தெரியுமா?: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது
மே 25-26, 2019 நாட்களில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 45ஆவது மாநாடு கண்டோர் மனம் களிக்கக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 'மண்வாசனை' என்ற மையக்கருத்தில், தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் கல்வி மற்றும் சமூகநலத் திட்டங்களைத் தொடர்ந்து நடத்திவர, வைப்புநிதி (Corpus Fund) உருவாக்குவதே மாநாட்டின் நோக்கம்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சுமார் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் $100,000 நிதி திரட்டப்பட்டது. அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) பேராதரவுடன், TNF-ஜார்ஜியா கிளை முன்னெடுத்து நடத்திய இந்த மாநாட்டில் மக்களின் முனிவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் கல்வி மற்றும் மனிதநேயச் சேவையைப் பாராட்டி 'மாட்சிமை விருது' வழங்கப்பட்டது. அதே போல TNF தமிழ்நாட்டுக் கிளையைத் தொலைநோக்குப் பார்வையோடு தலைமை வகித்து நடத்தும் திரு. ராஜரத்தினம் IAS அவர்களுக்கு 'சிறப்புமிகு சேவை விருது' வழங்கப்பட்டது.

சிறப்புரையாற்றிய இந்தியத் தூதரகத்தின் (அட்லாண்டா கிளை) தலைவர் திரு அசிம் குமார், வாய்ப்பு வசதியற்றவர் தேவைக்காக இயங்கி வரும் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தும் அறக்கட்டளையின் சேவை பாராட்டுக்குரியது என்றும், அதேபோல், தமிழ்நாட்டு நிறுவனங்களோடு தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதன் மூலம் இவர்களுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்க முடியும் என்றும் கூறினார்.

ATEA (American Tamil Entrepreneurs Association) நடத்திய தொழில்முனைவோருக்கான கூட்டம், அமெரிக்காவில் உள்ள இந்தியத் தொழில் முனைவோரை வளர்த்து, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இருந்தது. 50க்கும் மேற்பட்ட இரண்டாம் தலைமுறை அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள் பங்கேற்ற இளையோர் மாநாடு பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ளிருப்புப் பயிற்சி/சேவை (internship/volunteering) செய்வதன் மூலம், அவர்களுக்குத் தமிழ்ப் பாரம்பரியத்தோடு பிணைப்பு உண்டாகிறது என்று கூறினார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் சேக்கப்பன். இளையோர் ஸ்ரேயா ரமேஷ், மேக்னா சந்திரசேகரன் மற்றும் அனன்யா ராமநாதன் ஆகியோரின் சேவைத் திட்டங்கள் சிறந்தைவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் "தாய்மை" (TAYMAI – Tamil American Youth Making An Impact) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

தமிழோடு அறம் வளர்க்கும் தரமான கலை நிகழ்ச்சிகள் ஒருபுறம், அறக்கட்டளையின் 25 அமெரிக்க மாநிலக் கிளைகளும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் தங்கள் திட்டத்தைப்பற்றி இடையிடையே விளக்குவது ஒருபுறம் என இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகள் வரிசைகட்டி நின்றன. 120க்கும் மேற்பட்ட உள்ளூர்க் கலைஞர்கள் பங்கேற்ற மதுரை முரளிதரனின் 'கடையெழு வள்ளல்கள்' நாட்டிய நாடகமும், மக்களிசைக் கலைஞர்களான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி கலந்துகொண்ட மெல்லிசை நிகழ்ச்சியும், சிக்கில் குருசரணின் 'தமிழிசை உலா'வும் வெகுவாக ரசிக்கப்பட்டன.

இந்த மாநாடு, ஜார்ஜியாவிலும் சுற்றியுள்ள தென்கிழக்கு மாநிலங்களிலும் அறக்கட்டளை பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது என்றார் TNF தலைவர் திரு சோமலெ சோமசுந்தரம். 1200 உறுப்பினர்களுடன் தமிழக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு அமெரிக்காவெங்கும் இயங்கிவரும் தமிழ்நாடு அறக்கட்டளை, ஆண்டுதோறும் $1 மில்லியன் தொகையைக் கல்விக்காகவும், பிற சேவைகளுக்காகவும் அனுப்பி வைக்கிறது.

அடுத்த மாநாடு மிச்சிகன் மாநிலத்தில் 2010 மே 23-24 நாட்களில் நடைபெறவுள்ளது. உங்கள் மாவட்டத்தின் வைப்புநிதிக்காக நன்கொடை வழங்கத் திரண்டு வாருங்கள்!

மேலும் விவரங்களுக்கு: tnfusa.org

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com