காதில் விழுந்தது...
அப்போது எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டதுதான் எனக்கு நடந்திருக்கக் கூடியதிலேயே மிக நல்ல நிகழ்ச்சி... சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலைமேல் கல்லைப் போடும். தளராதீர்கள். அப்போதும் என்னால் வாழ்க்கையைத் தொடர முடிந்ததற்கு ஒரே காரணம் என் வேலை எனக்குப் பிடித்திருந்தனால்தான் என்று உறுதியாக நம்புகிறேன். வேலை உங்கள் வாழ்க்கையில் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறது. சிறப்பான வேலையைச் செய்கிறோம் என்று நீங்களே நம்பினால்தான் உங்களுக்கு மன நிறைவாயிருக்கும்.

வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி பிடித்த வேலையைச் செய்வதுதான். பிடித்த வேலை கிடைக்கவில்லையென்றால், தேடிக் கொண்டே இருங்கள். சமரசம் வேண்டாம். கிடைக்கும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். ஆண்டுகள் ஓடஓட வேலையின் சுவையும் கூடிக் கொண்டே இருக்கும். கிடைக்கும்வரை தேடிக் கொண்டே இருங்கள். சமரசம் வேண்டாம்.

நாம் வாழ்வது சொற்பநாள், அதை இன்னொருவர் போல் வாழ்ந்து வீணடிக்காதீர்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் கணினி நிறுவனர்.
ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையில்.

*****


சிலிக்கன் நுண்சில்லுகளைக் (microchip) உருவாக்கிய ஜாக் கில்பி சொன்னார் "நோபல் பரிசுகள் எல்லாம் உண்மையான அறிவைத் தேடும் விஞ்ஞானிகளுக்கு. நான் ஒரு பொறியாளன். சிக்கல்களுக்குத் தீர்வு காணத் துடிப்பவன். செயலாக்க முனைபவன். என்னைப் போன்றவர்களுக்குப் பரிசெல்லாம், வெற்றிகரமான தீர்வை அடைவதுதான்." பல ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்றாலும், அண்மையில் 81 வயதில் இறந்த கில்பிக்குத் தனது கண்டு பிடிப்பு அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமான பகுதியாவதைப் பார்த்ததே உண்மையான வெகுமதி. டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தில் குட்டி இளநிலைப் பொறியாளராக இருந்தபோது தான் கண்டு பிடித்த நுண்சில்லுத் தொழில் நுட்பம் பின்னால் கணிப்பி (calculator), கணினி (computer), இலக்கப் படக்கருவி (digital camera), இதயத் துடிப்பூக்கி (pacemaker), செல்பேசி (mobile phone), விண்வெளிப் பயணம் என்ற எண்ணற்ற முறைகளில் பயன்படுவது கண்டு அவர் மலைத்தார்.

"மனிதர்களின் திறமையும், படைப்பாற்றலும் சாதிப்பது வியக்கத்தக்கது. என் பங்கு இதில் சொற்பம் தான்" என்றார் அடக்கத்துடன்.

டி. ஆர். ரீட், வாஷிங்டன் போஸ்ட்

*****


உலகின் மிகப்பெரிய எரிபொருள் நுகர்வோர் நாடுகளில் ஐந்தாவது இடத்தை வகிக்கும் இந்தியா, 2002-ல் தினமும் 538 மில்லியன் டன் எண்ணைக்கு நிகரான எரிபொருளைப் புழங்கியது. 2030-க்குள் இது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதே இந்தியா தனக்குத் தேவையான எண்ணையில் 70 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இன்னும் இருபது ஆண்டுகளில் இது 85 சதவீதமாகக் கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது. இந்தியாவின் எரிவாயுத் தேவையும் கூடிக்கொண்டே போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பெரும்பான்மை இறக்குமதிதான். இந்தத் தேவைகள் மெல்ல மெல்ல இந்தியாவை மாற்றி வருகின்றன. அதன் அண்டை நாடுகளுடான உறவுகள் மேம்படுகின்றன; எண்ணை நாடுகளை எட்டுகிறது; அணு சக்தித் தேவைகள் வாஷிங்டனின் தடைக் கற்களைக் கடக்க வைக்கின்றன.

சோமினி சென்குப்தா, நியூயார்க் டைம்ஸ்

*****


கடந்த சில ஆண்டுகளாக, இந்தியக் குடியேறிகளின் குழந்தைகள் - மக்கள் தொகையில் 1 சதவீதத்தை விடக் குறைவான தொகையினர் - எழுத்துக் கூட்டல் போட்டியில் (spelling bee) கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை முதலிடம், இந்த ஆண்டு 273 போட்டியாளர்களில் 30 பேர் என்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார் கள். 1985-ல் பாலு நடராஜன் என்ற 13 வயதுச் சிறுவன் இந்தப் போட்டியில் வென்றதிலிருந்து இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையும் இதைச் சாதிக்க வேண்டும் என்று முழுமுனைப்புடன் ஈடுபடு கிறார்கள். இந்தியக் குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றாகப் படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், கல்வியறிவின் ஆற்றலை உணர்ந்தவர்கள் என்பவை கூடுதல் நன்மை. இந்தியாவைப் போலவே மனப்பாடம் செய்வதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றப் பெற்றோர்கள் டென்னிஸ், இசை போன்றவற்றில் குறியாக இருப்பதைப் போல இந்தியப் பெற்றோர்கள் எழுத்துக் கூட்டல் போட்டியை எடுத்துக் கொள்கிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ்

*****


சீனா எவ்வளவுதான் பெரிதாகிக் கொண்டிருந்தாலும், வலிமை கூடினாலும், அமெரிக்கா உச்சநிலையை எட்டி நிற்கும் போது சீனா துச்சம்தான்.

நியூ யார்க் டைம்ஸ் தலையங்கம்.

*****


முஸ்லிம் சமயப் பள்ளிகளான மதரசாக்கள் ஏழை மக்களைப் பயிற்றுவித்து முஸ்லிம் பயங்கரவாதிகளாக்குகிறார்கள் என்று காலின் பௌவல், டானால்டு ரம்ஸ்பெல்டு உட்படப் பலரும் நம்புகிறார்கள். மதரசாக் கள் அரபு மொழிக் குர் ஆனை உருத்தட்டும் அடிப்படை வாதிகளை உருவாக்குகின்றனவே ஒழிய பயங்கர வாதத்துக்குத் தேவையான தொழில் நுட்பம், மொழியியல் திறன் இவற்றைக் கற்பிக்கின்றன என்பதற்கு ஏதும் ஆதாரம் இல்லை. நம்மைத் தாக்கிய பயங்கரவாதிகளில் பெரும்பான்மையான வர்கள் கல்லூரிகளில், அதிலும் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள்.

பீட்டர் பெர்கன், ஸ்வாதி பாண்டே, நியூ யார்க் டைம்ஸ்

*****


அமெரிக்கர்களுக்குத் தாங்கள் அற வழி நடப்பவர்கள் என்ற உணர்வு உண்டு. உலகில் மனித உரிமைகளுக்காகப் போராடுவதில் நாம் தலைமை வகித்தோம். சிறைக்கைதிகளை நாம் சித்திரவதைப்படுத்துவதால் நம் அறவழிக் கோட்பாடுகள் போலியானவை என்று உலகு கருத ஏதுவாகிறது. நாம் சட்டத்தை மதிப்பவர்கள். எந்த அரசாங்கமும் சட்டத்தின் கீழ்ப்பணிய வேண்டும் என்று நாம் நமக்கே சொல்கிறோம்.

பல ஆண்டுகளாக உலகின் பல அரசுகளை விதிமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறோம். நாமே விதிகளை மீறும்போது நம் கடந்தகால முயற்சிகள் விரயமாகின்றன. நீதிபதி லூயி பிராண்டே உள்நாட்டுச் சட்டத்தைப் பற்றிச் சொன்னது பன்னாட்டுச் சட்டத்துக்கும் பொருந்துகிறது: "அரசே சட்டத்தை மீறும்போது, சட்டம் மதிப்பிழந்து போகிறது."

அந்தோனி லூயிஸ், முன்னாள் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர்

*****


நெடுஞ்செவியன்

© TamilOnline.com