சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 1)
"பிரம்மத்தை அறிவது எளிதில் இயலாத காரியம். அது கடலின் ஆழத்தை உப்பு பொம்மை அளக்க முயல்வதைப் போன்றது. அந்தக் கடலிலேயே உப்பு பொம்மை கரைந்து விடுதல்போல பிரம்மத்தை அறியச் சென்றவனும், அந்த பிரம்மத்திலேயே ஒன்றி பிரம்மமாகி விடுகிறான்". இது பிரம்மத்தைப் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியது. இதுபோல, தானே பிரம்மமாக வாழ்ந்தவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர். உலகியலில் இருந்தாலும் அது குறித்த பிரக்ஞையோ, ஆர்வமோ இல்லாமல் வாழ்ந்து மறைந்த மகாஞானி. இருநூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இம்மகா ஞானியின் வாழ்க்கை ஆன்மநாட்டம் உள்ள ஒவ்வொருவரும் அறியவேண்டிய ஒன்று.

தவமிருந்து பெற்ற தனயன்
தமிழையும் ஆன்மீகத்தையும் ஒருங்கே வளர்த்த மதுரையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் சோமநாத அவதானி என்பவர் வாழ்ந்து வந்தார். இளவயதிலேயே ஞான வைராக்கிய நிலையை அடைந்தவர் அவர். சகல சாஸ்திர பண்டிதர். தமிழ், வடமொழி இரண்டிலும் தேர்ந்தவர். யோகசித்திகள் பல கைவரப் பெற்றவரான அவர், எப்போதும் இறைவனையே சிந்தித்து, இறைநிலையிலேயே திளைத்தார். அதைக் கண்ட பெற்றோர், குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகப் பார்வதி என்ற குணவதியை அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். ஆனால், மணமான பின்பும் சோமநாதர் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தார். அதுகண்டு பெற்றோர் வருந்தினர். வருடங்கள் கடந்தன. ஆனாலும் அவரது ஞான வைராக்கிய நிலையில் மாற்றமேதும் இல்லை.

அதுகண்டு வருந்திய மனைவி பார்வதி, மகப்பேறு இல்லாத மலடி என்று தன்னை அயலார் தூற்றுவதாகவும், அக்குறையிலிருந்து கணவர் தன்னைக் காக்க வேண்டும் என்றும், மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து, தாய் என்ற ஸ்தானத்தைத் தனக்களிக்க வேண்டும் என்றும் கணவரிடம் வேண்டிக்கொண்டார். அதைக் கேட்ட சோமநாதர், "அப்படியே ஆகட்டும். ஆனால் அதற்கு முன்னால் உன் உடல், உள்ளம், ஆன்மா என அனைத்தும் தூய்மை பெறவேண்டும். அதற்கு கோடிக்கணக்கில் ராமநாமம் ஜபிக்க வேண்டும். உடம்பின் ஒவ்வோர் அணுவும் ராமநாமம் சொல்ல வேண்டும். அப்படி இருந்தால்தான் சத்புத்திரன் வாய்ப்பான்" என்று கூறி, மனைவிக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.

கணவர் உபதேசித்த மந்திரத்தை அம்மையார் அனுதினமும் பக்தியுடன் ஜெபித்தார். பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்வதன் மூலம் புண்ணிய பலன் அதிகரித்து, வேண்டுதல் பலிக்கும் என இருவரும் தல யாத்திரை செய்தனர். அதன்படி ராமேஸ்வரம் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வழிபட்டனர். அன்றைய இரவில் சோமநாதர் ஒரு கனவு கண்டார். அதில் "உனக்கு விரைவிலேயே ஒரு சத்புத்திரன் பிறப்பான்" என்ற குரல் ஒலித்தது. மனைவியை எழுப்பி விவரம் சொல்ல முற்பட்டபோது, தனக்கும் அதே போன்றதொரு கனவு வந்ததாக அவரும் கூறினார்!

நாட்கள் நகர்ந்தன. பார்வதி அம்மாள் கருவுற்றார். பத்தாம் மாதத்தில், தெய்வீகப் பொலிவுடன் அழகானதோர் ஆண் குழந்தை பிறந்தது. ராமநாம ஜபத்தின் பலனாலும், ராமநாதரின் ஆசியாலும் பிறந்த குழந்தை என்பதால், குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் எனப் பெயரிட்டனர். பாலகனுக்கு ஐந்து வயதானது. உபநயனச் சடங்கு நடந்தது. உள்ளூர் சாஸ்திரிகளிடம் வேதம் கற்க ஏற்பாடு செய்த தந்தை சோமநாதர், வானப்பிரஸ்தம் மேற்கொண்டு இமயமலைக்குத் தவம் செய்யச் சென்றார்.

குருகுல வாசம்
வேதக் கல்வியை நிறைவு செய்த சிவராம கிருஷ்ணன், மேலே கற்கத் திருவிசைநல்லூர் குருகுலத்திற்குச் சென்றார். ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர் அங்கு கல்வி போதித்து வந்தார். அவர் 'ராமசித்ர ஸ்தவம்', 'ஜானகி பரிணயம்' போன்ற நூல்களை ஆக்கியவர். மராட்டிய அரசரின் அன்பைப் பெற்றவர். அரசனின் கட்டளைப்படி தீக்ஷிதரிடம் பல மாணவர்கள் குருகுல வாசம் செய்தனர். சிவராமனும் அவரது சீடரானார். அங்கே சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

சன்னியாச தீட்சை
இந்நிலையில் இல்லற வாழ்வை ஏற்றுக் கொள்ளுமாறு அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் பிரம்மஞானப் பாதையை நோக்கி நடைபயில ஆரம்பித்த சிவராமகிருஷ்ணருக்கு இல்லறத்தில் நாட்டமில்லை. துறவறம் பூண்டு வாழ நினைத்தார். தனது வித்யா குருவிடம் எண்ணத்தைத் தெரிவித்தார். சிவராமகிருஷ்ணரின் உறுதியை உணர்ந்த ராம தீக்ஷிதர், அவரை காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக விளங்கிய யோகீந்திரர் ஸ்ரீ பரமசிவேந்திரரிடம் அழைத்துச் சென்றார். சிவராமகிருஷ்ணரின் மனோதிடத்தைப் பலவிதத்திலும் பரிசோதித்த பீடாதிபதி, நல்லதொரு நாளில் அவருக்கு சன்னியாச தீட்சை அளித்து, 'சதாசிவ பிரம்மேந்திரர்' என்ற தீக்ஷாநாமத்தைச் சூட்டியருளினார். அதுமுதல் சிவராமகிருஷ்ணர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆனார்.

குருவிடமிருந்து பாவ யோகம், அபாவ யோகம், மந்திர யோகம், ஸ்பரிச யோகம், மஹா யோகம் போன்றவற்றைக் கற்றார். பின் குருவின் சார்பாக நாட்டின் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து, வாதங்களில் வென்று குருவிற்குப் பெருமை தேடிக் கொடுத்தார்.

சமஸ்தானத்தில் சாதுரியம்
இதனால் சதாசிவரின் பெருமை சமஸ்தானங்கள் பலவற்றிலும் பரவியது. இந்நிலையில் மைசூர் மகாராஜா தமது ஆஸ்தான பண்டிதராக சதாசிவ பிரம்மேந்திரரை அனுப்பி வைக்குமாறு பீடாதிபதியிடம் வேண்டிக் கொண்டார். குரு அதனை ஏற்றுச் சீடரை மைசூருக்கு அனுப்பி வைத்தார்.

மைசூர் சென்ற சதாசிவ பிரம்மேந்திரர் ஒரு ஞானசூரியனாய் ஒளிர்ந்தார். சமஸ்தானத்திற்கு வரும் பண்டிதர்களைப் பல்வேறு கேள்விகள் கேட்டு, பலவாறு அவர்களுடன் தர்க்கித்து வாதில் வென்றார். ஜல்பா வாதம், விதண்டா வாதம் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டு மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார். ஆனால், அரண்மனைப் பண்டிதர்கள் சதாசிவ பிரம்மேந்திரர்பால் வெறுப்புக் கொண்டனர். சமஸ்தானத்தின் பெரும் பண்டிதர்கள் பலரும் சதாசிவரது ஞானத்தின் முன் தோற்றுப் போயினர்.

"தரிசிக்க" விரும்பினார் குரு
இச்செய்தி பிற சீடர்கள் மூலம் குருவான பீடாதிபதிகளின் கவனத்துக்குச் சென்றது. தான் போதித்த ஞான, யோகப் பயிற்சிகளில் கவனம் செலுத்தாமல், பிறரது வாயை அடைக்கும் வாதச் செயல்பாடுகளில் சதாசிவ பிரம்மேந்திரர் கவனம் செலுத்துவது அவரது ஆன்ம வளர்ச்சிக்கு உதவாது என்று நினைத்தார். தடுத்தாட்கொள்ள மனம் கொண்டார். எனவே சீடர் ஒருவரிடம், "குருநாதர் தங்களைத் தரிசிக்க விரும்புகிறார்" என்று கூறும்படிச் சொல்லி அனுப்பி வைத்தார்.

சமஸ்தானத்தை அடைந்த சீடர், சதாசிவ பிரம்மேந்திரரிடம் குரு கூறியதைத் தெரிவித்தார். அதைக் கேட்ட சதாசிவ பிரம்மேந்திரர் பதைத்தார். சீடனான தன்னைப் போய்க் குருவானவர், "தரிசனம் செய்யவேண்டும்" என்று சொன்னதன் உட்பொருளைச் சிந்தித்தார். மனம் துவண்டார். உடனே சமஸ்தானப் பதவியைத் துறந்துவிட்டு கண்களில் பெருகிய கண்ணீருடன் குருவை நாடி ஓடினார்.

குருவை வணங்கி மெய், வாய், கை புதைத்து நின்றார் சதாசிவ பிரம்மேந்திரர். அதைப் பார்த்த குரு, "வெறுமனே வாயில் கை பொத்தி நின்றால் போதுமா? பிறர் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்கக் கற்கவில்லையே. முதலில் உன் வாயை அடக்கு" என்றார் சற்றே கோபத்துடன். அவ்வளவுதான். அந்த ஒரு சொல் தீயாய்ச் சதாசிவரின் உள்ளத்தைச் சுட்டது. அந்தக் கணம் முதல் இனி பேசுவதில்லை என்று மனதுக்குள் தீர்மானித்த பிரம்மேந்திரர், குருவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, மௌன யோகியாக அவ்விடம் விட்டு நீங்கினார்.

தவமுடையார்க்கு ஆகும்...
அதுமுதல் குரு போதித்த வழி நின்று தீவிர யோகப் பயிற்சியில் ஈடுபட்டார். மானுடர் அதிகம் வாழும் பகுதியில் வசித்தால் தனது தவத்துக்கு இடையூறாகும் என்று கருதி, மனித நடமாட்டமற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசித்தார். விரைவிலேயே யோகத்தின் உச்சநிலையை அடைந்தார். தான், தனது என்ற எண்ணம் நீங்கிய 'ஸ்திதப் பிரக்ஞன்' ஆனார். அதுமுதல் சதா பிரம்மநிலையில் லயித்திருப்பது வழக்கமாயிற்று. தான், தனது என்ற உணர்வற்று ஏகாந்தியாக, அவதூதராக நடமாடத் துவங்கினார். ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி தருவது, ஓரிடத்தில் தோன்றி, பிறிதோரிடத்தில் மறைவது உட்படப் பல சித்திகளும் கைவரப் பெற்றார்.

அற்புதங்கள்
ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் பிரம்மேந்திரர். தவநிலையிலேயே நெடுங்காலம் கழித்தார். தூரத்தே இருந்து அவருக்குத் தொந்தரவு தராமல் வணங்கினர் அவ்வூர் மக்கள். ஆனால் அது மழைக்காலம். வெள்ளம் வருவதும் வடிவதுமாக இருந்தது. திடீரென ஒருநாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து அவரை அடித்துச் சென்றது. மக்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனால் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்று கருதி மக்கள் வருந்தினர்.

வெள்ளம் வடிந்தது. சில மாதங்கள் கழித்து வீடுகட்ட மணல் எடுக்க வந்த சிலர், ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் ரத்தம் பட்டிருப்பதைக் கண்டு, ஊராரை வரவழைத்து மேலும் தோண்டினர். உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவ பிரம்மேந்திரர் நிஷ்டையில் இருந்தார். அவர் தலைமீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்தவர், எதுவும் நடவாததுபோல் எழுந்து, அவ்விடத்தை விட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.

விடாப்பிடி விஜயரகுநாதத் தொண்டைமான்
ஒருமுறை புதுக்கோட்டையை ஒட்டிய வயல் பகுதியில் பிரம்மேந்திரர் சென்று கொண்டிருந்தார். அங்கே மாடுகளுக்காக வைக்கோல் போர் அடைத்துக் கொண்டிருந்தார்கள். பிரம்மத்தில் லயித்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர் கால் தடுக்கி வைக்கோல் பிரியின்மீது விழுந்தார். அதனைக் கவனிக்காத வேலையாட்கள் மேலும் மேலும் பிரிகளை அவர்மீது அடுக்கினர். அது மலைபோல் உயர்ந்து நின்றது.

சில மாதங்கள் கழித்து, வைக்கோல் போரைப் பிரித்துப் பார்த்தால் அடியில் சதாசிவ பிரம்மேந்திரர் படுத்த நிலையில் இருந்தார். திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிரம்மேந்திரர் எழுந்து அவ்விடம் வீட்டு நீங்கினார். அதுகண்டு பயந்துபோன வேலையாட்கள், புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமானிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினர்.

மன்னர் சாதுக்கள்மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். இப்படிப்பட்டவர் ஒரு மிகப்பெரிய மகானாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். உடனே ஒரு பல்லக்கைத் தன்னோடு வரச்சொல்லி, தான் குதிரையில் ஏறி வேகமாக, ஆட்கள் சொன்ன வழியில் சென்றார். நடு வழியில் சதாசிவ பிரம்மேந்திரரைப் பார்த்த அவர், அங்கேயே குதிரையை விட்டு இறங்கி, மகானைச் சுற்றி வந்து வீழ்ந்து வணங்கினார். தம்முடன் அரண்மனைக்கு வருமாறும், தாம் அவருக்குத் தேவையான வசதிகள் யாவும் செய்து தருவதாகவும் வேண்டிக்கொண்டார். ஆனால் சதாசிவ பிரம்மேந்திரர் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். மன்னர் தொடர்ந்து வற்புறுத்தவே பதிலேதும் கூறாமல் அருகிலிருந்த திருவரங்குளம் காட்டுக்குள் சென்றுவிட்டார். பிடிவாதத்துடன் பின்தொடர்ந்த மன்னர், சதாசிவ பிரம்மேந்திரர் மோனத்தவம் செய்து கொண்டிருந்த மரத்தடியின் அருகில் ஒரு குடில் அமைத்துத் தங்கினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் கண்விழித்த போதெல்லாம், அவரை வலம்வந்து வீழ்ந்து வணங்குவதும், அரண்மனைக்கு வருமாறு வேண்டிக் கொள்வதும் மன்னரின் வழக்கமாக இருந்தது. இப்படியே மாதங்கள் பல கடந்தன...

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com