ஸ்ரீரங்கப்பட்டினம் அருள்மிகு நிமிஷாம்பாள்
தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆலயம் இது. காவிரி ஆற்றின் நதிக்கரையில் சங்கம் செல்லும் சாலையில் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீநிமிஷாம்பாள் ஆலயம்.

ஏறக்குறைய 300-400 வருடங்களுக்கு முன்பாக, மும்மடி கிருஷ்ணராஜ உடையார் அவர்களால் அவரது ஆட்சிக்காலத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் கட்டப்பட்டது. இறைவன் திருநாமம் மௌக்திகேஷ்வரர். இறைவியின் நாமம் நிமிஷாம்பாள். சோமவம்ச ஆரிய க்ஷத்திரிய வம்ச முக்த ராஜாவுக்கு நிமிஷாம்பாள் அம்மையின் வரம் கிடைக்கவே, மன்னன் அரக்கர்களுடன் போரிட்டு நிமிஷத்தில் வெற்றி பெற்றான். அன்னை பக்தர்களின் பிரச்சனைகளை நிமிஷத்தில் தீர்த்து வைப்பதால் நிமிஷாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள். மன்னன் முக்தராஜாவின் பிரச்சனையைத் தீர்த்து வைத்ததால் இங்கு சிவபெருமான் மௌக்திகேஷ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் ஏழடுக்கு ராஜ கோபுரங்களைக் கொண்டது. நிமிஷாம்பாள் கோவில் காவிரி நதிக் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் சன்னிதி கோயிலில் நுழைந்ததும் வலப்புறம் உள்ளது. அங்கே அழகிய ஆபரணங்களுடனும் செந்நிற ரோஜா மாலையுடனும் அன்னை காட்சியளிக்கிறாள். அன்னையின் முன் ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் குங்குமார்ச்சனை செய்யப்படுகிறது.

அக்ஷீசுவரர் சன்னிதியில் சிறிய சிவலிங்கம் ஒன்று உள்ளது. சிவன், அம்பாளை அடுத்து லக்ஷ்மி நாராயணர் சன்னிதி உள்ளது. மூன்று சன்னிதிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளன. முகமண்டபம் மட்டும்தான் உள்ளது. சிற்பக் கலை அம்சங்கள் ஏதுமில்லை. மேலிருந்து தொங்கும் பெரிய வெண்கல மணியை அர்ச்சகர் ஒலித்து, பலிபீடத்தில் பலி போஜனம் வைத்ததும், காக்கைகள் வரிசையாக வந்து அதனை எடுத்துக்கொள்வது இக்கோயிலில் ஓர் அபூர்வமான காட்சியாகும்.

பல வருடங்களாக இழுத்தடிக்கும் திருமணத் தடை, இங்கு வந்து தேவியைத் தரிசித்ததும் நீங்கி விடுகிறது; உடன் திருமணமும் நிச்சயமாகி விடுகிறது என்பதால் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. வேண்டிக் கொண்டவர்கள் திருமணமானதும், பிரார்த்தனைகளை நேரில் ஆலயத்திற்கு வந்து செலுத்துகின்றனர். காலை ஆறு மணி முதல் எட்டரை மணிவரை அன்னையைத் தரிசிக்கலாம். நிமிஷாம்பாள் ஜயந்தித் திருவிழா, சோமவம்ச ஆரிய க்ஷத்திரியர்களால் வருடாவருடம் வைகாசி மாத சுத்த தசமியில் கொண்டாடப்படுகிறது. ஆர்ய வைசியர்களால் வசவாம்பாள் ஜயந்தித் திருவிழா நடத்தப்படுகிறது. பௌர்ணமி தோறும் விசேஷ பூஜைகள், நவராத்திரியில் துர்கா ஹோமம், சண்டி ஹோமம், விஜயதசமி அன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவராத்திரி, தீபாவளி, யுகாதியின் போது விசேஷ பூஜைகள் உண்டு. பௌர்ணமியன்று பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

நிமிஷாம்பாள் கோயில்கள் கர்நாடக மாநிலத்திலும் ஆந்திர மாநிலத்திலும் நிறைய அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் காசி செட்டித் தெருவில் (அகர்வால் பவன் எதிரில்) ஒரு நிமிஷாம்பாள் கோவில் உள்ளது. அதில் தேவி நிமிஷாம்பாள், வெங்கடேஸ்வரர், சித்தி விநாயகர், சிவன், முருகன், ஆஞ்சநேயர், நவகிரக சன்னிதிகள் உள்ளன. தினசரி காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் நேரில் சென்று தரிசிக்கலாம்.

நிமிஷத்தில் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் நிமிஷாம்பாளை வணங்கி அருள் பெறுவோம்.

சீதாதுரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com