சதிகார வட இந்திய ஆரியனுக்குத் தமிழனைப் பிடிப்பதில்லை
அகிலனுக்குப் பிறகு இருபதாண்டுகளாக ஞானபீட விருது தமிழுக்குக் கிடைக்கவில்லை என்று வருந்தினோம். 'சதிகார வட இந்திய ஆரியனுக்குத் தமிழனைப் பிடிப்பதில்லை' என்று அலுத்துக்கொண்டோம். ஒருசமயத்தில் இலக்கிய ஜாம்பவானாக இருந்த ஜெயகாந்தனுக்கு இந்த ஆண்டு கிடைத்தது. ஆனால் அதை நம்மால் கொண்டாட முடியவில்லை. அதிலே மகிழ்ச்சியடைய முடியாதபடி மனம் சுருங்கிப் போயிருக்கிறது.

இன்றைய தமிழன் மிகவும் சந்தேகப் பிராணி. எங்கே சதி இல்லையோ, அதிலே சதியைப் பார்க்கிறான். அவனால் வானத்தில் வானவில்லைப் பார்க்கமுடியவில்லை. மனதைப் பட்டினி போட்டு, நெஞ்சை இறுக்கிக் கொள்கிறான். மிகவும் அரசியல்வயப்பட்ட இந்தியன் சொல்கிறான் 'இந்த விருதில் அரசியல் இருக்கிறது' என்று.

சொல்லுங்கள், 'வேறு எந்த மொழியுமே கூடாது, தமிழ்மட்டும் தான் வேண்டும் என்று சொல்லும் தமிழன் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்போன்றவன்' என்பதன் மூலம் ஜெயகாந்தன் என்ன சொல்லவருகிறார்?

வாசந்தி, எழுத்தாளர், தி நியூ சண்டே எக்ஸ்பிரஸ் (சென்னை, ஜூன் 19, 2005) கட்டுரையில்...

~~~~~~


உரிமைப் போராட்டமாக இருந்த எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக மாற்றி, தலைமையை இளைஞர்களின் கைகளில் எடுத்த முன்னோடிகளில் நானும் ஒருவன். இரண்டு இளைஞர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியுள்ளேன். இலங்கையில் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை குறுக்கவும், நெடுக்கவும் அலைந்து இளைஞர்களை ஒன்று திரட்டி, பின்னால் வந்த இயக்கங்களுக்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளேன். இது குறித்த நிறைவு எனக்கு உண்டு. ஆனால் எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் போகிறோம் எனப் புறப்பட்டோமோ அந்த மக்களை இழப்பதற்கு எதுவுமற்றும், தப்புவதற்கு வழியுமற்றும், தவம் புரியும் ஊமை மக்களாகப் பரிதவிக்க விட்டுவிட்டுத் தப்பியோடி வந்துவிட்டேன் என்ற குற்றவுணர்வினால் தினமும் நான் வேதனைப்படுகிறேன். ஆனால் என்னால் என்னதான் செய்யமுடியும்? எனது நிலை, கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் நிலையே.

சி. புஷ்பராஜா, ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர், வார இதழிற்கு அளித்த பேட்டியில்...

~~~~~~


நான் இசையமைப்பாளராக வருவதற்கு முக்கியக் காரணம் விஸ்வநாதன்-ராமமூர்த்திதான். இசையைக் கற்றுத் தர ஆளில்லாத கிராமத்தில் பிறந்தவன் நான். எம்.எஸ்.வி.யின் பாடல்களைக் கேட்டுத்தான் இசையைக் கற்றுக் கொண்டேன். அவர்களது இசை, எனது நாடி நரம்புகளிலும் ரத்தத்திலும் ஊறிவிட்டது. நானும் மற்ற இசையமைப்பாளர்களும் அவர்கள் போட்ட பிச்சைதான்.

இளையராஜா, விஸ்வநாதன்-ராமூர்த்திக்கு அண்மையில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில்...

~~~~~~


கட்சி வேறு, சங்கம் வேறு. நான் புதிய கட்சியைத் துவங்கினால் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை. சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி வைப்பது குறித்து நான் ஏதும் இப்போது சொல்வதற்கில்லை. சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் வைப்பது குறித்து நான் ஏதும் சொன்னால் உடனே சம்பந்தப்பட்டத் துறையின் மத்திய அமைச்சருக்கு எதிராக நான் செய்தி சொல்லியதாக போட்டுப் பரபரப்பு ஏற்படுத்திவிடலாம்.

விஜயகாந்த், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில்...

~~~~~~


அத்வானி ராஜினாமா செய்வதாக அறிவித்தது. பின்னர் அதை திரும்பப் பெற்றது சிறந்த நாடகம்! அத்வானி கூறியதைப் போல ஜின்னாவை மதச் சார்பற்றவராக ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையில் ராஜினாமாவை அத்வானி திரும்பப் பெற்றது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. அதே நேரத்தில் அத்வானிக்குத் தோல்வி. ஜின்னா குறித்து அவர் கூறிய கருத்துக்களை பா.ஜ.க. ஏற்கவில்லை

ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர், விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...

~~~~~~


நான் கொச்சைத் தமிழ் பேசுவதாக ஆரூர்தாஸ் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சிவாஜி என்னிடம், ''நீ கொச்சைத் தமிழ் பேசுவதைத் தான் ரசிகர்கள் ரசிக்கின்றனர். நீ உன் தமிழிலேயே பேசு. என் தமிழில் பேசாதே" என்பார். பாகப்பிரிவினை, புதிய பறவை போன்ற படங்களில் நான் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்களைப் பேசி நடித்தேன். ஆரூர்தாஸ் வசனம் சொல்லித் தரும் முறை எனக்கு பிடிக்கும். ஒருமுறை அவர் சொல்லித் தந்தாலே மனதில் பதிந்துவிடும். அவர் ஒரு கண்ணியமான மனிதர். 'இருவர் உள்ளம்' படத்தில் நான் சிவாஜியைப் பார்த்து, 'நீ பெரிய பணக்காரனாக இருக்கலாம். ஆனால், உன்னிடம் கண்ணியம் இல்லை' என்று வசனம் பேசியிருந்தேன். கண்ணியம் என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை. என் மூச்சு இருக்கும் வரை நான் தமிழ் ரசிகர்களையும், எம்.ஜி.ஆரையும் மறக்க மாட்டேன்.

நடிகை சரோஜாதேவி, ஆரூர்தாஸ் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com