மகாபெரியவர் 126வது ஜெயந்தி விழா
மே 19, 2019 அன்று ஸ்ரீ காமாக்ஷி சமூக மையம் (SKCC, Santa Clara, California) நெவார்க் பெவிலியன் என்னும் இடத்தில் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 126வது ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.

இதையொட்டிச் சமூக மையத்தில் ஏகாதச வார ருத்ராபிஷேகம் 11 சனிக்கிழமைகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஸ்ரீ சந்திரமௌலி நாராயண சாஸ்திரிகள் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியின் போது கீழ்க்கண்ட ஆராதனைகள் நடைபெற்றன.

ஆரம்பத்தில் திருப்புகழ் பஜனை பாடப்பட்டது. பின்னர் ருத்ராபிஷேகமும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றன. நியூ ஜெர்சி சுவாமிநாத பாகவதர் மற்றும் குழுவினர் மகாபெரியவர் மீது பாடிய பாடல்கள் மனதை உருக்கின. குறிப்பாக "கருணா ரச பூர்ண சுதாம்சே", "அனுஷம்தனில் உதித்த அத்வைத மூர்த்தியே", "குரு மாதா குரு பிதா", "காஞ்சி மாநகர் போகவேண்டும்" போன்ற பாடல்கள் அருமை. பின்னர் கலைமாமணி காசிம் பாபு சகோதரர்களின் நாதஸ்வர இசை தேன்மழை பொழிந்தது.

பின்னர் மகாபெரியவரின் பட்டினப்பிரவேச ஊர்வலம் பூர்ணகும்ப மரியாதையுடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெரியவரின் 126ஆம் பிறந்த நாளை ஒட்டி 126 பிரசாதங்களைத் தயாரித்து நிவேதனம் செய்தனர்.

இறுதியில் அர்ச்சனை, தோடகாஷ்டகம், ஆரத்தியுடன் பூஜைகள் நிறைவேறின. நிகழ்ச்சிகளைக் காண

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்டா கிளாரா. கலிஃபோர்னியா

© TamilOnline.com