மூத்த தமிழறிஞரும் சிலம்பின் பெருமையை உலகறியச் செய்தவருமான சிலம்பொலி செல்லப்பன் (91) காலமானார். இவர், நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் கிராமத்தில் எளிய குடும்பத்தில், சுப்பராயன் - பழனியம்மாள் இணையருக்கு, செப்டம்பர் 24, 1928 அன்று மகவாகப் பிறந்தார். முதுகலைக் கல்வியை முடித்தபின் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். ஆர்வத்தால் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழ் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றினார். சிலப்பதிகாரம் இவரை மிகவும் ஈர்த்தது. தமிழ்நாடெங்கும் பயணித்துச் சிலம்பின் பெருமையை மக்கள் அறியச் செய்தார். இவரது உரைத்திறனை வியந்த ரா.பி. சேதுப்பிள்ளை இவருக்குச் 'சிலம்பொலி' என்ற பட்டத்தைச் சூட்டினார். அதுமுதல் சிலம்பொலி செல்லப்பன் என்றே இவர் அழைக்கப்படலானார். சிலப்பதிகாரத்தை ஆய்ந்து 'சிலம்பொலி' என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் நூல் குறிப்பிடத்தகுந்தது. தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகப் பணியாற்றியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர் எனப் பல பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியிருக்கிறார். 'பெருங்கதை ஆராய்ச்சி', 'சங்க இலக்கியத் தேன்' போன்றவை இவருக்குப் பெருமை சேர்த்த படைப்புகளாகும். தமிழ்ப் பணிக்காக 'பாவேந்தர் பாரதிதாசன் விருது' பெற்றவர். இவரது 'சிலம்பொலி அணிந்துரைகள்' என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது.
|