சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவுவது பற்றி விசாரணைக் குழுவொன்று 1927ம் ஆண்டில் மதுரையில் இராம நாதபுரத்து அரசர் தலைமையில் நிறுவப்பட்டது. இதனைத் தன் சார்பில் வற்புறுத்தச் சுவாமி விபுலாநந்த அடிகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் அழைத்தது.
அப்போது அடிகள் ஈழத்திலுள்ள இராமகிருஷ்ணா மிஷன் பாடசாலைகளை மேற்பார்வையிட்டு வந்தார். இருப்பினும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று அடிகள் மதுரை சென்று இராமநாதபுரத்து அரசர் முன்னிலையில் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் கட்டாயம் நிறுவப்பட வேண்டுமென தக்கவாறு எடுத்துரைத்தார். அதன் பயனாகச் சிதம்பரத்திலே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோன்றியது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைப்பதற்குக் காரணமாகவிருந்த செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்கும்படி விபுலாநந்த அடிகளைக் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க 1931-ம் ஆண்டு ஆடி மாதம் தமிழ்ப் பேராசிரியப் பணியை ஏற்றுக் கொண்டார். அக்காலத்திலே சென்னைப் பல்கலைக்கழகத்தில் கூடத் தமிழ்த்துறைக் குப் பேராசிரியப் பதவி இருக்கவில்லை. எனவே தமிழ்நாட்டின் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமை விபுலாநந்த அடிகளுக்கே உரியது.
சுவாமி விபுலாநந்தர் (1892-1947) ஈழத்திலே பிறந்தவர். ஆனால் தமிழியல் ஆய்வு வரலாற்றில் அவருக்கு நிலையான ஓர் இடமுண்டு. ஈழம் தமிழகம் என்ற நிலத்து எல்லைகளைக் கடந்து தமிழுலகம் தக்க புலமையாளரைக் கௌரவிக்கும் என்பதையே முதல் தமிழ்ப்பேராசிரியர் என்ற தகுதி இனங்காட்டுகிறது.
ஈழத்தின் மட்டக்களப்புக் காரைத்தீவில் மார்ச் 27, 1892 அன்று பிறந்த அடிகளாரின் இயற்பெயர் மயில்வாகனம். தமிழும் ஆங்கிலமும் தக்க ஆசிரியர்களிடம் கற்றுக் கேம்பிரிட்ஜ் சீனியர் தேர்வில் சித்தியடைந்து, ஆசிரியராகி கொழும்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஈராண்டு பயிற்சி பெற்றார். தொடர்ந்து விஞ்ஞானத்தில் பட்டயமும், மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் பட்டமும் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணம் அர்ச்சம்பத்திரிசியார் கல்லூரியில் 1917-ல் விஞ்ஞான ஆசிரியரானார். அக்காலத்தில் பல்வேறு அறிஞர்களின் துணையுடன் விவேகாநந்த சபையை நிறுவியதோடு 1917-ல் மயிலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ணா மிஷன் சபைத் தலைவர் சர்வானந்தர் யாழ்ப்பாணம் வந்த போது அவரை முன்னின்று வரவேற்றார். யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசுடன் இணைந்து பல சமூக முற்போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே அடிகளார் இலண்டன் அறிவியல் இளங்கலைப் பட்டத் தேர்விலும் சித்தியடைந்தார். அதனைத் தொடர்ந்து 1920-ல் யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபரானார். இருப்பினும் ஆன்மிகத்தில் ஈடுபாடும் அதிகரிக்கவே அடிகளார் 1922-ல் சென்னைக்குச் சென்று இராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து 1924-ல் 'விபுலாநந்தர்' என்ற துறவுப் பெயர் பூண்டார். துறவியாகிய இவர் மயிலாப்பூரிலிருந்த போது 'இராமகிருஷ்ணவிஜயம்' என்ற தமிழ் இதழுக்கும் 'வேதாந்த கேசரி" என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்ததோடு இந்த இதழ்களில் தானும் அவ்வப்போது தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வந்தார். அத்தோடு மதுரைத் தமிழ்ச்சங்கப் பணிகளோடும் தன்னை இணைத்துக் கொண்டார்.
அடிகளார் உலகியலிலே துறவு கொண்டாலும் அவரது அறிவுத் தேடல், ஆராய்ச்சி முத்தமிழிலும் விரிவும் ஆழமும் வேண்டி நின்றது. அதைவிட அவர் வாழ்ந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. சுதந்திரப் போராட்ட எழுச்சி எங்கும் சமூக எழுச்சியாக வளர்ந்து மாற்றத்தை உருவாக்கும் காலகட்டமாகவும் இருந்தது. வேறோரு தளத்தில் மறுமலர்ச்சித்தமிழ், நவீனத் தமிழ் வளர்ச்சி அடைந்துவரும் காலகட்டமாகவும் அமைந்திருந்தது. மரபுக்கல்விப் பாரம்பரியத்தில் நவீன சிந்தனை, நவீன அறிவியல் ஆகியவற்றின் இணைவு புதிய கல்விப் பாரம்பரியத்துக்கு அடித்தளம் இட்டது. தமிழ்மொழி கலாசாரம், புலமை, ஆய்வு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக இருந்தது. இந்தச் சமூக மாற்றத்தின், சிந்தனைகளின் உள்வாங்கல்கள் மூலமே இயங்கியவர் சுவாமி விபுலாநந்தர்.
சுவாமி தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளுடன் சமஸ்கிருதமும் நன்கு கற்றவர். இலத்தீன், சிங்களம் முதலிய மொழிகளில் திறமையும் பெற்று விளங்கினார். ஆக, பன்மொழிப் புலமை மிக்கவராகவும் விளங்கினார். மேலும் விஞ்ஞான அறிவும் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வலியுறுத்திய சமரச நோக்கும் சமூக, சமயப் பணிகளிலேயே நன்கு துலங்கியுள்ளன.
சுவாமி இலக்கியம், இசை, மொழி, சமயம், வரலாறு, மொழிபெயர்ப்பு, அறிவியல் தமிழ் எனப் பல்வேறு துறைகளிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவர். அதாவது தமிழியல் ஆய்வு வரலாற்றில் இவருக்கு நிலையான இடமுண்டு. குறிப்பாக இசைத் தமிழ் பற்றிய பேராராய்ச்சி இங்கு கவனத்திற்குரியது.
பண்டைத்தமிழர் பண்பாட்டில் சிறப்புற்று விளங்கிய இசைத்தமிழின் மாண்புகள் நன்கு அறியப்படாமல் இருந்த காலத்திலே பல்லாண்டுகள் இசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்டு அதன் பேறாக யாழ் நூலை எழுதினார். சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று கதையில் யாழ் ஆசிரியன் அமைதிகூறும் இருபத்தைந்து அடிகளுக்கு ஏற்றதொரு விளக்கவுரையாக அமைந்துள்ளது சுவாமி இயற்றிய 'யாழ்நூல்' என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1947-ம் ஆண்டு வெளிவந்தது.
பழம் தமிழர் பயின்ற யாழ் என்னும் நரம்புக்கருவி, தமிழரிசையின் பாலைத் திரிபியல், நூற்று மூன்று பண்கள், தேவாரப் பண்ணிசைகள், பழந்தமிழ்நாட்டு இசைக் கல்வெட்டுகள் ஆகிய பல செய்திகள் இந்நூலில் விரித்துப் பேசப்பட்டுள்ளன. குறிப்பாகச் சொல்வதென்றால் தமிழர் வளர்த்த இசை பற்றியவையாக இருந்து மறைந்துபோன பல அரிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு இந்நூல் மூலம் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளார்.
சுவாமி சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், இடைக்கால இலக்கியங்கள், வடமொழி நூல்கள், கல்வெட்டுகள் முதலியவற்றின் துணை கொண்டு தமது இசை ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதைவிட இசை ஆராய்ச்சிக்குக் கணித அறிவு மிக முக்கியம். இதில் சுவாமி புலமைமிக்கவராகவே இருந்துள்ளார். மேலும் பௌதிகம், கர்நாடக இசை முதலான துறைகளில் வாய்க்கப்பெற்றிருந்த புலமையும் தமிழிசை ஆய்வு முழுமை பெற்றுச் சிறந்த இசைத்தமிழ் ஆய்வு நூலாக யாழ்நூல் வெளிவருதற்குப் பின்னணியாக அமைந்திருந்தது.
அடிகளார் தொடர்ந்து இசைபற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றையும் சேர்த்து வைத்துப் பார்க்கும் பொழுது தமிழிசை ஆய்வு வரலாற்றில் சுவாமி விபுலாநந்தருக்கு முதன்மையான இடமுண்டு.
யாழ்நூல் கீழ்க்கண்ட ஏழு பகுதிகளாகக் கொண்டுள்ளது. 1. பாயிரவியல் 2. யாழுறுப்பில் 3. இசை நரம்பியல் 4. பாலைத்திரிபியல் 5. பண்ணியல் 6. தேவாரவியல் 7. ஒழிபியில். இந்த ஏழு பிரிவுகளும் விரிவாக விளக்கப்படுகின்றன. பண்டைத்தமிழிசை பற்றி பல செய்திகள் இசைக்களஞ்சியமாகவே யாழ்நூலில் ஆழ்ந்துள்ளன. தமிழ் மரபின் தொடர்ச்சி நிலை நின்று வரலாற்று பூர்வமான இசையியல் ஆய்வுக்கான மூலங்களை ஆராய்ச்சி பூர்வமாகத் தந்த பெருமை சுவாமி விபுலாநந்தரையே சாரும்.
பொதுவாக யாழ்நூல் பற்றி இன்னும் விரிவான வாசிப்பு ஆய்வு தமிழில் முழுமையாக இடம் பெறவில்லை. இதனாலேயே 'யாழ்நூல்' முக்கியத்துவம் இன்னும் புலமை மட்டங்களில் முக்கியம் பெறாமல் உள்ளது. தமிழ் மரபுநிலை நின்று இசையியியல் ஆய்வு இன்னும் துலக்கம் பெறும். ஆழம் பெறும். இதைவிட விபுலாநந்தரின் விரிவான தேடல், வாசிப்பு, ஆய்வு, அறிவியல் நோக்கு ஆகியனவும் நன்கு புலப்படும். மேலும் விபுலாநந்தரின் புலமை ஆளுமை எத்தகையது என்பதும் நன்கு தெரியவரும்.
இங்கு நாம் சுவாமியின் 'இசையியல்' முக்கியத்துவம் மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் அவரது மொழி, இலக்கியம், சமயம் கல்வி பற்றிய ஆய்வுகள் பற்றியெல்லாம் தொகுத்துப் பார்க்கும் பொழுதுதான் அவரது பன்முக ஆளுமை, புலமைத்தாடனம் நன்கு தெரியவரும்.
1933-ம் ஆண்டு அண்ணாமலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி வந்த வேளையில், இந்தியத் தேசியக் கொடியினைத் தன் வீட்டிலேயே பறக்க விட்ட ஒரே பேராசிரியர் அவர் என்பது கவனிப்புக்குரியது. இச்செயற்பாடு மூலம் இவருக்கு தேசியவிடுதலையில் இருந்த ஆர்வம் நன்கு புலப்படுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த காலத்தில் (1931-34) அங்குள்ள சேரிப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்காக இடைவிடாது பணியாற்றி வந்தார். இதுபற்றி விபுலாநந்தரின் மாணவராக இருந்த அ. மு. பரமசிவானந்தம் கீழ்வருமாறு குறிப்பிடுவது கவனிப்புக்குரியது.
"...தாழ்ந்த மக்கள் வாழ்ந்த இடங்களுக்குத் தாமே சென்று அவர் தம் நிலைமையையும் வளர வேண்டிய வகையினையும் காட்டித் திருத்த முற்படுவார் அடிகளார். அவருடன் நானும் சில அன்பர்களும் செல்வதுண்டு. அங்குள்ள பிள்ளைகளுக்கென வடை, சுண்டல், முதலியன கொண்டு சென்று கொடுத்து அவர்களை மகிழ்வூட்டி வருவோம். இளம் குழந்தைகளைக் குளிப்பாட்டிச் சட்டையிட்டு மகிழ்வோம்."
இவ்வாறு சேரி மக்களிடையே அடிகளார் பணி புரிந்தமையால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. அது பற்றிய ஒரு சம்பவத்தைப் பேராசிரியர் பரமசிவானந்தம் குறிப்பிடுகிறார்.
"...பலநாட்கள் இவ்வாறு திருவேட்களத்தைச் சுற்றியிருந்த சேரிகளிலும் பிற தாழ்ந்த இடங்களிலும் நாங்கள் தொண்டு செய்து வந்தோம். ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி எங்கள் உள்ளத்தை உருக்குகிறது. அந்த நாளில் நாங்கள் கூட்டமாக ஒதுக்கிடம் ஒன்றிற்கு பணி செய்யச் சென்ற போது, அங்கு முக்கியப் பணியாற்றிய பெரிய பிராமண நண்பரின் சிறு மகனொருவன் எங்களோடு வந்துவிட்டான். அங்கே நாங்கள் அளித்த சுண்டல் முதலியவற்றை அவனும் சுவைத்து உண்டான். எனினும் நாங்கள் திரும்புவதற்குள் அவன் வீடு திரும்பி விட்டான். நாங்கள் அந்த வீட்டு வழியே வருதல் வேண்டும். அவ்வாறு வரும் போது நாங்கள் கண்ட காட்சி எங்களை நடுங்க வைத்தது."
அந்த இளம் பிள்ளை செல்லாத இடத்திற்குச் சென்று வந்ததற்காக தூணில் கட்டப்பட்டு சாணத்தால் அபிஷேகம் செய்யப் பெற்றான். நாங்கள் அந்த வீட்டு வாசலைத் தாண்டும் அதே வேளையில் நாங்கள் காண வேண்டும் என்றே அத்திருப்பணியை அந்த வீட்டிலுள்ளவர்கள் செய்தனர். எங்கள் உள்ளங்கள் எரிமலை யாகக் குமுறின. எனினும் உடன் வந்த அடிகளார் எங்களைக் கையமர்த்தி இதுதான் உலகத்து இயற்கை என உணர்த்தி நடத்திச் சென்றார்கள்.
இத்தகைய பணிகளால் சுவாமிகளுக்குப் பல சோதனைகள் ஏற்பட்டன. இவரை உணர்ந்து கொள்ளாத பலர் இவர் பேராசிரியர் என்பதைக் கூடப் பொருட்படுத்தாது அவரை இம்சைப்படுத்தினார்.
சில தினங்கள் அங்குள்ள நல்ல நீர்க்கேணியில் அவர் நீர் எடுக்கத்தடை உண்டாயிற்று. ஆயினும் அடிகளார் உள்ளம் கலங்காது அது இறையருளே என உணர்ந்து உப்பு நீரையே எல்லா வகைக்கும் உபயோகித்து வாழ்ந்து வந்தார் என்பதை நெருங்கி நின்ற ஒரு சிலரே அறிய முடியும்" எனப் பேரா. பரமசிவானந்தம் குறிப்பிடுவார்.
இவ்வாறு விபுலாநந்தர் பேராசிரியர் எனும் நிலைக்கும் அப்பால் சென்று சமூகத்தின் அடிநிலை மக்களுடன் உறவு கொண்டு வாழ்ந்து வந்தவர் என்பது வெளிப்படை யானது. இவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பொழுது கூட இதனையே பின்பற்றினார். அதற்காக அவர் அடைந்த இன்னல்களும் துன்பங்களும் அதிகம்.
1932-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக்தில் 'பாரதியார் கழகம்' என்ற பெயரில் ஒரு கழகத்தைத் தோற்றுவித்து பாரதியாரின் பாடல்களின் சிறப்பையும் கவித்துவ வீச்சையும் சிந்தனைகளையும் எடுத்துப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். பாரதியை மகாகவியாக ஏற்றுக் கொண்டு அதற்கான புலமை நியாயத்தையும் முன்வைத்த பெருமை அடிகளாருக்கு உண்டு.
1922-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றும்படி அடிகளார் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்பொழுது இராமகிருஷ்ணாமிஷன் இதற்கு இணங்கவில்லை. ஆனால் அடிகளாரின் புலமை காரணமாக மீண்டும் 1931-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியர் பதவி வகிக்க மிஷன் அனுமதி கொடுத்தது. தொடர்ந்து 1943-ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்று அதன் முதல் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
தமிழ்ச்சூழலில் முதல் தமிழ்ப்பேராசிரியர் என்ற பெருமை சுவாமி விபுலாநந்த அடிகளாரையே சாரும். தமிழகம், ஈழம் என்ற எல்லைகள் கடந்து வாழ்ந்த புலமை யாளர் அடிகளார். இவரது ஆய்வுகள் தமிழியல் பரப்பில் தனித்துவமுடையன. புதிய ஆராய்ச்சிப்பாரம்பரியத்துக்கும் சிந்தனை மரபுக்கும் காரணமாக இருந்தவர் என்றால் மிகையல்ல. சுவாமி 1947 ஜூலை 19 அன்று மறைந்தார்.
சுவாமி விபுலாநந்தரின் பணிகள், ஆய்வுகள் பலதரப்பட்டவை. அவை குறித்து நாம் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் தேடிச் சென்றால் பன்முக ஆராய்ச்சி மரபுகளைக் கண்டடையலாம்.
தெ. மதுசூதனன் |