சாமை மாவு தட்டை
தேவையான பொருட்கள்
சாமை மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 1 கிண்ணம்
வறுத்து அரைத்த உளுத்த மாவு - 1/2 கிண்ணம்
பொட்டுக்கடலை மாவு (வறுத்து அரைத்தது) - 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு-சீரகப் பொடி - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை (ஒன்றிரண்டாக உடைத்தது) - 1/4 கிண்ணம்
பெருங்காயம் - சிறிதளவு
எள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
(அல்லது) காய்ந்த எண்ணெய் - 1 கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
சாமை மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, தேங்காய்த் துருவல், மிளகு-சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உடைத்த வேர்க்கடலை, வெண்ணெய் எல்லாம் போட்டு, தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். சிறு எலுமிச்சையளவு மாவு எடுத்து எண்ணெய் தொட்டுக்கொண்டு வாழையிலை அல்லது அலுமினியம் தாளில் வைத்து, கையால் வட்ட வட்டமாகத் தட்டி எண்ணெயில் போடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். கரகரப்பான தட்டை வாயில் போட்டால் கரையும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com