மார்ச் 30, 2019 அன்று செல்வன் கிருஷ்ணா பிரசன்னனின் கடம் அரங்கேற்றம் போர்ட்லாண்டில் உள்ள லேக்ரிட்ஜ் உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது. கிருஷ்ணா மேற்கு சில்வன் நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர். மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் ஆசிரியராக அமெரிக்கா, ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான் போன்ற பல நாடுகளில் கச்சேரிகள் நடத்தி பல விருதுகளைப் பெற்றவரும், இந்தியாவில் வசிப்பவருமான டி.எச். சுபாஷ் சந்திரன், இவரது வாசிப்பைப் பார்த்து "கிருஷ்ணாவின் கைகள் கடம் வாசிக்கவே அமைந்தவை" என்று ஆர்வமூட்டினார். கிருஷ்ணா உள்ளூரில் சங்கரா டிரம்மிங் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்று தியாகராஜர் ஆராதனை, மார்கழி உற்சவம் எனப் பல இசை விழாக்களில் பங்கேற்றுள்ளார்.
போர்ட்லாண்டில் உள்ள கடம் வல்லுநர்கள் முரளி கிருஷ்ணாவும், விஷால் ஆர். சாபூரமும் கிருஷ்ணாவின் லயத் திறமையைப் பிரகாசிக்கச் செய்துள்ளனர். குரு தாயார் ஷைலஜா பிரசன்னன் மற்றும் ஸ்மிதா சக்ரவர்த்தியிடம் வாய்ப்பாட்டும் கற்று வருகிறார் கிருஷ்ணா. ஆறு வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய கிருஷ்ணா நான்கு வயதுமுதல் சின்மயா மிஷன் பாலவிஹார் வகுப்புகளில் சேர்ந்து பகவத்கீதை ஒப்பித்தலில் பரிசுகள் பெற்றுள்ளார். பள்ளியின் பேண்ட் இசைக்குழுவிலும் உள்ள இவர் ஹரி ஐயரிடம் சாக்ஸஃபோன் கற்றுள்ளார். சாரணர் இயக்கத்தில் சிறப்பு விருது பெற்றுள்ளார். இயன்றவரை பிறருக்கு உதவுவது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.
அரங்கேற்றம், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் "வாதாபி கணபதிம்" பாடலில் தொடங்கியது. தியாகராஜரின் "வரநாரதா", "அனுராகமுலு", "சாமகான" பாடல்கள் தொடர்ந்தன. தோடி ராகத்தில் "தாயே யசோதா" பாடலுக்கு கடம் வாசிப்பு சிறப்பாக இருந்தது. "கிருஷ்ணா நீ பேகனே பாரோ", "நீரஜநயனா" பாடல்களுக்குப் பின் ராகமாலிகையில் மகாபெரியவரின் "மைத்ரிம் பஜத" பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
டாக்டர் மீனா அருணாச்சலம், போர்ட்லாண்ட், டெக்சஸ் |