வித்தக இளங்கவி விவேக்பாரதி
கவிஞர் விவேக் பாரதி பதினாறு வயதில் முதல் கவிதை நூலை வெளியிட்டார். 'வித்தக இளங்கவி' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். விரைகவிவாணர், ஆசுகவி என்றெல்லாம் போற்றப்படும் விவேக், உரைநடை, சொற்பொழிவு, நடிப்பு, குறும்படம் எனப் பல களங்களிலும் சிறகுகளை விரித்திருக்கிறார். 'யானைமுகன் ஆன கதை' (வெண்பாவில் விநாயகர் வரலாறு) முதல் 'சிறகு' (கவிதைத் தொகுப்பு), 'பாவலர் மா. வரதராசன் பன்மணி மாலை', 'ககனத்துளி' (இலக்கியக் கட்டுரைகள்), 'பேசுபொருள் நீயெனக்கு' (கவிதை உரையாடல்), 'சுதந்திர தேவி' (குறுங்காவியம்) என ஆறு நூல்களை எழுதியுள்ளார். ஈரோடு தமிழன்பன் விருது, இலக்கியச் செம்மல் விருது, யுவகலா பாரதி விருது, பைந்தமிழ்க் குருத்து, பைந்தமிழ்ச் செம்மல் போன்ற கௌரவங்களையும் வென்றிருக்கிறார். vivekbharathipage.blogspot.com என்ற வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வரும் விவேக்குடன் தென்றலுக்காக ஒரு விரைந்த நேர்காணல்...



கவிதைக் காதல் பிறந்த கதை
அப்பா இந்தியக் கடற்படையில் பணிபுரிந்தார், அடிக்கடி இடமாற்றம் ஆகிக்கொண்டே இருக்கும். பணி ஓய்வுக்குப் பின், திருச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராகச் சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துக் கொண்டிருந்த நான், திருச்சியில் ஒரு வருடம் ஹிந்தியை இரண்டாம் மொழியாகப் படிக்கும்படி ஆனது. அம்மா ஹிந்தி ஆசிரியை, அப்பாவுக்கு ஹிந்தி பேசத்தெரியும் என்பதால் என்னை ஹிந்தி படிக்க வைத்தனர். அப்போதுதான் நான் தமிழைப் பிரிந்து எவ்வளவு வருந்தினேன் என்பது தெரிந்தது. சொற்கள் எனக்குள் முட்டி மோதிக்கொண்டே இருந்தன. அவை கவிதையா எனத் தெரியாது. ஏதோ சினிமா வசனம் போல எழுதுவேன். படித்துப்பார்த்த என் ஹிந்தி ஆசிரியை இது கவிதை, தொடர்ந்து எழுது என்றார். "பாட்டு வரிய மாத்திப் போட்டு எழுதிக் கவிதைங்கக் கூடாது" என்று தமிழ் வாத்தியார் என்னை எச்சரித்தார். ஊக்கியவரைவிட எச்சரித்தவர் என்னை அதிகம் எழுதத் தூண்டினார்.

அதன்பின் வேறு பள்ளி, அங்கே இரண்டாம் மொழியாகத் தமிழை எடுத்தேன். தமிழாசிரியர்களிடம், பாடப்புத்தகத்தில் வரும் செய்யுள்கள் எல்லாம் கவிதைகளா என்பதில் தொடங்கி அவற்றை எப்படி எழுதுவது என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டேன். அதிலொருவர், செய்யுள் வகைமை எல்லாம் எழுதுவது மிகக்கடினம் என்றார். என் ஆர்வம் அதிகமானது. என் பிறந்தநாள் பரிசாக அம்மா பாரதியார் கவிதைகளையும், சிற்றப்பா பாரதிதாசன் கவிதைகளையும் கொடுத்தனர். பெரும்பகுதி நேரத்தை பாரதியாருடன் கழித்தேன். பல பாடல்கள் புரியாவிட்டாலும் சந்தம், ஓசைநயம் என்பதற்காகத் துள்ளித் துள்ளி வாசித்தேன். இவைதாம் என் கவிதை ஆர்வக் கனலை ஊதிப் பெரிதாக்கின.



முதல் கவிதை
"எதற்காகவோ என் உயிர் செல்லுமெனில் அது என் தமிழுக்காக இருக்கட்டும்" என்று சினிமா வசனம்போன்ற வரிகள்தாம் நான் முதன்முதலாக என் ஹிந்தி வகுப்பின் கடைசி இருக்கைப் பலகையில் எழுதி வைத்தது. என் முதல் கவிதையை எழுதிய காலத்தில் சிந்தனை முழுக்கத் தமிழ்மீதுதான் இருந்தது.

எப்போதோ உன்னை இழந்திருப்பேன் செந்தமிழே!
அப்போதெல் லாம்நீ அகம்நிறைந்தாய் - தப்பென
யார்சொன்னால் என்னென்றே யான்தொட்டேன் உன்னை!நீ
ஊர்சொல்ல வைத்தாய் எனை!

என்று இலக்கணம் கற்ற பிறகு ஒரு வெண்பா எழுதினேன்.

வெண்பாவில் விநாயகன் கதை
எனக்கு பாரதியார் மீது அளவுகடந்த பக்தி. குறிப்பாக, பராசக்தி பாடல்கள்மீது. அது என்னையும் ஒரு பராசக்திப் பித்தன் ஆக்கியது. இன்றைக்கும் நான் வாழும் வாழ்வின் லட்சியம் என் பராசக்தியைப் பார்க்கத்தான் என்பதாக எனக்குத் தோன்றுகிறது. பராசக்தி என் அன்னை என்கையில், விநாயகன் எனக்கு அண்ணனாகிறான். முருகன் எனக்குத் தம்பி. திருச்சியின் குளுமையான இடங்களில் மிகப்பிரதானம் மலைக்கோட்டை. நிறையக் கவிதைகளை அங்கே நான் அறுவடை செய்திருக்கிறேன். இணையத்தில் இலக்கணம் கற்றேன். ஓர் அற்புதமான கவிஞரின் நிழலில் நான் மாணவனாக வளரும் வாய்ப்பினைப் பெற்றேன். அவர்தாம் கவிவேழம் இலந்தை சு. ராமசாமி. அவரது "வஞ்சத்தில் ஒன்றானை" பாடல் என் மலைக்கோட்டை விநாயகன் என் வாயால் அதிகம் கேட்ட பாடல். வெண்பா எழுதப் பழகிய புதிதில், கிட்டத்தட்ட 25 வெண்பாக்கள், ஒவ்வொரு முறையும் எழுதி உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவது வழக்கம். 'மலைக்கோட்டை பக்தன்' என்று அதில் கையொப்பம் இட்டிருப்பேன். விநாயகன் வரலாற்றை வெண்பாவில் எழுத நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தோன்றியது. அந்த இரவில் சுமார் 50 வெண்பாக்களில் எழுதினேன். அதுதான் நான் எழுதிய முதல் புத்தகம். (வாசிக்க)



"வித்தக இளங்கவி"
பதினோராம் வகுப்பு படிக்கும்போது துபாய் தமிழர் சங்கம் ஓர் உலகளாவிய கவிதைப் போட்டியை நடத்தியது. அதில் முதலிடம் வென்ற எனக்கு 'வித்தக இளங்கவி' என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் ஐயா முதல்பரிசு பெற்ற என் ஐந்து வெண்பாக்களைத் தமது 'மீண்டும் கவிக்கொண்டல்' இதழில் பிரசுரித்தார். 'அன்பு' என்ற தலைப்பில் அமைந்த வெண்பாக்கள் அவை.

நடிப்பும் குறும்படங்களும்
நடிப்பில் பெரிய ஆர்வம் இல்லை, ஆனால் நல்ல மரியாதை உள்ளது. "பாரதி யார்?" என்னும் எஸ்.பி. கிரியேஷன்ஸின் நாடகத்தில் பாரதிதாசன், கனகலிங்கம், பாம்பாட்டி முதலிய பாத்திரங்களில் நடித்து வருகிறேன். என் தமிழ் உச்சரிப்பாலும், பாரதிதாசனின் கவிதைகள் ஏற்கனவே மனப்பாடம் என்றதாலும்தான் நாடகத்தில் நடிக்க வந்தேன். என்னை நடிக்கச் சொல்லி அன்புக் கட்டளை இட்டது அதே நாடகத்தில் பாரதியாராக நடிக்கும் இசைக்கவி ரமணன் ஐயா.

எழுத வைப்பது எது?
"தென்றல் வந்து சேதிதரும்
தெளிந்த நிலா வார்த்தை தரும்
தென்னையிளங் கீற்றில்
ஒளி சிந்தி வந்து ஓசை தரும்

கன்றினங்கள் காதல் தரும்
காக்கைகூட கவிதை தரும்
காலையிலும் இவை வந்தென்
கருத்தினோரம் இனிமை தரும்

என்ற என் பழைய பாடலைத்தான் சொல்லத் தோன்றுகிறது.



கவிதையாகப் பேசுகிறார் விவேக் பாரதி. கவிதைக்கும் தனக்கும் மேலும் வளமும் பெருமையும் சேர்க்க வாழ்த்தி விடைபெறுகிறோம்.

அரவிந்த்

*****


மறக்க முடியாதவை
புதுக்கவிதைகளில் கோலோச்சி நின்ற ஈரோடு தமிழன்பன், என்னை வாழ்த்தி எழுதிய மரபுக்கவிதை எனக்குக் கிடைத்த முதல் ஆச்சரியமான பாராட்டு. "யாப்புச்செல்வன்" என்று என்னை விளித்து அந்தக் கவிதையை எழுதிக் கொடுத்தார். "நான் சொல்வதைச் செய், நான் செய்ததை ஒருபோதும் செய்யாதே" என்ற இசைக்கவி ஐயாவின் அறிவுரையும், "விவேக்! கவிதை எழுது! எழுதிக் குவிப்பதைக் காட்டிலும் எழுதக் குவி" என்ற இலந்தையாரின் அறிவுரையும் என்னை எனக்கு ஞாபகப்படுத்தும் விமர்சனங்கள்.

"இளம் கவிதைப்புயல்" என்று கவிமாமணி க. ரவி அவர்களும், "என் மாணவன்" என்று வாத்தியார் வ.வே.சு. ஐயாவும், "என் இலக்கிய வாரிசு" என்று ஒருமுறை இலந்தையாரும் சொன்னது நெகிழவைக்கும் பாராட்டுகள். என் கல்லூரி நண்பன் என்னை "கவியரக்கன்" என்று அழைப்பதும் எனக்கு ஒருவகையில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் பாராட்டுதான். "ரொம்ப வேகமாகப் போறீங்க! கொஞ்சம் நிதானம் வேணும் தம்பி" என்று புதுவயல் செல்லப்பனார் சொன்னது இன்னும் காதுக்குள் ஒலிக்கின்ற விமர்சனம். "சேரிடம் அறிந்து சேர்! தமிழை எப்போதும் நேசி! சமுதாயத்தைப் பாடு" என்பது பாவலர் மா. வரதராசன் ஐயா கொடுத்த அறிவுரை.

- விவேக் பாரதி

*****


என் கவிதா
(சுவைக்க இரண்டு பத்திகள் மட்டும்)

நீயோர் நெருப்பு! நீகாட்டும்
நிழலும் நெருப்பு! இதற்கிடையில்
தீயோர் நெருப்பா? எனைப்பார்க்கத்
திரும்பா முகமே நெருப்பென்பேன்!
சாயாக் கனலே எப்போதும்
சாந்தப் புனலே என்றெல்லாம்
ஓயா துரைக்கா திருந்துவிட்டால்
உடனே சினக்கும் என்கவிதா!

விதையும் நீதான் விருட்சம்நீ
விசித்தி ரத்தின் விலாசம்நீ
சதையும் நீதான் உயிரும்நீ
சத்தி யத்தின் பிம்பம்நீ
கதையும் நீதான் கர்த்தாநீ
கதைமாந் தர்கள் அவர்கள்நீ
எதையும் தாரா என்னிடமே
என்றும் வாழும் என்கவிதா!

- விவேக் பாரதி

*****

© TamilOnline.com