தெரியுமா?: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு
சமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பியிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதேபோல பட்ரீசியா லுக்காரெல்லி என்ற அமெரிக்கப் பெண்மணி $300 அனுப்பியுள்ளார். இவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தெரியவில்லை.

ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் தமிழிருக்கைக்கான ஒப்பந்தம் கையொப்பமானது தெரிந்ததே. தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்த இருக்கைக்கு $3 மில்லியன் நிதி தேவை. ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒரு மில்லியன் சேர்க்கவேண்டும் என்பது இலக்கு. நிதி சேகரிப்பு துரித கதியில் நடைபெறுகிறது என்பதைச் சமீபத்தில் நடந்த மூன்று விழாக்களில் கிடைத்த நன்கொடைகளிலிருந்து அனுமானிக்க முடிகிறது.

கவிஞர் சேரனுடைய புத்தக வெளியீட்டின்மூலம் $26,000 திரட்டப்பட்டது. மெகா டியூனர்ஸ் ஒழுங்குசெய்த விழாவில் சேர்ந்தது $25,000. சரவணபவன் விருது வழங்கும் விழாவில் அளிக்கப்பட்ட நன்கொடை $5000. ஜூன் மாத முடிவுக்கிடையில் ஒரு மில்லியன் சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இப்பொழுது வலுப்படுகிறது.

இணையம் வழியே நன்கொடை அளிக்க:
torontotamilchair.ca
(நன்கொடைகளுக்கு வரிச்சலுகை உண்டு)

மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி - 647 625 5228

அ. முத்துலிங்கம்,
ரொறொன்ரோ, கனடா

© TamilOnline.com