பாஸ்டன்: ஸ்ரீலலிதா கல்யாணம்
2019 ஏப்ரல் 19-21 தேதிகளில் பாஸ்டன் அருகே வெஸ்ட்பரோ சுவாமிநாராயண் ஆலய அரங்கில், சிவ அஷ்டபதியை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலலிதா காமேஸ்வர கல்யாண விழா நடைபெற்றது. 'அஷ்டபதி' என்றதுமே 12ஆம் நூற்றாண்டில் ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தப் பாடல்கள்தாம் நினைவுக்கு வரும். ஆனால் 'சிவஅஷ்டபதி' என்று இன்னொரு பாடல் தொகுப்பு உள்ளது. ஜெயதேவரின் அஷ்டபதியை அடியொற்றி 20 அஷ்டபதிகளைக் கொண்ட இந்தக் காவியம் காமாக்ஷி அம்மனையும் ஏகாம்பரேஸ்வரரையும் போற்றி சிவபார்வதி லீலைகளை வர்ணிக்கிறது. 'சிவகீதிமாலை' என்றும் அழைக்கப்படும் இந்தக் கவிமாலையை அருளியவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, காஞ்சி காமகோடி பீடத்தின் 62வது சங்கராச்சாரியாரான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

நாமசங்கீர்த்தன வித்வான் குருநாத பாகவதர் தலைமையில் ஞானானந்த சேவா சமாஜத்தைச் சேர்ந்த பஜனை மண்டலியினர் இந்த சிவஅஷ்டபதிப் பாடல்களைப் பக்தி ததும்ப அளித்தனர். அசரவைக்கும் பாணியும், நிகரில்லா கம்பீரக் குரலும் கொண்ட சாக்ரமென்டோவைச் சேர்ந்த குருநாத பாகவதர், தென்னிந்திய சம்பிரதாய பஜனை முறையைப் பிரபலப்படுத்திய குரு ஹரிதாஸ்கிரி சுவாமிகளிடம் நேரடியாகச் சிறுவயது முதலே பயின்றவர். சென்ற வருடம் சித்தியடைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முதல்வருட ஆராதனை, காஞ்சி பரமாச்சாரியாரின் 126வது பிறந்தநாள் மற்றும் தற்போதைய பீடாதிபதி விஜயேந்திரரின் 51வது பிறந்தநாள், ஆகியவற்றைக் குறிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியைக் காஞ்சி காமகோடி சேவை மையம், ஞானாநந்த சேவை சமாஜம், மற்றும் சங்கரா ஹெல்த்கேர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தின.

ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை மாலை கர்நாடக இசைக்கலைஞர் அபர்ணா பாலாஜியின் 'அப்யாஸ் இசைப்பள்ளி' மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. ஏப்ரல் 20 சனிக்கிழமை காலை குருபாதுகை மற்றும் சுவாசினி பூஜைகள் நடைபெற்றன. பிறகு ராகமாலிகையாக சிவ அஷ்டபதி இசைமழை. இடையிடையே பரவசமூட்டும் நாமாவளி பஜனைப் பாடல்கள். சனிக்கிழமை மாலை தீபப் பிரதக்ஷிணத்தில் எல்லா வயதினரும் குதூகுலத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்தது பிரபல பரதநாட்டிய குரு ஸ்ரீதேவி திருமலையின் மாணவிகள் நடத்திய ரம்மியமான கூட்டுநடன நிகழ்ச்சி.

ஏப்ரல் 21 ஞாயிறு காலை சிவ அஷ்டபதி கீதங்கள் அதே இனிய பக்தி ரசத்துடன் தொடர்ந்தன. இதன் பிறகு திருமணப் பாடல்கள் நிறைந்த லலிதா கல்யாணச் சடங்குகள் - மணமக்களின் பிரவரம் வாசித்தல், மாலைமாற்றல், திருமாங்கல்ய தாரணம், நலங்கு உள்பட! சிவ அஷ்டபதியை இயற்றிய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெயரைக் கொண்ட காஞ்சி பரமாச்சாரியாரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷத்தன்று இந்தக் கல்யாண நிகழ்ச்சி அமைந்தது எல்லோருக்கும் மனநிறைவை அளித்தது.

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன்

© TamilOnline.com