பாலா அத்தை உதவுவதாகச் சொன்னவுடன் அருண் மிகுந்த உற்சாகம் அடைந்தான். காலைக் கடன்களை முடித்துவிட்டு, அனுவையும் அரவிந்தையும் எழுப்பி, அவர்களை எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, கீழே காலைச் சிற்றுண்டி சாப்பிட வருமாறு சொன்னான். தான் பக்கரூவோடு இறங்கினான். அவன் கையில் ஐபேடு இருந்தது. அதில் கூகுள் பண்ணி படித்துக்கொண்டே கீழே இறங்கினான்.
பாலா அவனைப் பார்த்ததுமே, "என்ன அருண், அனுவும் அரவிந்தும் எழுந்திட்டாங்களா? அவங்களுக்கும் உன்னுடைய சுறுசுறுப்பைக் கொஞ்சம் குடுத்துடேன்," என்றார். "நீ பெரிய தலைவனா வரப்போற எதிர்காலத்தில்" என்றார்.
"அத்தை, நானா? பார்க்கலாம்" என்று சொல்லிக் கண் சிமிட்டிச் சிரித்தான். "அம்மா, எனக்கு ஹனி பன்ச்சஸ், ஓட்ஸ்" என்றான்.
"வேற?" கீதா கேட்டார்.
"ஆரஞ்சு ஜூஸ்."
கீதா குளிர்பதனப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஆரஞ்சுச் சாறு புட்டியை எடுத்தார். அருண் உற்சாகத்துடன் முக்காலியில் அமர்ந்து, கிண்ணம் நிறைய தானிய உணவைப் போட்டு அதில் பாலை ஊற்றிக்கொண்டான். கீதா அவனுக்கு ஒரு கோப்பையில் பழச்சாறு கொடுத்தார். அவனே எல்லாம் செய்துகொள்வதைப் பார்த்து பாலா ஆச்சரியப்பட்டார். "பரவாயில்லையே அருண்" என்று புகழ்ந்தார்.
"அண்ணி, இன்னைக்கு அவனுக்கு உங்ககிட்ட வேலை ஆகணும். அதுக்குதான் இந்த நடிப்பு. மத்த நாள்ல எல்லாம் இருந்த இடத்திலிருந்து ஒரே ஏவல்தான், பெரிய ராஜா மாதிரி" என்றார் கீதா. "ரொம்பதான் மெச்சாதீங்க உங்க மருமகன!"
அருண் தானிய உணவை மென்றுகொண்டே ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான். அவன் கண்களில் ஒரு சிறுவனுக்கே உள்ள விஷமம் இருந்தது. அந்தக் கள்ளச் சிரிப்பைப் பார்த்து பாலாவிற்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. "சாரி கீதா, அவனது கள்ளத்தனமான சிரிப்பைப் பார்த்ததும் என்னால் அடக்க முடியவில்லை சிரிப்பை."
"குழந்தைங்க எல்லாம் அப்படித்தானே அண்ணி."
ஆமாம் என்று தலையாட்டிய பாலா, மாடிப்பக்கம் பார்த்து, மெல்லக் குரல் கொடுத்தார்' "அனு, அரவிந்த்! கீழே இறங்கி வாங்க. ரொம்ப நேரமாச்சுப்பா" கீதாவும் பாலாவும் தம் கணவன்மார்கள் இன்னும் நித்திரையில் இருப்பதைப் பெரிது படுத்தவில்லை. அவர்கள் இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
அருண் தனது ஐபேடை ஆன் செய்தான். அதில் ஆப்பிள் பழங்களின் மெழுகுபற்றித் தேடினான். வந்த வலைப் பக்கங்களை ஒவ்வொன்றாகப் படித்தான். "பாருங்க, பாலா அத்தை" என்று அவன் காட்ட, அதை பாலாவும் அவனும் படிக்க ஆரம்பித்தார்கள். "நல்லா எழுதிருக்காங்க இல்லே? நீங்க சந்தேகப்பட்ட மாதிரியே?"
அருணும் பாலாவும் படித்துக் கொண்டிருந்த போது கீதா, "அண்ணி, உங்களுக்கு டீயா காபியா?" என்று கேட்டார். "டீ" என்று பாலாவிடம் இருந்து பதில் வந்தது. "நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா?"
"இல்லை அண்ணி, நீங்க அருணுக்கு உதவுங்க. நான் மத்த இரண்டு குட்டிகளையும் எழுப்பி கவனிச்சுக்கறேன்."
"கீதா, என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டேங்கறயே? எனக்கு கூச்சமா இருக்கு இப்படிச் சும்மா உட்கார."
"ஐயய்ய, என்ன அண்ணி இது, நம்ம வீடு இது. அதுவுமில்லாம, நீங்க என்ன சும்மாவா இருக்கீங்க. அருணுக்கு பெரிய உதவி இல்ல பண்ணிகிட்டு இருக்கீங்க" என்றார் கீதா.
அதற்குள் அருண், "அத்தை, இதைப் பாருங்க. இதுல கேள்வி-பதில் போட்டிருக்காங்க. நல்ல விலாவாரியா இருக்கு, எனக்குக்கூட புரியறமாதிரி" என்று பாலா அருண் காட்டியைதைப் படித்தார். அதில் பழங்களின் மெழுகுபற்றி, அதிலும் ஆப்பிள் மெழுகுபற்றிப் பெரிய நிபுணர்கள் பதில் கொடுத்திருந்தார்கள். ஏன் பழங்கள் மெழுகை உண்டு பண்ணுகின்றன, அது இல்லாவிட்டால் என்ன தீங்கு போன்ற கேள்விகளுக்கு பதில்கள் இருந்தன. எப்படிப் பேராசை கொண்ட நிறுவனங்கள் இயற்கையாக உருவாகும் மெழுகை அழிக்கிறார்கள் என்பதற்கும் பதில் இருந்தது. பாலாவும் அருணும் ஒன்று விடாமல் படித்தார்கள். கீதாவும் அவ்வப்போது வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டு படித்தார். ஒரு விவசாய விஞ்ஞானியான கீதாவிற்கே அதில் பல விஷயங்கள் புதிதாக இருந்தன.
"நல்லா சொல்லி இருங்காங்களே!" கீதா ஆச்சரியப்பட்டார். முணுமுணுத்தபடி, "ஆப்பிள் பழங்கள், தம்மிடம் உள்ள தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ள மெழுகைத் தயாரிக்கின்றன. மெழுகு இல்லை என்றால் பழங்கள் நீரில்லாமல் சுருங்கிப் போய்விடும்" என்று எழுதி இருந்தது. அம்மாவின் தோள்மீது தன் முகத்தை வைத்துக்கொண்டு அருணும் படித்தான்.
கீதா மேலும் படித்தார்: 'சில நிறுவனங்கள், பழங்களின் மேல் கனமாக மெழுகைப் பூசுவதற்காக, இயற்கையான மெழுகை அகற்றி விடுகிறாரகள். பின்னர் செயற்கையான மெழுகைப் பளபளப்பாகப் பழத்தின்மேல் பூசுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இயற்கையான மெழுகில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இப்படி, பழங்களின் மூலம் கிடைக்கும் நல்ல விளைவுகளைக் கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்.'
"நெனச்சேன் அம்மா, நான் நெனச்சேன்" என்று அருண் துள்ளினான். "இதை விடக்கூடாதம்மா."
"கொஞ்சம் பொறு, கண்ணா" கீதா அருணை நிதானப்படுத்தினார். "நிறைய விஷயங்களை மெதுவா புரிஞ்சு படிக்கணும். படக்குன்னு தாவிடக் கூடாது."
பாலா அருணின் தலையைச் செல்லமாக வருடினார். 'Atta boy,' என்று புளகாங்கிதம் அடைந்தார்.
"கீதா, இதைப் பார்" என்று பாலா எதையோ காட்டினார். அருண் அவர் காட்டியதைப் படிக்க, அவன் கண்களில் ஒரு திடீர் பிரகாசம் வந்தது.
அப்போது அனுவும் அரவிந்தும் கீழே இறங்கி வந்தார்கள். பதுங்கிப் பதுங்கி பக்கரூவும் அவர்கள் பின்னால் மெதுவாக வந்தது. "அனு, அரவிந்த் இப்பத்தான் உங்களுக்குப் பொழுது விடிஞ்சிச்சா?" என்று பாலா கேட்டார். "வாங்க, உட்காருங்க. நம்ம அருண் உங்களுக்காக நிறைய விஷயம் படிச்சு வெச்சிருக்கான். கவனமா கேட்டுக்கோங்க."
அனுவும் அரவிந்தும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"பக்கரூ குட்டி, நீயும்தான்" என்று கீதா சொன்னவுடன் பக்கரூ உற்சாகத்தில் ஏதோ தனக்கு எல்லாம் புரிந்தமாதிரி துள்ளிக் குதித்தது.
"அருண், ஆரம்பி" என்று பாலா சொல்ல, அருண் தொடங்கினான்....
(தொடரும்)
ராஜேஷ் |