யர் ராகவ் நரசிம்மன் (வயலின்), குரு திருமதி தீபா மகாதேவன், சிஷ்யர் நவ்யா மைத்ரி கொண்டா (நட்டுவாங்கம்) ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

கலை இயக்குநர் ஷிர்ணி காந்த் நன்றி தெரிவித்து விழாவை இனிதே நிறைவு செய்தார்.

தென்னரசு,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com