நீதிமன்றங்கள் என்றால் அங்கு விதவிதமான வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம்தான். ஆனால் தெய்வத்திற்கு உரித்தான கோயில் சொத்தை மீட்க மனிதர்கள் வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்குப் பல வருடங்கள் நடையாய் நடந்து வெற்றி பெற்ற விந்தையைக் கேட்டதுண்டா? அப்படியொரு வழக்கு நடந்து வாதிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 1864ல் வயலூர் முருகன் கோயிலின் விசித்திரமான வழக்கில்தான் இத்தகைய அதிசயம் நடந்திருக்கிறது.
கோயில்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் இறையிலியாக (வரி தள்ளுபடி செய்து) நிலங்களை எழுதி வைப்பார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கோயிலின் நிர்வாகம் நடைபெறும். இப்படிப்பட்ட மானியமாக அளிக்கப்படும் நிலங்கள், அதை அளித்தவர் பற்றிய விவரங்கள் கோயில் கல்வெட்டுக்களில் காணப்படும். நிர்வாகம் செய்யக் கோயில் அறங்காவலர் குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். அதன் தலைவரும் அங்கத்தினர்களும் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்வார்கள்.
வயலூர் கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் ஒரு காலக்கட்டத்தில் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலத்தைத் தம்பெயருக்கு மாற்றிக் கொண்டார். அத்துடன் ஊர் மக்களுக்கு அவற்றை விற்றுவிட்டார். இதை அறிந்த கோயில் பட்டர் நரசிம்ம அய்யர் என்பவரும், கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வேளாள முருக பக்தரும் தலைவரை எதிர்த்தனர். செல்வாக்கு நிரம்பிய தலைவர் இவர்களை இலட்சியம் செய்யவில்லை. தலைவரிடம் நியாயம் கிடைக்காததால் இவ்விருவரும் திருச்சியிலிருந்து கால்நடையாக கும்பகோணம் சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் கும்பகோணத்தில்தான் இருந்தது. இன்றைய நாளைப்போல அக்காலத்தில் வாகனவசதி போக்குவரத்து அதிகம் கிடையாது. கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். வழக்குத் தொடர்ந்து பல நாட்கள் ஆகியும் தலைவரின் செல்வாக்கினாலும் போதிய ஆதாரங்கள் இல்லாமையாலும் வழக்கு முடிவுக்கு வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
ஆண்டுகள் கடந்தன. இருவருக்கும் தள்ளாமை வந்துவிட்டது. மீண்டும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்தது. முருகப்பெருமானிடம் சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர். தங்கள் சொந்த நலன் ஏதுமில்லாத இவ்வழக்கில் இம்முறையாவது முருகன் அருள்கூர்ந்து வழக்கை ஒரு முடிவுக்கு கொணர்ந்து நியாயம் வழங்க வழிசெய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு மறுநாள் கும்பகோணம் சென்றனர்.
இவர்கள் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த முருகப்பெருமான் அன்றிரவே நீதிபதி கனவில் தோன்றி மறுநாள் நீதிமன்றத்திற்கு வரும் வயதான வாதிகளை வைத்து அவர்கள் கூறும் தீர்ப்பின்படி வழக்கினை முடித்துவிடுமாறு பணித்தான்.
பத்துமணிக்குத் துவங்கும் நீதிமன்றத்திற்குக் காலை எட்டுமணிக்கே வந்துவிட்டார் நீதிபதி. எல்லோருக்கும் ஒரே திகைப்பு. வழக்குத் தொடர்பான கட்டுகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு படித்துப் பார்த்தார். நிலத்தை அபகரித்திருக்கும் தலைவரின் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமானது என்பது தெளிவாகப் புரிந்தது. ஆனால் அவரிடம் நிலத்தை வாங்கியிருப்பவர்கள் அத்தனை பேரையும் வரவழைத்து விசாரணை செய்தல் நடைமுறையில் இயலாது என்பது புரிந்தது. வழக்கு சம்மந்தமாக வயலூரிலிருந்து வந்திருப்பவர்களை அழைத்து வரச் செய்தார். கனவில் முருகன் கூறியபடி வயதான அவ்விருவரையும் பார்த்து வழக்கினைத் தீர்த்து வைக்க வழி கூறுமாறு கேட்டார்.
வாதிகள் இருவரும் கூறிய முடிவு இது தான்!
வயலூரிலுள்ள நிலச்சொந்தக்காரர்கள் எல்லோருமே ஆண்டுதோறும் அவரவர் சாகுபடியில் இவ்வளவு நிலத்திற்கு இவ்வளவு கலன் நெல் என்று கோயிலுக்கு அளக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் வழக்கு முடிந்துவிடும் என்றார்கள். காலை 10 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது. நீதிபதி இதே முடிவை வழக்கின் தீர்ப்பாக கூறி அன்றே வழக்கை முடித்து வைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நெல் அளப்பதற்குப் பதிலாக குறிப்பிட்ட அளவு நிலத்தைக் கோயிலுக்கென்று மானியமாக எழுதி வைத்துவிட்டனர் பலர். இப்படி எழுதி வைக்கப்பட்ட நிலமாக இன்று வயலூர் முருகனுக்கு 23 ஏக்கர் நிலம் மானியமாக உள்ளது. வழக்குத் தொடுத்த அன்பர்களின் ஆழ்ந்த பக்தியும் தன்னலமற்ற உள்ளமும் விடாமுயற்சியும் இப்படியொரு நன்மையைச் செய்திருக்கிறது. கோயிலுக்கென நெல் அளக்கும் நிலங்களின் பரப்பளவு 196 ஏக்கர் என்பதும் இன்றளவும் இது நடைமுறையில் தொடர்கிறது என்பதும் எப்படிப்பட்ட வெற்றி. நிலத்தை வாங்கியோரும் விற்போரும் இந்தத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட வழக்கும் தீர்ப்பில் வெற்றியும் தமிழக வரலாற்றில் எந்தக் கோயிலிலும் இல்லை என்பதுதான் விந்தை!
முனைவர் அலர்மேலு ரிஷி |