சான் ஹோசேயில் வசிக்கும் 18 வயதான ஆஷ்ரிதா ஈஸ்வரன் 2019 மார்ச் 18 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டார். செயின்ட் லூயிஸ், மிசௌரியில் நடந்த இந்தப் போட்டிகளுக்கு நாட்டின் மிகச்சிறந்த 12 வீராங்கனைகள் மட்டுமே அழைக்கப்படுவர் என்பதோடு இதில் ஒவ்வொருவரும் மற்றப் பதினோரு பேர்களுடனும் மோத வேண்டும் (ரவுண்டு ராபின்). ஆஷ்ரிதா இத்தொடர் போட்டிகளில் பங்கேற்பது மூன்றாவது முறை.
தனது வலுவான ஆட்டத்தால் ஆஷ்ரிதா 5வது இடத்தை மூவருடன் பகிர்ந்துகொண்டார். மூன்றாவது நாளன்று சபீனா ஃபாய்சருடன் அவர் ஆடியது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. "இருவரும் சமமாகவே ஆடி வந்தனர். தொடக்கத்தில் ஆஷ்ரிதா ஆதிக்கம் செலுத்தினாலும் ஃபாய்சர் விரைந்து முன்னேறத் தொடங்கினார். ஆனால் ஆஷ்ரிதா எதிரிக் கோட்டையை உடைத்துப் புகுந்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அதன்பின் ஃபாய்சருக்கு இறங்குமுகம்தான். ஆஷ்ரிதாவின் ஆற்றல் மிக்க காய்நகர்த்தலை ஃபாய்சரால் சமாளிக்கவே முடியவில்லை" என்று வர்ணித்தது US Chess Champs பெர்க்கலி பல்கலைக்கழக மாணவரான ஆஷ்ரிதா 2019ஆம் ஆண்டின் டுல்ஸாவில் (ஓக்லஹாமா) நடக்கவிருக்கும் அமெரிக்க ஜூனியர் மகளிர் சேம்பியன்ஷிப்பில் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிறார். தமது கல்லூரிக் கல்வியுடன் செஸ் ஆர்வத்தையும் மிகத்திறம்படக் கையாண்டு பெருமைகளைக் குவித்து வருகிறார் ஆஷ்ரிதா. இவரது அடுத்த இலக்கு 'இன்டர்நேஷனல் மாஸ்டர்' தகுதியை எட்டுவது.
சில புள்ளிவிவரங்கள்: தரவரிசை (Rating): 2295 U19 பெண்கள் தேசிய அளவில் இடம் - 2 U21 பெண்கள் தேசிய அளவில் இடம் - 21 தேசிய அளவில் பெண்களிடையே இடம் - 13
தமிழில்: மதுரபாரதி ஆங்கில அறிக்கை: தீனா மஜீத் |