பாஸ்டன்: சம்ஸ்கிருதி நடனப்பள்ளி ஆண்டு விழா
ஜூன் 17, 2019 அன்று குரு திருமதி செளம்யா ராஜாராம் அவர்களின் சம்ஸ்கிருதி நடனப்பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா, நடன வளாகத்தில் (The Dance Complex, 536 மாசசூஸட்ஸ் அவென்யூ, கேம்பிரிட்ஜ்) சிறப்பாக நடந்தேறியது. கலாக்ஷேத்ராவில் கற்றுத் தேர்ந்த சௌம்யா, லெக்ஸிங்டனில் (பாஸ்டன்) பரதம் கற்பிக்கிறார்.

நிகழ்ச்சி ஹரிணி ஜவஹர் ஆடிய நாட்யாஞ்சலியுடன் தொடங்கியது. இதில் அழகாக வினாயகர், சிவன், விஷ்ணு, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கும் குருவுக்கும் அஞ்சலி செய்தார். அடுத்து, வசந்தா ராகம், ரூபக தாள ஜதிஸ்வரத்துக்கு மாணவியர் அனன்யா ஶ்ரீநிவாசன், லக்‌ஷ்யா ஶ்ரீநிவாசன், ஷ்ரேயா ஶ்ரீநிவாசன், மீரா சந்திரசேகரன், மாயா விஸ்வநாதன், ஸ்வேதா கௌண்டின்யா, ஷ்ரேயா ராமனாதன் ஆடினர். சுறுசுறுப்பான நாட்டிய அசைவுகளுடன், தாளக்கட்டுடன் கூடிய சுத்தமான அடவுகளுக்கு இவர்கள் ஆடிய விதம் கண்கொள்ளாக் காட்சி.

பின்னர் முத்துதாண்டவரின் மோகன ராகம், ரூபக தாளத்தில் "அருமருந்தொரு தனிமருந்து" என்ற க்ருதிக்கு ஆராத்யா சிவகுமார், சாரா ரதூரி, மீனாக்‌ஷி தோத்தாத்ரி, சம்யுக்தா ராஜாராம் சிறப்பாக ஆடினர். பிறகு பாபநாசம் சிவனின் "சுவாமி, நான் உந்தன் அடிமை" என்ற நாட்டக்குறிச்சி வர்ணத்துக்கு ஆடிய ரேவதி மாசிலாமணி, பாடல் வரிகளுக்கு உயிரூட்டினார் என்றால் மிகையல்ல. ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யரின் ஆதி தாள, மோகன ராக "ஸ்வாகதம் க்ருஷ்ணா" அடுத்து வந்தது. இதற்கு மாணவியர் ரியா பாலசந்தர், ஸுமேதா கிரிதரன், ஷர்மதா ராஜாராம், ஸவிதா ஶ்ரீநிவாசன், அனன்யா கோபால், மாயா விஸ்வநாதன் ஆடியபோது இந்த இளம்பெண்களின் தீவிர உழைப்பு அதில் தெரிந்தது. கிருஷ்ணரின் மகிமைகளையும், லீலைகளையும் வர்ணித்த விதம் மெய் சிலிர்க்கவைத்தது. நிருத்யத்தில் எடுப்பாக இருந்த நிருத்தா (பாவம்) பிரமாதம்.

அடுத்து ஶ்ரீநிவாச அய்யங்காரின் தேவி ராஜராஜேஸ்வரி மீதான பராஸ் ராகத் தில்லானாவான "இராமநாதபுர" வந்தது. அனன்யா ஶ்ரீநிவாசன், லக்‌ஷ்யா ஶ்ரீநிவாசன், ஷ்ரேயா ஶ்ரீநிவாசன், மீரா சந்திரசேகரன், மாயா விஸ்வநாதன், ஸ்வேதா கௌண்டின்யா, ஷ்ரேயா ராமனாதன் துரிதகதியில் இணைந்து அபாரமாக ஆடினர். பின்னர் பிலஹரி ராகம் ஆதி தாளத்தில் அமைந்த அடுத்த தில்லானாவுக்கு ரேவதி மாசிலாமணி, ஹரிணி ஜவஹர், நீலாக்சி மணிராஜா இயைந்து ஆடி, பாத வேலப்பாடுகளை வெளிக்கொணர்ந்த விதம் அழகு.

இறுதியாக, அனைவரும் சேர்ந்து"திந்தின தினமே சுபதினமே" என்ற மங்களப் பாடலுக்கு ஆடி நிறைவு செய்தபோது பார்வையாளர் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தனர். குரு சௌம்யாவின் நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

சரஸ்வதி தியாகராஜன்,
பாஸ்டன், மாசசூஸட்ஸ்

© TamilOnline.com