வணக்கம். நான் ம. இலெ. தங்கப்பாவிடம் பேசியுள்ளேன், அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். அப்பர் லட்சுமணன் நேர்காணலை நான் மிகவும் ரசித்தேன். பூவரசமரம் செம்மரத்தைவிடச் சிறந்தது என்கிறார். அரவிந்த் சுப்ரமணியம் பற்றிய செய்தியும் சிறப்பு. நற்பணியைத் தொடருங்கள்.
அ. முத்துலிங்கம், டொராண்டோ, கனடா
*****
ஏப்ரல் மாதத் தென்றல் இதழில் ப்ரீத்தி சீனிவாசன் நேர்காணல் படித்தேன். விபத்து எப்படி வரும் என்று தெரியாது என்ற அவரின் மரண அனுபவம் பற்றிப் படிக்கையில் உடல் சிலிர்த்தது. இரண்டு முறை ஏற்பட்ட மரண அனுபவம், பரமாச்சாரியார், யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் சக்தியையும் தண்டுவடப் பாதிப்பின்விஷயங்களையும் அழகாக விவரித்துள்ளார்.
அவருள் இருக்கும் வலுவான நம்பிக்கைக்குத் தலை வணங்குகிறேன்.
தங்கள் இதழில் ஒவ்வொரு மாதமும் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறீர்கள். இதுவே தென்றலை அனைத்து வயதினரும் படிக்க ஏற்றதாகவும், எதிர்பார்க்கத் தக்கதாகவும் ஆக்குகிறது என்றால் மிகையில்லை.
பத்மபூஷண் வை. கணபதி ஸ்தபதி அவர்களை குருநாதராகச் சிலை சமைத்து வழிபட்டு வரும் சிற்பி அப்பர் லட்சுமணன் பற்றிய நேர்காணலை மே மாதத் தென்றலில் படித்தேன். மரங்களிடம் இவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளனவா? ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனி குணாதிசயங்களை கண்டுபிடித்துப் பயன்படுத்தும் முறைகள் மிகுந்த ஆச்சரியம் அளித்தன. அவரின் விஸ்வகர்மா வேதநிறுவனம் குறித்த விவரமும் அற்புதம். இலங்கை 'சிவபூமி' திருவாசக அரண்மனை, இஸ்லாமியராகப் பிறந்து மதம் கடந்து மனிதம் போற்றும் மகாஞானியரில் ஒருவரான சித்தயோகி சிவஸ்ரீ படேசாஹிப் ஆகிய கட்டுரைகளும்படித்து மகிழ்ச்சி. நன்றி .
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |