அம்மாவைத் தேடி
காலையில் எழுந்துவந்து பார்த்தால், வாசல் கதவு திறந்து கிடந்தது. கேட்டில் பூட்டு, சாவியுடன் தொங்கிக்கொண்டிருந்தது.

இந்த வேளையில் பூட்டைத் திறந்து, எங்கே போனாள் அம்மா? கமலாவும் இன்னும் எழுந்திருக்கவில்லையே... தனியாகவும் வெளியே போகமாட்டாளே... பூட்டைத் திறக்கத் தெரியுமா என்ன? கணேசன் குழம்பினான்.

அம்மாவை அறைகளில், பாத்ரூம்களில், கொல்லைப்புறத்தில், வாசலில், தெருவின் இருபுறமும் தேடினான் – காணவில்லை.

கொஞ்ச நாட்களாகவே அம்மாவுக்கு மறதி – சின்னச் சின்ன விஷயங்களை மறந்து விடுவாள். சில சமயங்களில், நாள், கிழமை கூட மறந்து விடும். காலையில் குளித்துச் சாப்பிட்டுவிட்டு, அரைமணியில் திரும்பவும் சென்று குளித்து, புடவை மாற்றிக் கொண்டு, கையில் தட்டை வைத்துக்கொண்டு, 'இன்னிக்கு என்ன சமையல்' என்பாள்! இருபத்தி ஐந்து வருடமாய்ப் பக்கத்து வீட்டில் இருந்த லட்சுமிப் பாட்டி இறந்தபோது, 'யாரிந்த லட்சுமிப் பாட்டி?' என்றாள்.

இந்த உலகில் தான் இருப்பதே தெரியாததுபோல, எங்கோ பார்த்தபடி, விட்டேத்தியாக உட்கார்ந்திருப்பாள்.

தினப்படித் தன் தேவைகளைக் கூட செய்துகொள்ள முடியாமல், ஒரு குழந்தையாக மாறிக்கொண்டு வரும் தன் மாமியாரைப் பார்த்து கமலா வருந்தினாள்.

"கமலா இன்னிக்கு சுள்ளுன்னு வெயில் அடிக்குது; மாவு கிளறி, வடாம் போட்டுடலாம்."

"வெள்ளிக்கிழமையாயிருக்கு, குழந்தைக்கு எண்ணை தேய்ச்சுக் குளிப்பாட்டி, தலைக்குச் சாம்பிராணி போட்டுடலாம்."

"சாயங்காலம் பிரதோஷம். பால் காய்ச்சி, தயிருக்குத் தோய்த்து வை, கோயில்ல கொண்டு கொடுத்துடலாம்."

"பாவம்டீ லட்சுமி, நம்ம வீட்லெ எவ்வளவு வேலை செய்யறா, அவளுக்கு ஒரு புதுப் புடவை இந்த நவராத்திரிக்கு எடுத்துக் கொடுத்திடலாம்."

சுறுசுறுப்பாய்ச் சுற்றி வந்த மாமியார், இப்படிப் பரப்பிரம்மமாய் ஒன்றுமே தெரியாமல் உட்கார்ந்து விட்டாளே என்று மனது குமுறியது.

ஃபேமிலி டாக்டர், "இது டிமென்ஷியாவின் ஆரம்ப நிலை – போகப் போக அதிகமாகத்தான் ஆகும். நாள், கிழமை, தேதி, இன்றைக்குச் சாப்பிட்டது என எதுவுமே நினைவுக்கு வராது. இருக்கிற இடம், அட்ரஸ், வருவோர் போவோர் எல்லாம் மறந்து விடும். தனியாக வெளியே போனால், வழி மறந்து தொலைந்து விடும் அபாயம் அதிகம். இத்தனை வருடங்கள் சேகரித்து வைத்திருந்த அத்தனை நினைவு விபரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மூளை இழந்துவிடும். தான் யார் என்பதேகூடச் சில சமயங்களில் மறந்துவிடும். இந்த வியாதி உள்ளவர்களைவிட, அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களே பரிதாபத்திற்குரியவர்கள்" என்று கூறியது நினைவுக்கு வந்தது.

"டாக்டர் சொன்னா மாதிரி காணாமல் போய்விட்டால், எங்கேன்னு போய்த் தேடுவது?" என்று கவலைப்பட்டாள் கமலா.

ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, அடுத்த தெருவில் இருந்த ராமதுரை வீட்டுக்குப் போனான் கணேசன். அவன் அம்மாவுக்கு இவன் அம்மா சிநேகிதி - அங்கே எங்கேயாவது போயிருப்பாளோ?

"இல்லையே கணேசா, அம்மா இங்கே வரலியே என்றான், கை வைத்த பனியனில் ராமதுரை.

"இப்போ என்ன செய்யறது?"

"கவலைப்படாதே, இங்கேதான் எங்கேயாவது பக்கத்துலெ போயிருப்பா, வந்துடுவா."

"அதுக்கில்லே ராமதுரை, அம்மாவுக்குத் திரும்பி வர வழி தெரியலைன்னா எங்கேயாவது போய்டுவா. எப்படிக்கண்டு பிடிக்கிறது?"

"சிரமம்தான். முதல்ல, அம்மாவோட போட்டோவ எடுத்துட்டுபோய், பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷன்லெ ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திறலாம். அப்புறம் தினப்பத்திரிகைலெ அம்மா படத்தோட, 'காணவில்லை' விளம்பரம் ஒன்றும் போட்டுறலாம். ஃபேஸ் புக், வாட்ஸப்லேயும் போஸ்ட் பண்ணிறலாம்."

கணேசனுக்கு வயிற்றைப் பிசைந்தது. "அம்மா நீ எங்கே இருக்கே?"

காலையில் தூங்கி வழிந்துகொண்டிருந்தது அந்தப் போலீஸ் ஸ்டேஷன். வாசல் ஸ்டூலில் அரைத் தூக்கத்தில் ஒரு போலீஸ். தூசு படிந்த ரைஃபிள் ஸ்டாண்ட். பெரிய மேஜையின் பின்னால் தொப்பி கழற்றி வைத்திருந்த ஒரு வழுக்கைத் தலைப் போலீஸ் – ரைட்டராக இருக்கலாம்.

கணேசன் சென்றபோது, காப்பிக்காகக் காத்திருந்த கான்ஸ்டபிள், தலையைச் சொறிந்து கொண்டிருந்தார்.

"காலைலேந்து எங்க அம்மாவைக் காணவில்லை சார், அதுதான் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருக்கேன்."

"என்ன ஆச்சு? வீட்ல ஏதாச்சும் சண்டையா?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே சார் - அவங்களுக்கு டிமென்ஷியா."

"ஓ, மனநிலை சரியில்லாதவங்களா?"

"இல்லை சார், அது ஒரு வகை மறதி வியாதி. அவங்க போட்டோவுடன் கம்ப்ளைண்ட் கொண்டு வந்திருக்கேன் சார்."

"தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க வீட்லே விசாரிச்சிட்டீங்களா? வீட்லேயே நல்லா தேடிப் பாத்தீங்களா? இப்டித்தான் ஒரு தபா, மாடிப் படிக்கட்டுக்குக் கீளயே ஒரு அம்மா தூங்கிக்கிட்டிருந்தாங்க."

"தெரிஞ்ச இடமெல்லாம் பாத்து, விசாரிச்சிட்டேன் சார். அம்மாவைக் காணவில்லை."

இரும்புக் கம்பி ட்ரேயில், டீ வந்தது.

"டீ சாப்பிடறீங்களா?"

"வேணாங்க."

கையில் போட்டோவையும், பேப்பரையும் வாங்கிக் கொண்டு, "நாங்க டெய்லி ரௌண்ட்ஸ் லைன்ல இருக்கிறவங்க கிட்டே இன்ஃபார்ம் பண்ணிடறோம். நீங்களும் தேடுங்க. எதுக்கும் ஒரு நடை ஜிஎச், ராயப்பேட்டை, ஈஎஸ்ஐ 'கேசுவாலிடி'லெ ஒரு தடவை விசாரிச்சுடுங்க" என்றார்.

கணேசனுக்கு 'திடுக்' கென்றது. 'அப்படியெல்லாம் இருக்கக்கூடாது' என்று மனம் வேண்டிக்கொண்டது. ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மார்க்கெட், கோயில், பார்க் எனச் சுற்றினான்.

எண்ணை தடவி, தலைவாரி பள்ளிக்கூடம் அனுப்பிய அம்மா, புதுச்சட்டை போட்டு அழகு பார்த்த அம்மா, உடம்பு சரியில்லை என்று குலதெய்வத்துக்குக் காசு முடிந்து வைத்த அம்மா, அப்பாவின் கண்டிப்புக்கு முன் அப்பாவியாய் வலம் வந்து குழந்தைகளுக்காகவே வாழ்ந்த அம்மா – இன்று காணவில்லை. கணேசனின் கண்களில் நீர் நிறைந்தது.

"அந்தப் பூக்காரி ஏழைடா, அவகிட்டயே பூ வாங்கு."

"ப்ளாட்ஃபாரம்லெ வியாபாரம் பண்றவங்க கிட்டே ரொம்ப பேரம் பேசாதடா – அவங்களுக்கு என்ன பெரிய லாபம் வந்துடப் போறது? சூப்பர் மார்க்கெட்டுலெ சத்தம் போடாமே, வாய மூடிக்கிட்டு வாங்கிட்டு வருவீங்க."

"பார்க்குல நடக்கிறத்துக்குப் பாதையெல்லாம் போட்டு, உட்கார பெஞ்சு, குடிக்கத் தண்ணீர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு – ரேடியோதான் மிஸ்ஸிங்."

எங்கும் அம்மாவே தெரிந்தாள். கணேசனுக்கு வேதனையாயிருந்தது. வானம் கருத்து, மேக மூட்டமாய் இருந்தது. "அம்மா குடை எடுத்துண்டு போயிருக்காளோ?" என்றது மனம்.

எங்கே போனாள் அம்மா?

தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லா வீட்டிலிருந்தும், "இங்கே வரவில்லையே" என்ற பதிலே எதிரொலித்தது.

11 மணி சுமாருக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன். "ராயப்பேட்டை அரசு மார்ச்சுவரியில நீங்க சொன்ன வயசிலே ஒரு பாடி வந்திருக்குதாம் – நம்ப ஏரியாவிலேர்ந்துதான். ஹிட் அண்ட் ரன் கேசு. நீங்க போய் ஒரு நடை பாத்துருங்க." ஒரு 'கிளிக்'குடன் அடங்கிப்போனது போன்.

"அம்மா" – வாய்விட்டு அலறினான் கணேசன்.

அந்த ஏரியாவிலேயே ஓர் அழுத்தமும், மரண அமைதியும் விரவியிருந்தது. பரட்டைத் தலையும், புகையிலைக் கறைப் பற்களுமாய் இரண்டு பேர் அழுதபடிக் குந்தியிருந்தனர். ஓரமாய் ஒரு கரை வேட்டி, ஆஸ்பத்திரி சிப்பந்தியுடன் பேசிக்கொண்டிருந்தது. போலீஸ் ஒருவர் மூக்கைப் பொத்தியபடி, அந்தக் கிடங்கிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். பிணவாடையை விட அதிக நெடியுடன் சாராய வாடை வீச, நீல யூனிஃபார்மிலிருந்த அவன் பேசினான். "என்னா, ஆக்ஸிடண்ட் கேசு பாக்க வந்துக்கிறீங்களா?" இடது கையால் கர்சீப்பில் மூக்கை மூடியபடி, தலையாட்டினான் கணேசன். நெடியைத் தொடர்ந்து கிடங்கின் உள்ளே சென்றான் – கதவைத் திறந்தவுடன் 'சில்'லென்ற காற்று பிண வாடையுடன் முகத்தில் அறைந்தது.

சலவைக்கல் மேசைமீது, வெள்ளைத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட, மனித சைஸ் மரப்பாச்சி பொம்மைகளாய் உடல்கள். கடைசி மேசையில் கிடந்த உடலின் முகம் தெரியத் துணியை விலக்கியது சாராய நெடி.

"நெல்லா பாரு சார்."

கணேசனுக்குத் தலை சுற்றுவதைப் போல் இருந்தது. வயிற்றைக் குமட்டியது. சற்று மெதுவாய் அருகில் சென்று பார்த்தான்.

நெற்றியில் பச்சை குத்தியிருந்தது. பற்களில் இரண்டு தெற்றியபடி, உதடு விரிந்து.... கன்னத்தில் தோல் தேய்ந்து.... ஒரு கண்ணில் கருரத்தம் கட்டி வீங்கி...

"இல்லீங்க", தலையை ஆட்டியபடி "இது என் அம்மா இல்லை" என்றபடியே ஓட்டமும் நடையுமாய் வெளியே வந்தான். பின்னாலேயே வந்த சாராய நெடிக்கு வணக்கம் சொல்லி, கையில் டீக்குப் பணமும் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

அழுவதா? சிரிப்பதா? அம்மா நீ எங்கே இருக்கிறாய்?

தினமும் வீட்டுக்கு வருவோரும் போவோரும் ஏதோ அம்மா இறந்து விட்டதைப் போல துக்கம் கேட்ட வண்ணமிருந்தனர். கணேசனுக்கே மனதில் அந்த சந்தேகம் மெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.

"பாவம்பா உங்கம்மா, புத்தி சுவாதீனம் வேற இல்லே, கவனமாப் பாத்துக்கக் கூடாதா?" என்றார் தூரத்துச் சொந்தம் மாமா.

புத்தி சுவாதீனமில்லாததும், டிமென்ஷியாவும் ஒண்ணுதானோ? புரியாமல் குழம்பினான் கணேசன்.

"இல்லே, இது ஏதோ மூளை சம்பந்தமான மறதி வியாதி. அம்மாவுக்கே தெரியாமல் எங்கேயோ காணாமல் போய்ட்டா. எங்கே எப்படிக் கஷ்டப்படறாளோ தெரியாது மாமா, கவலையா இருக்கு."

பதில் சொல்லியே ஓய்ந்து போனான் கணேசன்.

கமலாவுக்கும் வீட்டில் வேலையே ஓடவில்லை. 'இவ்வளவு பெரிய உலகத்தில் எந்த மூலைலே இருப்பா? இப்போ என்ன செய்து கொண்டிருப்பா? இருக்காளா இல்லையா?' ஒன்றும் புரியாமல் ஏதோ இயந்திரம் போல் சுற்றி வந்தாள்.

ஒரு வாரம் ஓடிவிட்டது. அம்மாவின் அறையில் கணேசன் அழுது கொண்டிருந்தான். புடவை, ரவிக்கை எல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள். தேங்காய் எண்ணை பாட்டில், சிடுக்குவாரி, சீப்பு எல்லாம் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் இருந்தன.

சுவரில் மாட்டியிருந்த பழைய போட்டோ – அந்தக் கால உடையில், கருப்புத் தொப்பியுடன் அப்பா, போர்த்திய முந்தானையுடன் அம்மா, கொம்பு வைத்த அரை நிஜாருடன் கணேசன், காதில் டோலக்குடன், பட்டுப் பாவாடையில் அருணா – கணேசனின் தங்கை.

அம்மாவுக்கு அருணாவைப் பற்றித்தான் கவலை. எவ்வளவு ஆசையாய் வளர்த்தாள்? இருபது வருட சொந்தத்தையும், பாசத்தையும் ஒரு நொடியில் உதறிவிட்டு, எதிர் வீட்டுக் கோபாலுவுடன் ஓடிவிட்டாள். வேதனையை விழுங்கி விட்டு, போட்டோவை வெறித்தபடி அம்மா, அருணாவின் நினைவில் உருக்குலைந்தாள் – இழப்பைவிட, அவளை இழந்த விதத்தில்தான் வருத்தம் அதிகமாக இருந்தது அம்மாவுக்கு.

"அம்மாவுக்கு அருணாவின் நினைவுதான் எப்போதும்" கவலையுடன் அருகில் வந்து நின்ற கமலாவைப் பார்த்தான் கணேசன். என்ன செய்வதென்று புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு கலங்கினர்.

கமலாதான் சொன்னாள்: "நம்ப திருநீர்மலைக் கோயிலுக்குப் போய் ரொம்ப நாளாயிடுச்சு. எப்போ, எந்தக்கஷ்டம் வந்தாலும் அவன்தான் நமக்குத் துணை. ஒரு தடவை போய் வருவோமா?" ஏதாவது நல்ல செய்தி கிடைக்காதா என்ற ஆதங்கத்தில் சொன்னாள். வீட்டிலேயே அடைந்து கிடக்கும் கணேசனுக்கும் மாறுதலாகவும், ஆறுதலாகவும் இருக்குமே என்று நினைத்தாள்.

"நம்மைப் போன்றவர்களுக்கு தெய்வத்தைத் தவிர வேறு யார் துணை, போகலாம்" என்றான் கணேசன்.

அந்தச் சனிக்கிழமை காலையிலேயே வாடகைக் கார் ஒன்றில், கமலாவுடன் திருநீர்மலைக்குக் கிளம்பினான். நான்கைந்து வருடங்களுக்கு முன் அம்மாவுடன் அந்தக் கோயிலுக்குச் சென்றது மனதில் நிழலாடியது.

பல்லாவரம் சிக்னலில் நின்று, ஊர்ந்து பின் வலது புறம் திரும்பி, திருநீர்மலை செல்லும் வளைந்த சாலையில் சில ஓட்டு வீடுகள், பெட்டிக் கடைகள் தாண்டி, மலையடிவாரத்தில் கார் நின்றது. இடது புறம் கோயில் குளமும், வலது புறம் தென்னங்கீற்றுத் தொப்பியுடன் கோயில் தேரும் வரவேற்றன. காரிலிருந்து இறங்கிக் கையில் அர்ச்சனைத் தட்டுடன் கீழேயிருந்த ராமர் சன்னதி நோக்கிச் சென்றான். 'நின்றான், இருந்தான், கிடந்தான்' என மூன்று நிலைகளிலும் இங்குதான் பெருமாள் இருக்கிறார் - அம்மா என்றோ சொன்னது நினைவுக்கு வந்தது.

கோயில் வாசலில் சின்ன மரப்பெட்டியின் மேல், மல்லி, முல்லை, இருவாட்சி, துளசி மாலை எல்லாம் அழகாக அன்றைய வியாபாரத்துக்காக வைக்கப் பட்டிருந்தன. அருகில் அமர்ந்து குனிந்த தலையுடன் துளசி தொடுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து திகைத்து, "அம்மா" என்றலறியபடி ஓடினான் கணேசன். பின்னாலேயே கமலாவும்!

நிமிர்ந்து பார்த்தவள், முகத்தில் ஒரு சலனமுமின்றி, "வா கணேசா, வா. எங்கே இத்தனை நாளும் காணாமப் போய்ட்டே? தேடித் தேடி ஓஞ்சு போய்ட்டேண்டா. எங்கே போனே நீ? நல்லவேளை அருணா என்னைத் தன் வீட்டில் கொண்டு வெச்சுண்டா" என்றாள்.

"என்னம்மா சொல்றே நீ, அருணாவா? நீ எப்படிம்மா இங்கே வந்தே?"

"அம்மா என்னைத் தெரியலையா?" என்றாள் கமலா கண்ணில் நீருடன்.

"நல்லா இருக்கு, நாளுங்கிழமையுமா கேக்கற கேள்வியும், கண்ணுல நீருமா. அருணா இப்பொ வந்துடுவா – இந்தக் கடை அவளுதுதான்." ஒரு பழைய சுங்குடிப் புடவை, லூசாக ஒரு ரவிக்கை, நெற்றியில் துளிக் குங்குமம், காதிலும், மூக்கிலும் இருந்த வைரங்களைக் காணவில்லை – அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றான் கணேசன்.

"என்னா சாமி, இன்னா வேணும்? மல்லியா கதம்பமா?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான் கணேசன். 'நீ யார்?' என்பது போல் பார்த்தான்.

முழங்கால் வரை தூக்கிச் சொருகிய சேலை, இடுப்பில் ஒரு பக்கம் சுருக்குப் பை, மறுபக்கம் கூடையில் துடைப்பம், வெற்றிலைக் கறை ஏறிய பற்களுடன், கோதிய செம்பட்டைத் தலைமுடியுடன் நின்றிருந்த அந்தப் பெண்மணியிடம், "இந்த அம்மா..." என்று ஆரம்பித்தான்.

கமலாவும் அம்மாவும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"தெனமும் கோயில் பெருக்கி, சுத்தம் செய்யறது என்வேலை. கொஞ்சம் பூ வியாபாரமும் செய்வேன் சார். போனவாரம், ஒரு நா காலீல கோயில் வாசப்படியாண்ட வுயுந்து கிடந்தது இந்தம்மா. என்னமோ ஏதோன்னு, எளுப்பி ஒக்காரவெச்சா, "இன்னா அருணா, நெல்லா இருக்கிறியா? கொஞ்சம் காப்பி குடேன்"னுது. பேஜாராய்ட்டேன். எத்த கேட்டாலும் ஒண்ணியும் தெரிலே, முளிக்குது. 'அருணா, உன் கையாலே காப்பி குடு'ன்னு மட்டும் கேட்டுக்கினே இருக்குது. சரி, கொஞ்சம் டைம் வுட்டு கேக்கலாம்ன்னுட்டு, காப்பித் தண்ணி வாங்கிக் குடுத்தேன். வேற ஒண்ணியும் சொல்ல மாட்டேங்குது. கோயிலய்யிரும் பாத்துட்டு, 'வசதியான குடும்பத்திலேர்ந்து வந்த மாமியாட்டம் இருக்குது, கொஞ்சம் மைண்ட் சரியில்லெ போல – பாக்கலாம் ஒருவாரம்'ன்னிட்டாரு. என் கூடவே குடிசையிலே கஞ்சியும், கடை இட்லியும் துண்ணுக்கினு, பூக்கடையிலேயே குந்திக்கினு இருக்குது சார். ஆனா, தொளசி சும்மா சூப்பரா தொடுக்குது சார்!"

"அம்மா நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது...." கணேசன்குரல் உடைந்தது – 'இது எங்கம்மா' என்றான்.

சந்தேகமாகப் பார்த்தாள் அவள் 'பின்னே ஏன்யா தனியா ரோடுலே வுட்டே?' என்று கேட்பதைப் போல இருந்தது.

"அவங்களுக்கு ஒரு மறதி வியாதி. தானே வீட்டை விட்டு வந்துட்டாங்க. திரும்பிப் போறவழி மறந்து, இங்கே வந்து விழுந்திருக்காங்க. நல்லவேளை நீங்க அவங்களை பத்திரமாப் பாத்துக்கிட்டிருக்கீங்க. ரொம்ப நன்றிம்மா. ஒரு வாரமா தேடித் தேடி எங்கேயும் கெடைக்காம – நரகமாயிருந்தது வாழ்க்கை." என்றபடித் தன் பர்சில் வைத்திருந்த அம்மாவின் போட்டோவைக் காண்பித்தான்.

"ஐயோ பாவம்; சாக்கிரதையா பாத்துக்க மவராசா. பெத்தவங்கதான்யா நடமாடற தெய்வங்க. எனக்கு இந்த ஒரு வாரத்துல இவங்க மேலெ ரொம்ப பாசமாயிடிச்சிய்யா" என்றாள் கண்ணின் ஈரத்தைத் துடைத்தவாறே.

இப்படிக்கூட இந்தக் காலத்தில் மனிதர்களா? அதிசயமாயிருந்தது கணேசனுக்கு.

"அம்மா, வீட்டுக்குப் போகலாமா?"

"அருணா?"

கணேசனும், கமலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அந்தப் பூக்காரப் பெண்மணி, "யார் சார் அந்த அருணா?" என்றாள். பழைய கதையைக் கேட்டுவிட்டு, "யம்மா, இப்பொ அண்ணங்கூட வூட்டுக்குப் போ. நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு பொறவு வரேன்" என்றாள்.

"சரி, மறக்காம வந்துடு" என்றபடி கணேசனுடன் கிளம்பினாள் அம்மா.

மலையேறி, பெருமாளுக்கு நன்றி கூறித் திரும்பினார்கள். கோயில் குருக்களும், பூக்காரம்மாவின் உதவியை மிகவும் பாராட்டினார்.

கீழே இறங்கிய அம்மா சுற்றும் முற்றும் தேடினாள். 'அருணா எங்கே?' என்றாள். அவளைக் காணவில்லை. அம்மா கிடைத்த சந்தோஷத்தில், அவளுக்குக் கூட ஒன்றும் கொடுக்கவில்லையே என்று கணேசனும், கமலாவும் உடன் தேடினார்கள்.

மூச்சிரைக்க ஓடி வந்த அந்தப் பெண்மணி, கையில் இட்டிலிப் பொட்டலமும், சின்ன சொம்பில் காப்பியும் கொண்டுவந்து கொடுத்து, "துண்னுட்டுப் போம்மா" என்றாள்.

"அருணா உனக்கு?" என்றாள் அம்மா!

கணேசன் வாயடைத்துப் போனான். கமலா அப்பெண்மணியின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

கொடுக்க வந்த பணத்தையும் வேண்டாம் என்றாள் அந்தப் பூக்காரி!

அம்மாவுடன் கணேசன் புறப்பட, கார்க் கண்ணாடியில், பின்னால் அவள் ஓடிவருவது தெரிந்தது. காரை நிறுத்தி இறங்கினான்.

"இந்தா சார், மறந்தே போய்ட்டேன். அம்மா காதுல போட்டிருந்த தோடு, மூக்குத்தி. இங்கே சேப்டி கெடையாதுன்னு களட்டி வீட்டு உள்ளே வெச்சிருந்தேன்."

அம்மாவையும் நகைகளையும் மாறி மாறிப் பார்த்தான் கணேசன். கணவனின் மனமறிந்த கமலா, "எங்க வீட்டுக்கு நீங்க எப்பவும் வரலாம். எந்த உதவியும் உங்களுக்குச் செய்ய தயாரா இருக்கோம்" என்று சொல்லி, அம்மாவிடம் நகைகளைக் கொடுத்து, 'அருணாவுக்கு கொடுத்து விடுங்கள்' என்றாள்.

அம்மா முதன்முறையாகச் சிரித்தாள்!

மலைக்கோயில் மணியோசை கீழே கேட்டது!

டாக்டர் ஜெ.பாஸ்கரன்

© TamilOnline.com