மார்ச் 31 , 2019 அன்று செல்வி திவ்யா ஸ்ரீ இந்திரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சான் ஹோசே இண்டிபென்டென்ஸ் உயர்நிலைப்பள்ளி அரங்கில் சிறப்பாக நடந்தது. ஸ்ரீ லலிதகான வித்யாலயாவில் இசை பயிலும் இவர், ஃப்ரீமான்ட் மிஷன் சான் ஹோசே உயர்நிலைப்பள்ளியில் இறுதிநிலை மாணவி.
லால்குடி ஜெயராமனின் சாருகேசி பத வர்ணம் மற்றும் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் "விநாயகா"வுடன் தொடங்கியது நிகழ்ச்சி. "சாதிஞ்சனே" என்ற ஸ்ரீ தியாகராஜரின் ஆரபி ராகக் கிருதியை அடுத்து வந்தது தேவியரின் மீதான இரண்டு கிருதிகள் - ஹிந்தோளத்தில் முத்துசுவாமி தீக்ஷிதரின் "சரஸ்வதி விதி யுவதி" மற்றும் "ஜனனி நின்னுவினா" என்ற சுப்பராய சாஸ்திரிகளின் ரீதிகௌளை ராக கிருதி. பஹுதாரியில் "ப்ரோவ பாரமா" என்கிற தியாகராஜ கிருதியும், "நீரத சமநீல கிருஷ்ணா" என்ற ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஜெயந்தஸ்ரீ ராக பாடலும் வெகு சிறப்பு. கரஹரப்ரியாவில் "செந்தில் ஆண்டவன்" பாபநாசம் சிவன் கிருதியை நிகழ்ச்சியின் மையப்பாடலாக, ராக ஆலாபனையுடன் தொடங்கி, கல்பனா ஸ்வரங்களுடன் பாடினார். ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் மிருதங்கமும், விக்ரம் ரகு குமார் வயலினும் நிகழ்ச்சிக்குச் சிறப்புக் கூட்டின.
இரண்டாம் பகுதியில் ஜனரஞ்சகமான பாடல்கள் இடம்பெற்றன. ரேவதி ராகத்தில் தஞ்சாவூர் சங்கர ஐயரின் "மஹாதேவ சிவசம்போ", பீம்பிளாசில் சுப்ரமண்ய பாரதியின் "வெள்ளைத் தாமரை", காபி ராகத்தில் "என்ன தவம் செய்தனை" என்ற பாபநாசம் சிவன் பாடல், பந்துவராளியில் பாரதியாரின் "நின்னைச் சரணடைந்தேன்", ராஜகோபாலாச்சாரியாரின் "குறை ஒன்றும் இல்லை" பாடல்களுக்கு இடையில் துக்காராமின் "ஸாவளே சுந்தர" என்ற அபங்கையும் மால்கௌன்ஸ் ராகத்தில் பாடினார். மதுரை கிருஷ்ண ஐயரின் ரேவதி தில்லானாவையும், சக்தியின் மீதான திருப்புகழையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
குரு திருமதி லதா ஸ்ரீராம் திவ்யாவைப் பாராட்டி ஸ்ரீ லலிதகான வித்யாலயா இசைப்பள்ளியின் சார்பாக ஒரு வெள்ளியாலான சான்றிதழைத் திவ்யாவுக்கு அளித்துப் பாராட்டினார்.
ரமாதேவி கே. மஹாதேவன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |