சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொன் விழா
1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சிகாகோ தமிழ்ச் சங்கம்' வட அமெரிக்காவின் முன்னோடித் தமிழ்ச் சங்கம். இந்த ஆண்டு 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், சங்கம் அமைய உழைத்த சான்றோரைச் சிறப்பிக்கவும், சங்கத்தின் அருமை பெருமைகளைப் பகிர்ந்துகொள்ளவும், 10ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32ஆம் தமிழ் விழாவோடு சங்கத்தின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது.

சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆற்றி வரும் பணிகளில் சில: இங்கு வளரும் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழைக் கொண்டு செல்வதற்கான நிகழ்ச்சிகளை நடத்துதல். புறநகர்ப் பகுதிகளில் சிறுவர்களுக்கான தமிழ்ப் பள்ளிகள் உருவாக ஊக்கமளித்தல். தமிழ்ச் சமூகம் மற்றும் மொழிமீது அக்கறை கொண்டவர்களாக இளைஞர்கள் செயல்பட உதவுதல். தமிழ் இளைஞர்களுக்கு வேலையைத் தேர்ந்தெடுத்தல், தொழில் நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி பெறுதல், வேலையில் சேருதல் முதலியவற்றுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்துதல். ஆண்டுக்கொரு முறை இன்பச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் 'இளையோர் பாசறை' அமைத்துச் செயல்படுத்தி வருகிறது.

மகளிர் புரவலர்களை அழைத்து, மகளிர் மேம்பாடு, சிறார் வளர்ப்பு, தாய்மை, தமிழ்க் கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை மகளிரணி' நடத்திவருகிறது.

சிகாகோ பெருநகரத்திலுள்ள தமிழ் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தொழில் தொடர்பான அகராதி உருவாக்குதல், மற்றும் காலாண்டுக்கு ஒருமுறை சந்திப்புகள் ஏற்படுத்துதல் போன்ற செயல்களை 'அமெரிக்கத் தமிழ் முனைவோர் அமைப்பு' செய்து வருகிறது.

சிகாகோவை இணைக்கும் சில நெடுஞ்சாலைகளைத் தூய்மையாக வைத்திருக்கப் பொறுப்பெடுத்துப் பணியாற்றுவதுடன். மற்றத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பசியில் வாடும் சிறுவர்களுக்கு உணவளித்து வருகிறது.

பொங்கல், முத்தமிழ் விழா, இசைத் திருவிழா, அன்னையர் தினம், குழந்தைகள் தினம், 5000 மீ. நெடுந்தூர ஓட்டம்/சைக்கிள், தலைமைப் பண்பு உருவாக்கப் பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
10ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை, அனைத்துலகத் தமிழாய்வு மன்றம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து நடத்த, சிகாகோ தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைக்கிறது. இம்மாநாட்டிற்கு வட அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்களும் பங்களிக்கவுள்ளன. இம்மாநாடு கோடையில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு, வட அமெரிக்க மண்ணில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. சுற்றமும் நட்பும் சூழத் தமிழன்பர்கள் வந்து பங்கேற்கச் சிகாகோ தமிழ்ச்சங்கம் அழைக்கிறது. இது குறித்த பிற விவரங்கள் இவ்விதழின் வேறு பக்கத்தில் வெளியாகியுள்ளன.

மணி குணசேகரன்,
சிகாகோ தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com