தெரியுமா?: அட்லாண்டா: TNF 45வது மாநாடு
"அமெரிக்காவில் எத்தனை வருஷமா இருக்கீங்க?", "சொந்த ஊர் எது?" என்று கேள்விகள் வரும்போதும், நம் ஊரைப்பற்றிய செய்திகளும் படங்களும் வாட்ஸாப்பில் வரும்போதும், முகநூலில் பள்ளி/கல்லூரித் தோழர்களைத் தேடித்தேடி அழைத்துப் பேசும்போதும், நம் நெஞ்சத்தின் அடியாழத்தில் இருப்பது "நான் என் ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும்" என்ற சிந்தனைதான். கனவுகளை, கடமைகளைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய மனோவேக வாழ்க்கைக்கு ஒரு வேகத்தடை போட்டு, இந்தச் சிந்தனைக்குக் காதுகொடுப்போம். அட்லாண்டாவில் நடக்கப்போகும் TNFன் 45ஆவது மாநாட்டில் பங்கேற்போம்.

தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation-TNF) கல்வி, கிராமப்புற மேம்பாடு, மகளிர் முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், இயற்கைச் சீற்றக் காலங்களில் பேரிடர் நிவாரணம் போன்ற குறிக்கோள்களுடன் 45 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அறக்கட்டளை மூலம் நம் சொந்தஊர் மேம்பட நம்மாலான எந்த உதவியையும் செய்யலாம். தன் பூர்விக கிராமமான நெற்குப்பையில் கவனிப்பாரற்றுக் கிடந்த அரசு நூலகத்தைக் கையிலெடுத்து, TNF திட்டமாகக் கொண்டு நிதியளித்து, இன்று "அற்புதமான அரசு நூலகம்" என்று விகடனால் பாராட்டப்படும் 'சோமலெ நினைவு நூலக'த்தை உருவாக்கினார் தலைவர் சோமலெ சோமசுந்தரம்; தான் பிறந்த நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலைப் பகுதியில் ஆறு பள்ளிகளைத் தத்தெடுத்து, TNF திட்டமாக மாற்றி நிதியளித்து, மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு எந்தக் குறையுமில்லாமல் கல்வி கிடைக்க வழிசெய்து வருகிறார் Dr. சுப்பிரமணியன். இப்படி எத்தனையோ 'கொடைச்சிறகு' கொண்ட உள்ளங்களின் கதைகள் உண்டு. கதையென்றா சொன்னேன்? மன்னிக்கவேண்டும், நெஞ்சம் நெகிழ்த்தும் நிஜங்கள் இவை!

அறக்கட்டளையின் 45ஆவது மாநாட்டின் முக்கியக் குறிக்கோள் மண்வாசனை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் பணிகள் தடையில்லாமல் தொடர 50 லட்ச ரூபாய்க்கு வைப்புநிதி அமைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு இந்தப் பணிகளைச் செய்வது திட்டம். மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலமோ, முடியாவிட்டால், நம்முடைய மாவட்டத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலமோ நீங்களும் இந்தப் பணிகள் தடையில்லாமல் தொடர உதவலாம்.

மழை வந்தால்தான் மண்வாசனையா? மாநாட்டுக்கு வந்தாலும் மண்வாசனை கமழும். அட்லாண்டா கலைஞர்களின் பறை ஆட்டத்துடன் தொடங்கி தமிழர் ஐந்திணைகளின் சிறப்பு நடனங்களையும் கொண்ட மதுரை முரளிதரன் வழங்கும் 'கடையேழு வள்ளல்கள்' நாட்டிய நாடகம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தலைமையில் 'இனிமையான வாழ்க்கை இருபதிலா? அறுபதிலா?' பட்டிமன்றம், சிக்கில் குருசரணின் தமிழிசை, ஹரிஸ் ராகவேந்திரா, விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் செந்தில், ராஜலட்சுமி மற்றும் மாளவிகாவின் இன்னிசை மழை, அட்லாண்டா செல்வாவின், தமிழரின் தனிச்சிறப்பை நகைச்சுவை கலந்து சொல்லும் 'சுழியம்' நாடகம், ஒன்பது வயதே நிரம்பிய குறள்சூடி உமையாளின் இலக்கியச் சொற்பொழிவு எனக் கணக்கிலடங்காக் கலைநிகழ்ச்சிகளைக் காண குடும்பத்தோடு வாருங்கள்!

மேலும் தகவலுக்கு:
வலைமனை: convention.tnfusa.org
தொலைபேசி: 781-486-3872 (781-4TNF-USA);
மின்னஞ்சல்: president@tnfusa.org

ஜெயாமாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com