தென்றல் பேசுகிறது....
"தொங்கு பாராளுமன்றம்தான் இந்தியாவின் விதி, இனிமேல் இந்தியாவில் தனிப்பட்ட தேசியக் கட்சி எதுவும் மத்தியில் ஆட்சியமைக்காது" என்பதாக அரசியல் பண்டிதர்கள் அதிமேதாவித் தனமாகக் கதை விட்டுக்கொண்டிருந்த காலத்தில், ஒருமுறை அல்ல, இரண்டு முறை அந்தப் புனைவைத் தகர்த்திருக்கிறார் நரேந்திர தாமோதர்தாஸ் மோதி. தனியொரு கட்சியாக மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையை இம்முறை வென்றுள்ளது. இல்லையென்றால் எப்போதும் நடப்பதென்ன? மதம்சார்ந்த, ஜாதிசார்ந்த, பிரிவினை பேசுகிற, இந்திய கலாச்சாரத்தில் சற்றும் மதிப்பில்லாத, அப்பா-அம்மா-பிள்ளை-பேரன் கட்சிகள் ஆங்காங்கே சில தொகுதிகளில் வெற்றியடைந்து விட்டு, குதிரைப் பேரம் பேசிக்கொண்டு அமைச்சர் பதவிக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைந்தன. வேறு வழியில்லாமல் தேசியக் கட்சிகள் வளைந்து கொடுத்து, என்றைக்குச் சரிவோம் என்ற அச்சத்துடனேயே ஆட்சி நடத்தியதால், திட்டங்களைச் சரிவர அமல்படுத்த முடியாத நிலைமை இருந்து வந்தது. அந்த நிச்சயமின்மையை இல்லாததாக்கியது மோதி என்னும் பேராண்மை.

அவரைப்பற்றிய, அவரது ஆட்சியின் சாதனைகளைப் பற்றிய, சரியான செய்தி எதையும் தமிழகத்தில் நுழையவிடாமல் பார்த்துக் கொண்ட ஊடகங்களின் 'சாமர்த்தியத்தால்' தனிப்பட்டு நிற்கும் மாநிலங்களில் தமிழகமும் இருக்கிறது. தேசிய நீரோட்டத்துக்கு எதிராகச் செயல்படுதல் தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. நுண்ணறிவும் கடின உழைப்பும் தமிழனின் பலமாக இருந்துவந்தன. அதற்காக அவன் எங்கு சென்றாலும் மதிக்கப்பட்டான். இவ்விரண்டையும் சினிமா, சீரியல், இலவசங்கள் என்பவற்றால் மழுங்கடித்துக்கொண்ட காரணத்தால், இன்றைக்கு அரசியல்ரீதியாகத் தமிழனை அரை நூற்றாண்டுக் காலம் பிற்பட்டவனாக வைத்திருப்பது சாத்தியப்பட்டிருக்கிறது. சிந்திக்கத் தெரிந்த, சரியாகக் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தெரிந்த, போலி வாதங்களைப் புறக்கணிக்கத் தெரிந்த நல்லோர் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்" இல்லாததாக வேண்டும் தமிழ்நாடு.

*****


"மற்றவர்களால் நீ புகழப்பட விரும்பினால், நீ மற்றவர்களின் சிறப்புகளைப் பேச வேண்டும்" என்று கூறுகிறது நீதிநெறி விளக்கம் (பாடல்-20). அப்படி மற்றவர்களைத் தேடித்தேடி அழைத்துச் சிறப்புச் செய்தே தன்னை உயர்த்திக் கொண்டவர் 'சொல்லருவி' முத்துசீனிவாசன். சத்தான கவிதைகளை எழுதி 'வித்தக இளங்கவி' எனப் பட்டம் பெற்றவர் விவேக்பாரதி. இவ்விருவரின் நேர்காணல்கள் இந்த இதழை அணிசெய்கின்றன. சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கை அருமையாகத் தொடங்கியுள்ளது. சிறுதானியச் சிறுதீனிகளையும் சுவைப்பீர்கள். கதைகளும் கனமும் சுவையும் கொண்டவைதாம். எப்போதும் போலச் செறிவும் சீருமாக மீண்டும் தென்றல் உங்கள் கரங்களில். நீங்கள் ரசித்ததை எங்களுக்கு எழுதுங்களேன்.

வாசகர்களுக்கு அனைத்துலக யோக தினம், ரமலான் திருநாள் மற்றும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூன் 2019

© TamilOnline.com