தெரியுமா?: சிகாகோ தமிழ்ச் சங்கம்: முப்பெரும் விழா
சிகாகோவில் ஜூலை 4 முதல் 7 வரையிலான நாட்களில் 10ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32 ஆம் தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையுடன் இணைந்து சிகாகோ தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்களும் தன்னார்வத் தொண்டர்களும் உழைத்து வருகின்றனர். இன்றைய நிலையில், 35க்கும் மேற்பட்ட குழுக்கள், 400க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர்.

கரிகாற் சோழர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 'கல்லணை', தமிழன் தொன்மைக்காலத்தில் தொழில்நுட்ப அறிவில் சிறந்திருந்தான் என்பதன் சீர்மிகு அடையாளம். இன்றும் உலகம் வியக்கும் வண்ணம் வலிமையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லணையின் மாதிரி வடிவம் விழாவின் முகப்பில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. தமிழின் தொன்மையையும் தமிழனின் நகர நாகரீக முதிர்ச்சியையும் பறை சாற்றுகின்றது கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி. 'கீழடி நம் தாய்மடி' என்பது உலகத் தமிழாராய்ச்சி கருத்தரங்கின் கருப்பொருள். அகழ்வாய்வின் மாதிரி வடிவமும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

11ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மன்னரான இராஜேந்திர சோழர், வடக்கே கங்கைவரை படையெடுத்துச் சென்று அங்குள்ள மன்னர்களை வீழ்த்தித் தன் பேரரசை நிறுவி 1000 ஆண்டுகள் ஆகின்றன. கப்பற்படை அமைத்து தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றை வெற்றிகொண்ட இந்த மாவீரரின் வரலாறு நாடகமாக அரங்கேறவுள்ளது. அதில் தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்களோடு, நம் தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் பெருமளவில் பங்கேற்பர்.

தமிழனின் அறிவாற்றலை உலகுக்குரைத்த பொய்யாமொழிப் புலவரின் சிலையை நம்மகத்தே நிறுவிட வேண்டி, விஜிபி குழுமம் நன்கொடையாகத் தந்துள்ளது. பண்டைய இலக்கியங்கள் முதல் இந்நாள் படைப்புகள் வரையிலான நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், மாத இதழ்கள், செய்தி மலர்கள், ஒலி நாடாக்கள் என 4 லட்சத்திற்கும் மேற்பட்டவற்றைத் தன்னகத்தே கொண்ட 'ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்' அரிய பல நூல்களைக் காட்சிப்படுத்தவுள்ளது . குறிப்பாக, திருக்குறளின் முதன்முதல் பதிப்பு நூல் விழா வளாகத்தில் காணக்கிடைக்கும்.

பொன்விழாவை வெளிப்படுத்தும் முகமாக 'பொன் பறை' இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 50 பேர் இதற்கெனப் பயிற்சி செய்து வருகின்றனர்.

இளையோருக்கு தமிழ் உணர்வு ஊட்டவும், தமிழறிவை மேம்படுத்தவும், அவர்தம் திறமைகளை வெளிக்கொணரவும், தமிழ்ப் பணிகளில் ஈடுபடுத்தவும் பல போட்டிகள் நடைபெறவுள்ளன.

உங்கள் 2019 கோடை விடுமுறையில் ஜூலை முதல் வாரத்தைச் சிகாகோவில் தமிழ் உறவுகளுடன் கொண்டாட ஆர்வத்துடன் அழைக்கிறோம். உங்கள் ஆதரவை அன்புடன் வேண்டுகிறோம்.

மணி குணசேகரன்,
சிகாகோ தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com