முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்!
அன்புள்ள சிநேகிதியே,

வணக்கம். என் பெயர்...... என் கணவர் பெயர்.... அவர் சாஃப்ட்வேர் எஞ்சினியர். நான் ஸ்கூல் டீச்சராகச் சில வருடம் வேலை செய்தேன். இப்போது வெறும் ஹோம் மேக்கர். எங்களுக்கு இரண்டு பெண்கள். பெரியவளுக்கு 15 வயது. சின்னவள் வயது 10. எனக்குக் கொஞ்ச நாளாகப் பெரிய பெண்ணுடன் பெரிய பிரச்சனை. நான் எது சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். என்னைக் கண்டாலே வெறுக்கிறாள். தடால் தடால் என்று சத்தமாகத் தன் கதவைச் சாத்திக் கொள்கிறாள். நான் சாப்பிடச் சொன்னால், கோபம் வந்தால், அப்படியே சிங்க்கில் கொண்டுபோய்க் கொட்டிவிட்டு ரூமில் போய்ப் படுத்துக்கொண்டு விடுகிறாள். அப்பா வந்து கதவைத் தட்டிச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்து, சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுகிறாள். "அவளுக்குப் பிடித்ததைச் செய்ய மாட்டேன் என்கிறாய்" என்று என் கணவர் சொன்னதால், அவளுக்குப் பாஸ்டா வகைகள் செய்து கொடுத்து, என் இரண்டாவது பெண்ணுக்கு அவளது அலர்ஜிக்கு ஏற்றது போல் சமைத்து, என் கணவருக்கு நம் இந்தியச் சாப்பாடு என்று மூன்று வகை செய்தும் நிலைமை சீராகவில்லை.

நான் நாள்பூரா உழைக்கிறேன். எனக்கு எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு நாளும் நிலைமையைச் சீர்திருத்த என் கணவர் அலுவலில் இருந்து வந்த பிறகுதான் முடிகிறது. அவருக்கும் அதனால் கோபம் வருகிறது. பெண்ணைக் கண்டிப்பதில்லை. ஆனால், என்னிடம்தான் குறை கண்டுபிடிக்கிறார். "நீ ஸ்கூல் டீச்சர். உனக்குக் குழந்தைகள் சைக்காலஜி என்னைவிட நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். நானே வேலையிலிருந்து லேட்டாக வருகிறேன். அத்துடன் இந்தப் பிரெஷரும் எனக்குத் தேவையில்லை. நீ அவளை அதிகமாகக் கண்டிக்கிறாய். கொஞ்சம் டீன் ஏஜ் பெண்களிடம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும். உன் கோபத்தை அவளிடம் காட்டினால் அப்படித்தான் செய்வாள். என்னிடம் மட்டும் எப்படி நேராக நடந்து கொள்கிறாள். நீயே யோசி" என்று என் மனதை இன்னும் புண்ணாக்கி விட்டார்.

இதனால் எனக்கும் என் கணவருக்கும் எப்போதும் விவாதம். இதையெல்லாம் பார்த்து என்னுடைய இரண்டாவது பெண் கதிகலங்கிப் போகிறாள். அவளை அணைத்துக்கொண்டு அவளிடம் ஏதேனும் நல்லதாகப் பேசினால் பெரியவளுக்கு இன்னும் கோபம் வருகிறது. "எப்போதும் அவள்தான் உனக்கு ஸ்பெஷல். அவளுக்காக விதவிதமாகச் சமைத்துக் கொடுக்கிறாய். எனக்கு எப்பவும் சாதம், சாதம். I hate it. I hate You" என்று சத்தம் போடுகிறாள். "என்ன அப்படி பிஸி வீட்டில். You are not working hard and making money like Dad" என்று கேட்கிறாள். பல இரவுகள் நான் தூங்காமல் அழுதிருக்கிறேன். எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது நான். பேசாமல் இருந்து சிலநாள் பார்த்தேன். ஒரு பெண் சாப்பிடாமல் டிவியையே பார்த்துக்கொண்டு, பாப் கார்ன், சிப்ஸ் என்று குப்பை உணவையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எந்தத் தாயால் சும்மா இருக்க முடியும்? கேட்கத்தானே வேண்டியிருக்கிறது? போன வருடமெல்லாம் நன்றாகத்தான் இருந்தாள். இந்த ஒரு நான்கைந்து மாதமாக நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது. நீங்கள் எப்படியாவது என் பெண் திருந்த உதவ வேண்டும்.

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே

நீங்கள் வாடிக்கையாகத் தென்றல் படிப்பவரா, அதிலும் இந்த அன்புள்ள சிநேகிதியே பகுதியைப் படித்து வருபவரா என்று தெரியவில்லை. காரணம், பல முறை இந்த டீன் ஏஜ் பிரச்சினைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். நீங்கள் ஒரு தாயாக அனுபவிக்கும் வேதனை புரிகிறது. ஆனால் போன வருடம் வரை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பெண், இப்போது உங்களை வெறுக்கும் அளவுக்கு எதிர்க்க ஆரம்பித்து விட்டாள் என்றால், ஒன்று நிச்சயமாகப் புரிகிறது. நீங்கள் அவளை வளர்க்கும் விதத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. அதே தாயாகத்தான் இருந்து வருகிறீர்கள். அதே குழந்தையாகத்தான் பார்க்கிறீர்கள். அதுவும் அவள் வயதுக்கு வந்துவிட்டால் (வயது 15 என்கிறீர்கள். இதனால்) இன்னும் அதிகப் பொறுப்போடும் பயத்தோடும் அந்தக் குழந்தையை கனிவோடும் பாசத்தோடும் கண்டிப்போடும் வளர்க்கப் பார்ப்பீர்கள். ஆனால் உலகின் போக்கு மாறிப்போய்விட்டது. "நான் பருவம் அடைந்த யுவதி. நான் குழந்தையல்ல" என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதைத் தெளிவாக உணர்த்தத் தெரியவில்லை உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது. "I am an adult. I need to be mentored not controlled; I need to be directed not dictated."என்று சொல்ல விரும்புகிறது. அப்படியே சொல்லத் தெரிந்தாலும் தாய்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

நாம், "இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல வைத்துக் கொண்டால், அங்கே சிநேகிதம் வளரும். அவள் குழந்தையாக இருந்தபோது, நீங்கள் ஒரு கண்டிப்பான தாயா, இல்லை விட்டுக்கொடுக்கும் தாயா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவளை அதிகாரத்தால் வழிக்குக் கொண்டுவர முடியாது. அவள் படிப்பில் எப்படி, தோழிகள், தோழர்கள் யார் யார், வேறு ஆர்வங்கள் என்னென்ன என்று எந்த விஷயமும் எனக்குத் தெரியாத நிலையில், எப்படி உங்கள் மகளை வழிக்குக் கொண்டு வருவது என்று உபாயங்கள் சொல்லத் தெரியவில்லை. படிப்பில் மிகவும் நன்றாகக் கவனம் செலுத்தினால் டிவி/செல்ஃபோன் போன்றவற்றை அதிகம் கட்டுப்படுத்த வேண்டாம். அப்படி இருந்தாலும் நீங்கள் ஒரு சிநேகிதியாக அவளைப் பாவித்து கொஞ்சம் உறவைச் சமப்படுத்திக் கொண்டால், அவளுக்கு ஏதாவது முரண்பாடான சிநேகிதமோ அல்லது பழக்கங்களோ இருந்தால் சூசகமாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால் தடால், தடால் கதவு மூடல்தான். மனமும் மூடிவிடும்.

உங்கள் பெண்ணிற்கு நீங்கள் ஒரு தாயாகச் செய்யும் தியாகம் புரியாது. உங்களின் ஒவ்வொரு செய்கையிலும், பெற்றோரின் வலிமையையும் அதிகாரத்தையும் தான் பார்க்கிறாள். அவள் இயலாமை அவளுக்கு வெறுப்பையும் ஆத்திரத்தையும் கொடுக்கிறது. புரிந்து கொள்ளுங்கள். அவள் உங்களை வெறுக்கிறாள் என்று சுயபச்சாதாபத்திற்குப் போய்விடாதீர்கள். இன்னும் மூன்று, நான்கு வருடம் இந்த இந்தப் புரிதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். 21 வயதுக்கு மேல் நீங்கள் உண்மையைப் புரிந்துகொண்டேன் என்று அவளை ஒரு adult ஆக மரியாதை கொடுத்து நம்பிக்கையையும் வளர்ப்பீர்கள். இங்கே ஒரு ட்விஸ்ட். அப்போது உங்களுக்கு அவளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் தெரியாது. Between 13-19 there is an adult in every child. Between 20-25 there is a child in every adult. இது என்னுடைய அவதானிப்பு. மற்றவர்கள் கருத்து வேறுபடலாம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com