இலங்கையின் வடபாகத்தில் சைவமும் தமிழும் ஓங்கி வளரும் யாழ்ப்பாணத்தின் நுழைவாசலில், வந்தோரின் கவனத்தை ஈர்க்கிறது திருவாசக அரண்மனை. பத்து ஏக்கர் பரப்பில் நாவற்குழி என்ற ஊரில் அமைந்திருக்கும் இந்த அரண்மனையில் எங்குமே காணாத பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த அரண்மனை சென்ற ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட்டது
திருவாசக அரண்மனையில் தெற்குநோக்கி இருக்கும் கோயிலின் மூலவராக சிவதட்சணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு மிக அழகாகக் காட்சியளிக்கின்றன.
சிவதட்சணாமூர்த்தியின் முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கல்தேர் பல கலையம்சங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. தேரில் சிவலிங்கமும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரின் திருவுருவமும் அமைந்திருக்கின்றன. தேரின் முன், பெரிய கருங்கல் நந்தி ஒன்று இருக்கிறது.
கருங்கல்லில் வடிக்கப்பட்ட நூற்றெட்டுச் சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மேலாக கட்டப்பட்டிருக்கும் சிறியமணிகளை பக்தர்கள் கைகளால் மெதுவாகத் தட்டி ஒலித்தபடி, திருவாசகப் பாடல்களைப் பாடியவாறு, அந்த லிங்கங்களை வழிபடுவது பக்திமயமான காட்சியாக இருக்கிறது. தட்சணாமூர்த்திக்கு உரிய வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கருங்கல்தேரைச் சுற்றி அமைந்திருக்கும் தடாகத்தின் நீரைச் சிறுகுடங்களில் ஏந்தி, நந்திதேவருக்கும், 108 சிவலிங்கங்களுக்கும் வரிசையில் நின்று நீராட்டுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
ஆலயத்தின் இரு பக்கச் சுவர்களிலும் மாணிக்கவாசகர் பாடிய 51 திருப்பதிகங்களின் 658 பாடல்களும் கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்பவரின் தலைமையில் 22 இளைஞர்கள் மிகநேர்த்தியாக இவற்றைக் கையால் உளிகொண்டு செதுக்கியுள்ளனர். இங்கே சிவபுராணம் தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலம், சிங்களம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இத்தாலி, ஃபிரெஞ்சு, அரேபியம் போன்ற பதினோரு மொழிகளிலும் காணப்படுகிறது.
இந்தத் திருப்பணிக்கு மூலகாரணமானவர் சிவபூமி அறக்கட்டளைத் தலைவராகவும், துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவராகவும் இருந்து, சைவமும் தமிழும் ஓங்க உழைத்துவரும் பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர், செஞ்சொற்செல்வர் திரு ஆறு திருமுருகன் அவர்கள். இவர் மக்களின் வாழ்வாதாரம் சிறக்கப் பல்வேறு பணிகளை யாழ்மாவட்டம் மட்டுமின்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் செய்துவருவது குறிப்பிடத் தக்கது.
"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது ஆன்றோர் வாக்கு. இந்த அரண்மனையும் உங்கள் உள்ளத்தை உருக்குவது உறுதி. இலங்கை செல்லும் அன்பர்கள் அவசியம் இங்கு சென்று தரிசித்து ஆனந்தமடையுங்கள்.
சிகாகோ பாஸ்கர் |