பற்றும் பாசமும்
ஒரு வீட்டில் பெண் ஒருத்தி இருந்தாள். மற்றொரு வீட்டில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவர்களது வீடு கிட்டத்தட்ட அடுத்தடுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் அந்த வீட்டில் வசிப்பது தெரியாது; அதுபோலவே, அங்கே ஒரு பெண் வசிப்பதும் அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருநாள் அந்தப் பெண் மிகவும் நோய்வாய்ப் பட்டாள். அவள் வீட்டில் இருந்தவர்கள் ஒரே பதற்றத்துடன் நடமாடினர். அங்கே மருத்துவர்கள் வந்தனர். அடுத்த வீட்டில் இருந்த இளைஞனுக்கு இதனால் ஏற்பட்ட இரைச்சல் கேட்டது. அது தனது படிப்பைப் பாதிக்கும் என்று எண்ணி அவன் ஜன்னல் கதவை அடைத்துக்கொண்டான்.

காலப்போக்கில், விதிவசத்தால், அடுத்த வீட்டில் இருந்த பெண்ணையே அவன் திருமணம் செய்துகொண்டான். காலையில் திருமணம் நடந்தது. அன்று மதியமே அவளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மாப்பிள்ளை அவளைக் குறித்தும், அவளது வலியைக் குறித்தும் பதறிப்போனார்.

அந்தப் பெண்ணின் மீது இப்படி ஒரு பற்றுதல் எங்கிருந்து வந்தது? அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டதால் அவளது சிறிய வயிற்றுவலியும் அவனைப் பதறச் செய்தது. அதே பெண்ணுக்குக் கடுமையான நோய் முன்னர் ஏற்பட்டபோது அவன் சற்றும் கவலைப்படவில்லை. காரணம், அப்போது அவனுக்கு அவளுடன் எந்தப் பற்றுதலோ உறவோ ஏற்பட்டிருக்கவில்லை.

ஆக, பாசமும், 'என்னவள்' என்ற எண்ணமும், பற்றும்தான் இன்ப துன்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.

நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2018

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com