நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும், ஏராளமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் இரா. மோகன் (69) மதுரையில் காலமானார். எழுத்தாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் எனப் பல திறக்குகளில் காலடி பதித்தவர் மோகன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒப்பிலக்கியத் துறைத் தலைவர். சாகித்ய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மோகன், பணி ஓய்வுக்குப் பின் மதுரை காமராஜர் பல்கலையின் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். பல்வேறு நூல்களின் தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றினார். 'ஒப்பியல் சிந்தனைகள்', 'தொல்காப்பியம் பொருளதிகாரம்', 'இலக்கியச் செல்வம்', 'உரை மரபுகள்', 'புதுக்கவிதைத் திறன்' போன்ற இவரது நூல்கள் முக்கியமானவை. இவரும் மனைவி திருமதி நிர்மலா மோகனும் இணைந்து பேசிய பட்டிமன்றங்கள் அறிவுக்கு விருந்து. ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கேற்றிருக்கிறார். உலகத்தமிழ் மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மாநாடு உட்படப் பல மாநாடுகள், கருத்தரங்குகளில் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார். தமிழக அரசின் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, மூவேந்தர் இலக்கிய விருது, தமிழ்ச்சுடர் விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். மாணவர்களைத் தம் குழந்தைகள் போல் நேசித்து ஊக்குவித்தவர். எப்போதும் புன்னகை மாறாத மோகன், திடீர் மாரடைப்பால் காலமானார். ஒரே மகள் அரசி அமெரிக்காவில் வசிக்கிறார்.
|