சிற்பி அப்பர் லட்சுமணன்
பிரமிக்க வைக்கிறது அந்தத் தொழிற்கூடம். முற்றிலும் மரத்தாலான பிரம்மாண்டமான அலங்கார விளக்கு, மரத்தாலான சைக்கிள், மோட்டார் சைக்கிள், தட்டு, தண்ணீர்க் கோப்பை, சாப்பாட்டு கேரியர், அரிக்கேன் விளக்கு, மின்விசிறி என்று இங்கு எதைப் பார்த்தாலும் மரம்தான். வேலையில் மும்முரமாக இருக்கும் அப்பர் லட்சுமணன் நம்மைப் பார்த்ததும் வரவேற்று அலுவலக அறைக்கு அழைத்துச் செல்கிறார். "என் குருநாதருக்குச் சிலை சமைத்து தெய்வமாக வழிபட்டு வருகிறேன்" என்று காண்பிக்கிறார். அது, பத்மபூஷன் வை. கணபதி ஸ்தபதி அவர்களது சிலை. சுற்றிலும் கிருஷ்ணர், புத்தர், பெருமாள், கணபதி என மரச்சிற்பங்கள். மேலே புடைப்புச் சிற்பமாக விநாயகரின் தசாவதாரக் கோலம். "அபாரமான கற்பனை!" என்றதும் புன்னகைக்கிறார். "இதையேதான் குருநாதர் கணபதி ஸ்தபதியும் சொன்னார்" என்கிறார். குன்றத்தூர் ஆலயத்துக்கு ரதம், சென்னை விமான நிலையத்தில் இருக்கும் தமிழ்த்தேர் (வள்ளுவர் ரதம்) போன்றவையும் இவர் வடித்த மரச்சிற்பங்கள்தாம். மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 'குரு சிஷ்ய பரம்பரா' என்னும் தச்சுக்கலைப் பயிற்சி வகுப்பும் இங்கு நடைபெறுகிறது. முற்றிலும் மரத்தாலான கோயில் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். தமிழக அரசின் 'பூம்புகார் விருது' உட்படப் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் அப்பர் லட்சுமணனுடன் நடந்த உரையாடலில் இருந்து...

தென்றல்: எந்த வயதுமுதல் இந்தத் தொழிலைச் செய்து வருகிறீர்கள்?
அப்பர் லட்சுமணன்: நான் சிறுவயது முதலே சுவாசித்தது, தவழ்ந்தது, வளர்ந்தது எல்லாமே இந்த மரங்களுடனும், பலகைகளுடனும்தான். திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் எனது பூர்வீகம். பரம்பரைத் தச்சுத்தொழில் எங்களுடையது. தாத்தா கோயில் தேர்கள் செய்தார். அப்பா காலத்தில் தேர்வேலை அதிகம் இல்லாததால் காலத்தின் தேவைக்கேற்ப மாட்டுவண்டி, நுகத்தடி, சக்கரம், கலப்பை போன்றவற்றைச் செய்தார். சிறுவயதில் என் விளையாட்டுப் பொருட்களே உளி, சுத்தி, வாள் தான். வீடுதான் பட்டறையும். பள்ளிவிட்டதும் நேராக வந்து அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ உதவவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

வேலை நிமித்தமாகக் குடும்பத்தோடு சென்னைக்கு வந்தோம். இங்கே ஒரு மரத்தச்சருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அப்பாவுக்கு ஊரில் நல்ல மரியாதை. ஒரு வேலையாளாக நினைத்தார்களே தவிர, அவனிடம் என்ன விஞ்ஞானம், தொழில்திறன் இருக்கிறது என்பது புரியவில்லை. ஏட்டுக்கல்வியை முடித்துவிட்டு எந்த அனுபவமும் இல்லாமல் வரும் ஒருவரின் கீழ், அவர் எஞ்சினியர் என்பதற்காக, அனுபவம் வாய்ந்த நாங்கள் வேலை பார்க்கவேண்டி இருந்தது. திறமைக்குரிய அங்கீகாரம் இல்லாத நிலையில் நாம் யார் என்று காண்பிக்க நினைத்தேன்.



தென்றல்: என்ன செய்தீர்கள்?
சிற்பி: என் அண்ணன் எனக்கு ஒரு சைக்கிள் கொடுத்திருந்தார். அதிகம் ஓட்டாததால் துருப்பிடித்து இருந்தது. அண்ணனும் காலமாகி விட்டார். அதனால் அந்தச் சைக்கிளின் பல பாகங்களை மரத்தினால் செய்து ஒன்றிணைத்தேன். ஒரு சமயம் எனது கடைப்பையன் ஒரு வேலையாக அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான். ஒரு மணி நேரம் ஆகியும் அவன் வரவில்லை. தேடிக்கொண்டு போனால் அவனைச் சுற்றி ஒரே கூட்டம். எல்லாரும் மரச்சைக்கிளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். என்னால்கூட அருகே போகமுடியாத அளவு கூட்டம். 'ஒரு சாதாரண முயற்சிதான் செய்தோம்; அதற்கு இவ்வளவு வரவேற்பா?' என்று ஆச்சரியப்பட்டேன். அதுவரை கவனிக்காதவர்கள் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். அதுவே தொடர்ந்து பைக், கார் எல்லாம் செய்யத் தூண்டுகோலானது. பைக்கிற்கும் அதேபோல் நல்ல வரவேற்பு.

தென்றல்: சைக்கிள், பைக் சரி, காரை எப்படிச் செய்தீர்கள்? அதைச் சாலையில் ஓட்ட அரசு அனுமதி கிடைத்ததா?
சிற்பி: பழைய மாருதி 800 கார் ஒன்றை வாங்கினேன். இஞ்சின், பெட்ரோல் டேங்க் போன்ற சில பாகங்கள் தவிர, ஸ்டியரிங், பக்கக் கதவுகள், சைலன்சர் எல்லாவற்றையும் மரத்தில் செய்தேன். அந்தக் காரைப் பார்த்துவிட்டு, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் கண்காட்சிக்கு அழைத்து இலவசமாக ஒரு ஸ்டால் கொடுத்தார்கள். மக்கள் விரும்பிப் பார்த்தார்கள். செய்தி பரவியது. தமிழ்நாட்டைவிடக் கேரளாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. கேரளத்தின் மாத்ருபூமி உள்பட ஒரே நாளில் 27 பத்திரிகைகளில் என்னைப்பற்றி, எனது காரைப்பற்றிய செய்தி வந்தது. அதிகாரிகள் பலரும் வந்து பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் காரைச் சாலையில் ஓட்ட அனுமதிக்கவில்லை.

தென்றல்: ஏன்?
சிற்பி: காரணம், இந்த கார் உறுதியானதா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு. இதன் தாங்கும்திறன் என்ன, போல்ட்-நட்டின் இறுக்கம் என்ன, கெபாசிடி என்ன என்றெல்லாம் கேட்டார்கள். குறிப்பாக, காரில் உள்ள மரத்திலான போல்ட், நட்டுகளின் தாங்கும்திறன் பற்றிக் குடைந்தனர். மரக்காரில் நட்-போல்ட்டுக்கு வேலை இல்லை. அப்பா, தாத்தா காலத்திலிருந்து, மரச்சாமான்களின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க ஒரு மூங்கில்குச்சியைச் சீவி இறுக்கமாக அடித்துவிடுவார்கள். அதில் தண்ணீர் ஊற்றி வருவார்கள். அந்தப் பகுதியை என்னசெய்தாலும் பிரிக்கமுடியாது. இறுகிவிடும். பிரிக்கவேண்டும் என்றால் அறுத்துத்தான் எடுக்கவேண்டும். ஆனால் அதன் தாங்குதிறன் என்ன என்பது தெரியாது. அதனால் அனுமதி தரவில்லை. ஆனால், கேரளாவில் என் காரை ஓட்ட அனுமதித்தார்கள்.



தென்றல்: மரங்கள் எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை. எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்க மரத்தைப் பயன்படுத்துவது சரிதானா?
சிற்பி: மரங்கள் தீப்பற்றக் கூடியவைதான். ஒரு சில மரங்கள் கல்லாக மாறும் தன்மை கொண்டவை. சுண்ணாம்புத் தன்மை அதிகம் கொண்ட மரங்கள் எரியாது. பாஸ்பரஸ் தன்மை அதிகம் கொண்ட மரங்கள் - அவை பச்சை மரமாகவே இருந்தாலும் - எரியும். ஆனால், தீப்பிடித்து எரியாத மரங்களும் உள்ளன. இலுப்பை மரம் காய்ந்தாலும் எரியாது. இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட காரில் நெருப்பை வைத்தாலும் அது பற்றிக்கொள்ளாது. எளிதில் தீப்பிடிக்காத மரத்தில்தான் காரின் பாகங்களைச் செய்தேன்.

தென்றல்: சில மரங்களை வீட்டிற்குள் சேர்க்கக் கூடாது, நிலை வைக்கக் கூடாது, ஆகாது என்றெல்லாம் சொல்கிறார்களே அதன் காரணம் என்ன?
சிற்பி: உண்மைதான். இந்த மரத்தை வீட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம், இதை வீட்டில் வளர்க்கக்கூடாது, சில மரங்களைத் தொடலாம், சிலவற்றைத் தொடக்கூடாது என்றெல்லாம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. சில மரங்கள் பூச்சியால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை. வாகை மரத்தை வண்டு துளைத்து விடும். சில மரங்களைக் கறையான் அரித்துவிடும். சில மரங்கள் உளுத்துக் கொட்டும். அதையெல்லாம் நன்கு அறிந்து, அவற்றால் வீட்டுக்கும், வீட்டில் வசிப்பவர்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்பதால் முன்னோர்கள் இப்படி விதித்துள்ளனர். சிலவற்றைச் சொல்லும்போது கடவுளையும் சேர்த்துச் சொன்னார்கள். நிலைப்படி வேங்கையில் கூடாது. அது முருகனின் மரம், முருகனை மிதிக்கக் கூடாது என்றார்கள். அப்படிச் சொன்னால்தான் கேட்பார்கள் என்பதற்காக அப்படிச் சொன்னார்கள். வேங்கைமரத்தில் இருந்து பச்சையாகச் சாயம் வரும். அது ஒருவித ரசாயனம். குழந்தைகளுக்கு ஆகாது. அதை நிலைப்படியாக வைத்தால், குழந்தைகள் தவழ்ந்து, நடந்து, தாண்டிப் போகும்போது அது உடலில், கை, கால்களில் ஒட்டி அதனால் பிரச்சனைகள் ஏற்படலாம். இப்படி முன்னோர்கள் சொன்ன ஒவ்வொன்றிற்கும் பெரிய காரணம் இருக்கிறது. அது நமக்குத் தெரியவில்லை.



தென்றல்: எந்த மரம் எதற்கு உதவும், எதற்கு உதவாது என்பதை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
சிற்பி: முன்னோர்கள், அப்பா, தாத்தாவிடமிருந்து பெற்ற அறிவாலும், சொந்த அனுபவத்தாலும் தான். ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு தன்மையுண்டு. சில கசப்புத்தன்மை கொண்டிருக்கும். சில துவர்ப்பாக இருக்கும். காய், கனிகளைப் பார்த்தாலே அது தெரியும். அருகருகே ஒரு எட்டி மரத்தையும், ஒரு பலா மரத்தையும் விதைத்து, அதே தண்ணீர், அதே காற்று, அதே சூரிய ஒளியில் வளர்த்தாலும், எட்டி கசப்பைத் தேக்கி வைத்துக்கொள்ளும். பலா இனிப்பைத்தான் தேக்கி வைத்துக்கொள்ளும். அதை நுகர்ந்து, அதில் படுத்து, அதில் வாழ்ந்து, உண்மையை உணர்ந்து முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தது இன்றைக்கும் சரியாக இருக்கிறது. இப்போதிருக்கும் மரத்தச்சர்களை விட முற்காலத் தச்சர்கள் மரத்தைப்பற்றி முழு விவரம் அறிந்தவர்களாக இருந்தனர். ஏர்க்கலப்பை, பரம்புப் பலகை முதல், இசைக்கருவிகள் வரை பலதும் அறிந்திருந்தார்கள். அந்த அறிவுடன், நாம் செய்யும்போது கிடைக்கும் அனுபவமும் முக்கியம்.

தென்றல்: முற்றிலும் மரத்தாலான கோயில் என்னும் உங்கள் திட்டம் மிகப் புதுமையானது. அதைப்பற்றிச் சொல்லுங்கள்...
சிற்பி: மரத்தச்சர் பரம்பரையில் நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவதற்கு ஓர் அடையாளமாக இக்கோயிலை உருவாக்கி வருகிறேன். முழுக்க முழுக்க அடிமுதல் கலசம்வரை இது மரத்தால் ஆனது. 3000 மரத் தச்சர்களைக் கொண்டு, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமையும். நட்சத்திரப் பொருத்தமுள்ள 27 வகையான மரங்களும் இக்கோயிலில் இடம்பெறும். ஐந்து கோபுரங்களைக் கொண்ட தியான மண்டபம் உண்டு. இதன் கருவறையில் கடவுள் என்று தனி உருவம் இல்லை. வெற்றிடம்தான். தியான மண்டபங்கள் மருத்துவகுணம் கொண்ட மரங்களால் ஆனவை.

ஒரு பெரியவர் தன் வீட்டில் ஒரு நந்தியின் சிலை செய்து வைத்திருக்கிறார். அது மிகவும் அழகாக இருக்கிறது. அதன் நெற்றியைத் தட்டுகிறார். விபூதி கொட்டுகிறது. பூசிக்கொண்டு நகர்ந்து விடுகிறார். அந்த நந்தி மிக மிக அழகாக இருக்கிறது. இப்படி அரிய, மரத்தாலான படைப்புகள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. அவற்றை வெளியே கொண்டுவர வேண்டும். அதுபோல் 70 வயதுக்கு மேலே உள்ள பெரியவர்களின் கைத்திறனையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது என் ஆவல்.



எனது சித்தப்பா ஒருவர், இசைக்கருவிகள் செய்பவர். கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் இருக்கிறார். நாதஸ்வரம் செய்பவர். ஒன்றைச் செய்ததும், ஒரு நாதஸ்வரக் கலைஞரை அழைத்து, தான் சொல்லும் ராகங்களை வாசிக்கச் சொல்வார். அந்த ராகங்கள் சரியாக வருகின்றனவா, நாதம் துளைவழியே ஒழுங்காக வெளிப்படுகிறதா, ஊதச் சிரமம் இல்லாமல் இருக்கிறதா என்று சரி பார்ப்பார். கவனித்து, அதற்கேற்ப எல்லாவற்றையும் சரிப்படுத்தி, திருப்தியான பின்னர்தான் அந்தக் கருவியை இசைக்கலைஞரிடம் கொடுப்பார். இவர்களது ஞானம் யாருக்கும் தெரியாது. இவர்கள் வெளியில் போய் எனக்கு ஞானம் இருக்கிறது என்று யாரிடமும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். புத்தகம் எழுதமாட்டார்கள். இவர்கள் மறைந்தால், இவர்களோடு அந்த அனுபவமும், அறிவும் மறைந்துவிடும்! 75 வயதுக்கு மேற்பட்ட பாரம்பரிய மரத்தச்சர்கள், கைத்திறன் வாய்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் இருக்கும்போதே இவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில்தான் இப்படி ஒரு கோவிலை வடிவமைத்தேன்.

அடுத்த காரணம், மரங்களில் உள்ள விஞ்ஞானத்தை வெளிப்படுத்துவதும், அதனைப் பயன்படுத்திக் கொள்வதும். மரத்தாலான சீப்பாங்கட்டை (pacifier), மரப்பாச்சி, பல்லாங்குழி, நடைவண்டி, சக்கர வண்டி என நூற்று நாற்பதுக்கும் மேலான பொருட்கள் உபயோகத்தில் இருந்தன. இன்றைக்கு மிகவும் அருகிவிட்டன. அவற்றைத் தேடிச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவை இந்த ஆலயத்தைச் சுற்றி அமையவுள்ள கடைகளில் கிடைக்கும். முக்கியமாக, இந்தக் கோயிலில் விக்ரகங்களோ, கடவுள் வழிபாட்டுப் பொருட்களோ கிடையாது. அனைத்துமே தியான அறைகள்தாம். இந்தக் கோயிலைச் சுற்றி சிற்பக்கல்லூரி அமைத்து, பிற ஆலயங்களுக்குத் தேவையான ரதம், வாகனங்கள் போன்றவற்றைச் செய்துதரும் திட்டமும் உண்டு.

தென்றல்: உங்கள் குருநாதர் வை. கணபதி ஸ்தபதியுடனான அனுபவங்கள் குறித்து...
சிற்பி: சுமார் 10 ஆண்டுக்காலம் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். ஒரு கல் எப்படிக் கடவுளாகிறது என்பதை அவர் சொல்லியிருக்கிறார். அவரைச் சந்திப்பதற்கே மூன்று மாதகாலம் கஷ்டப்பட்டேன். அவர் அவ்வளவு பிஸி. 'தச்சர்களின் கையேடு' என்ற நூலை எழுதியிருந்தேன். அவரிடம் முன்னுரை வாங்கித்தான் வெளியிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். சந்திக்க அனுமதி கிடைத்தது. என் புத்தகத்தைப் படித்துப் பார்த்தவர் அதிலுள்ள வரைபடங்களைக் கண்டு, "என்னடா... எல்லாம் ஒரே கோடாக இருக்கிறது" என்றார். "கோடு போட்டா நாங்க ரோடு போட்டுருவோம் ஐயா" என்றேன். அது அவருக்கு மிகவும் பிடித்தது. இரண்டு பக்க முகவுரை எழுதிக் கொடுத்தார். அங்கேயே உட்கார்ந்து படிக்கச் சொன்னார். நான் அதை வியந்து பாராட்டியது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. புத்தகத்தை அவரே வந்து வெளியிட்டார்.



அதுமுதல் அவருடன் தொடர்பில் இருந்தேன். என்னுடைய சந்தேகங்களைக் கேட்பேன். அவர் விளக்குவார். ஒரு சமயம் கணபதியைப் பற்றிய சந்தேகம் கேட்டேன். அது எப்படி மனித உடலில் யானையைப் பொருத்த முடியும், அப்படியே பொருத்தினாலும் எப்படி சிறிய எலியை அவ்வளவு பெரிய உருவத்துக்கு வாகனமாக அமைக்க முடியும், அதன் தத்துவம் என்ன என்று கேட்டேன். அவர் பொறுமையாக விளக்கினார். சேர முடியாத ஓர் உருவத்தைச் சேர்ப்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதுவும் பிரமாண்டமான யானையின் தலையை மனித உடலில் பொருத்துவதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதனை அறிந்ததால்தான் - அந்தக் கணக்குகளுக்கு அதிபதி என்பதால்தான் - அவர் கணபதி. எலியாக இருந்தாலும் யானையாக இருந்தாலும் ஆன்மா ஒன்றுதான் என்று கூறி, சுமார் ஒருமணி நேரம் விளக்கினார். அவர் மகாமேதை. அறிவியல், கணிதம் ஆகியவற்றில் தேர்ந்தவர். ஆயாதி கணிதம் உட்படக் காலக்கணக்குகளில் தேர்ந்தவர்.

எல்லாருக்கும் எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. ஒரு சமயம் நான் கேட்டுக்கொள்ளவே, எங்கள் 12 பேருக்கு 24 வகுப்புகள் எடுத்தார். சிற்றுண்டியும் அளித்து எங்களை ஊக்கப்படுத்துவார். "நீங்கள் கற்றுக்கொடுப்பதே பெரிய விஷயம். எதற்கய்யா இவ்வளவு செலவு?" என்று கேட்டால், "என்னை யாரும் வந்து கேட்கலைடா சொல்லிக் கொடுங்கன்னு. நீயாவது வந்து கேட்டியே. அதனாலதான்" என்றார். என் கண்கள் கலங்கிவிட்டன. ஒரு சமயம் தஞ்சை பெரியகோயிலைப் பற்றிச் சந்தேகம் கேட்டபோது, உடனே காரை எடுக்கச் சொல்லி, 'வா போகலாம்' என்று தஞ்சைக்கே கூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கு ஒருநாள் முழுவதும் சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கமளித்தார். மயனைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். இதெல்லாம் தன்னோடு போய்விடுமோ, மக்களிடம் சென்று சேராமல் ஆகிவிடுமோ என்ற ஏக்கம் அவரிடம் இருந்தது.

அவர் அவ்வளவு சீக்கிரம் அமரராகி விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இன்னமும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கலாமோ, கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டோமோ என்று தோன்றுகிறது. என்னை அவர் ஒரு மகன்போலக் கருதினார். அவர் இழப்பு எனக்கு மிகப் பெரிய இழப்பு. சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த என்னை முதன்முதலில் விமானத்தில் அழைத்துச் சென்றவர் அவர்தான். அதுபோல முதல் வெளிநாட்டுப் பயணமும் அவரது வேலை நிமித்தமாகத்தான். அவரது ஆசியினால்தான் நான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். என்னை அவர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

அவர் நினைவாக வருடந்தோறும் 5 பேருக்கு 'கணபதி ஸ்தபதியார் விருதை' அளித்து வருகிறேன். இது 12வது வருடம். வரும் மே மாதம் 10ம் தேதி இதற்கான விழா நடக்க இருக்கிறது. 80 வயதுக்கு மேல் ஆன, இன்றைக்கும் வேலை செய்கிற மரத்தச்சர்களுக்கு விருதளித்து கௌரவிக்கிறேன். அவர்கள் சிறுவயது முதற்கொண்டே காலையிலிருந்து இரவுவரை வேலை செய்கிறவர்கள். வேறெதுவும் அறியாதவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.



தென்றல்: மரங்களை வெட்டக்கூடாது; சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்க, நீர் வளம் குறைய மரங்கள் அழிக்கப்படுவதே காரணம் என்பது குறித்து உங்கள் கருத்தென்ன?
சிற்பி: மரங்களை வெட்டக் கூடாது என்பதே தவறு. மரங்கள் முற்ற முற்ற அவற்றில் எண்ணெய்த் தன்மை, பாஸ்பரஸ் அதிகமாகிவிடும். சாதாரணமாக இளம் மரவேர்களில் பால் வரும். அதுவே முற்றி விட்டால் எண்ணெய் வரும். தேங்காய் முற்ற முற்ற எண்ணெய் மிகுந்ததாக மாறுவதுபோல். முற்றிய மரத்தை வெட்டித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் காடுகள் தீப்பற்றிக் கொள்ளும். அவற்றை யாரும் கொளுத்துவதில்லை. எண்ணெய் அதிகமாகி, பாஸ்பரஸ் பெருகி அவை தானாகப் பற்றிக் கொள்கின்றன. என் தாத்தாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவர் சாகக்கூடாது என்று சொல்ல முடியாது. மரணம் இயற்கையானது. தாத்தாவின் அறிவை, அனுபவத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோல முற்றிய மரங்களை வெட்டிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நாங்கள் மரத்தை வெட்டுமுன் மந்திரம் சொல்வோம். ஐந்து விதைகளை ஊன்றிப் பூஜை போட்டுவிட்டுத்தான் மரம் வெட்டுவோம். இளமரங்களை வளர்ப்பதும், முற்றிய மரங்களை வெட்டுவதுமே முன்னோர் வகுத்துத் தந்த வழிமுறை.

தென்றல்: உங்களது விஸ்வகர்மா வேத நிறுவனம் என்ன செய்கிறது?
சிற்பி: இந்நிறுவனத்தில் ஆர்வமுள்ள இளையோருக்கு குருகுலப் பயிற்சியாக தச்சுக்கலை கற்பிக்கப்படுகிறது. மூன்று வேளை உணவு, தங்கும் வசதி உள்ளது. தொழிற்கல்வி மட்டுமல்லாது மாணவர்களுக்கு வேதம், கலாசாரம், சுய ஒழுக்கம், கட்டுப்பாடு போதிக்கப்படுகிறது. சிறந்து விளங்குபவர்களுக்கு மேலும் பயிற்சியளித்து தொழில்முறைத் தச்சர் ஆக்குவதே நோக்கம். இதுவரை 17 முழுமையான மரத்தச்சர்கள் உருவாகி தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். காலையில் எழுந்து குளித்து விபூதி அணிந்து காயத்ரி தேவியை வணங்கி அவர்கள் தங்கள் கல்வியை ஆரம்பிப்பர். இவ்வருடம் 60 பேர் பயில்கின்றனர். நான் சம்பாதிப்பது அனைத்தையும் இதற்காகவே செலவிட்டு வருகிறேன். எல்லாமே இங்கு இலவசம்தான்.

தென்றல்: ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள் இரவு பகலாக உழைப்பைக் கோருபவை. உங்கள் குடும்பத்தினர் இதை ஆதரிக்கின்றரா?
சிற்பி: நான் வேலைக்குத்தான் செல்கிறேனே தவிர ஊர் சுற்றவோ, சினிமா, டிராமாவுக்கோ அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். சில வேலைகளை எடுத்தால் இரவு பகல் இங்கேயே தங்கி வேலை செய்யவேண்டி வரும். அப்படி வரும்போது வீட்டில் முன்பே சொல்லி விடுவேன். தேர் செய்கிறோம், சப்பரம் செய்கிறோம் என்றால் அந்த வேலை முடிந்து அது வெள்ளோட்டம் விடப்படும்போது, மனைவியை அழைத்துச் செல்வேன். அவரும் அதன் அருமையைப் புரிந்துகொள்வார். எப்போதும் எனது பணிக்கு மனைவியின் ஆதரவு உண்டு.



நாங்கள் மிக எளிமையாக வாழ்பவர்கள். ஹோட்டலுக்குப் போவது, ஊர் சுற்றுவது எல்லாம் கிடையவே கிடையாது. அதற்கு நேரமும் இல்லை. இருக்கும் வேலையைப் பார்க்கவே நேரமில்லை! எங்கள் தேவையும் குறைவு என்பதால் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படும்போதும் சமாளிக்க முடிகிறது. வீட்டில் கேஸ் இருக்கிறது. விறகு அடுப்பும் இருக்கிறது. ஒன்றுமே இல்லாவிட்டால் நொய்யரிசி வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் அனுபவமும் இருக்கிறது. கொஞ்சம் சீரகம் சேர்த்துக் குடித்தால் பசி அடங்கிவிடும். கல்யாணம் ஆகி 25 வருடம் ஆகிறது. நாங்கள் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போனதில்லை. அதற்கான செலவை மிச்சம்பிடித்து ஏதாவது மரம் வாங்கலாமே என்றுதான் யோசிப்பேன். கொடைக்கானல் போய் தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில்லை. இங்கேயே இருக்கலாம். எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். அந்தப் புரிதல் எங்களுக்குள் இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

நாங்கள் மரத்தச்சர்கள். நாற்காலியின் நான்கு கால்களும் சமமாக இருக்க வேண்டும். ஒன்று கொஞ்சம் நீளமானால்கூட என்ன ஆகும் என்பது தெரியும். குடும்ப வாழ்வும் அப்படித்தான். சிக்கனமான, கட்டுப்பாடான இல்லற வாழ்வு எங்களுடையது. வீண் ஆடம்பரச் செலவு செய்வதில்லை. மன நிறைவுடன் வாழ்கிறோம்.

அவரது மரச்சிற்பங்களில் காணப்படும் துல்லியமும் தெளிவும் பேச்சிலும் தெரிகிறது. "நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இந்தத் துறையால்தான். இதற்கு ஏதாவது நான் திருப்பிச் செய்யவேண்டும். இதிலிருப்பதை அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்கிற மாதிரி ஆவணப்படுத்த வேண்டும். இதில் மறைந்திருக்கும் விஞ்ஞானம் அறியப்பட வேண்டும். திறன்மிக்க தச்சர்களுக்குத் தக்க மதிப்பு மரியாதையை இந்தச் சமூகம் எமக்கு அளிக்க வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மரத்தச்சனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்" என்கிறார் அப்பர் லட்சுமணன். அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


'உயர்ந்த' மரம்
செம்மரத்தைச் சிலர் உயர்வாகச் சொல்வார்கள். திருட்டுத்தனமாக மரம் வெட்டுவது, வெட்டுபவர்களைச் சுட்டுக் கொல்வது, மரம் கடத்துவது என்று நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், செம்மரத்தைவிட மிக உயர்வான மரங்கள் இங்கே இருக்கின்றன. பலருக்கும் அது தெரியாது. பூவரச மரம் தெரியும் உங்களுக்கு. பூ அரச மரம் என்று பெயருக்கேற்றார் போல் அதன் சத்து, சாரம் முழுவதும் பூவில் வெளிப்படும். செம்மரத்தைவிட மதிப்பு அதிகமுள்ள மரம் இது. உளி, சுத்தி வைத்து நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, கையில் காயம்பட்டு விடும். அப்போது பூவரச மரத்தின் இலையையோ, பூவையோ வைத்துச் சேர்த்துக் கட்டுப் போட்டு விடுவார்கள். விரைவிலேயே காயம் ஆறிவிடும். அந்தப் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்லவேண்டும். அதுபோல நாட்டுப்புறங்களில் அரைஞாண் கயிற்றில் புங்கங்காயில் ஓட்டை போட்டுக் கட்டி வைத்திருப்பார்கள். புங்க இலை பெரிதாக இருக்கும். அது கரிம வாயுவை அதிகமாக எடுத்துக்கொண்டு பிராண வாயுவை அதிகம் வெளிவிடும்.

- அப்பர் லட்சுமணன்

*****


எதற்கு எந்த மரம்?
மன்னர்கள் காலத்தில் மரங்களை நட்டனர் என்றால், இன்றைக்கு இருக்கும் பயனில்லாத மரங்களை அல்ல. எந்த இடத்தில் எந்த மரத்தை வைக்கவேண்டும் என்று கணக்கு இருக்கிறது. தூங்குமூஞ்சி மரத்தைச் சாலை ஓரத்தில் வைக்கிறார்கள். அவற்றின் இலைகள் இரவில் மூடிக் கொண்டுவிடும். சுவாசிக்காது. சாலை ஓரத்தில் நட வேண்டிய மரங்கள் வேம்பு, புளி, புங்க மரம் போன்ற ஆணிவேர் நீண்ட மரங்கள்தாம். அம்மரங்கள் காலத்துக்கும் நின்று நிலைத்துப் பயன்தரக் கூடியவை. மரத்தால் சீப்பாங்கட்டை செய்வார்கள். கட்டை விரலை வாயில் போடும் குழந்தைகளுக்கு ஒரு மரத்திலிருந்தும், நடு இரண்டு விரல்களைப் போடும் குழந்தைகளுக்கு வேறொரு மரத்திலிருந்தும், மற்ற விரல்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு வேறு சில மரங்களில் இருந்தும் சீப்பாங்கட்டை செய்வார்கள். இதன் பயன் பல் சீராக வளரும். பேச்சும் ஒழுங்காக, சீராக வரும்.

அஞ்சறைப் பெட்டியின் அருமையை இன்றைக்கு எடுத்துச் சொல்ல ஆளில்லை. அஞ்சறைப் பெட்டியை எந்த மரத்தில் செய்ய வேண்டும், அதில் எந்தெந்தப் பொருட்களை எப்படி வைக்கவேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அப்படி வைத்தால் அதன் சக்தி குறையாமல் இருக்கும். ஆனால் இன்றைக்கு பிளாஸ்டிக்கில் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். அது விஷமாகி உடலில் சேர்கிறது. இந்தமாதிரி காணாமல் போன விஷயங்களை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.

- அப்பர் லட்சுமணன்

*****


விமான நிலையத்தில் தமிழ்த்தேர்
சென்னை வந்த புதிதில் கதவு, வாசக்கால், நிலைப்படி போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். அதை வேலை நடக்கும் இடத்துக்கே போய்ச் செய்வேன். பின்னர் ஒரு சிறிய இடத்தில் ஃபர்னிச்சர் செய்ய ஆரம்பித்தேன். தற்போது என் மகன் மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் படித்து வந்த பிறகு, அவர் வரைகலை நன்கு அறிந்திருக்கிறார் என்பதால், வாஸ்து விஷயங்கள் எல்லாம் கற்றிருப்பதால் தேர், ரதம் போன்ற பணிகளை எடுத்துச் செய்கிறோம்.

அதில் ஒன்று சென்னை விமானநிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தேர். பூம்புகார் நிறுவனத்துக்காக அதனைச் செய்தேன். அங்கு 'தமிழ்த் தேர்' அமைக்கும் எண்ணம் வரக் காரணம், அந்தக் கட்டிட அமைப்புத்தான். பாரம்பரியம் இல்லாத ஒரு கட்டிடம் என்றால் அது மீனம்பாக்கம் விமான நிலையக் கட்டிடம் தான். அங்குள்ள தூண்கள் 'V' வடிவில் இருக்கும். அது இயற்கைக்கு எதிரானது. புவி ஈர்ப்பு மையத்திற்கு எதிராக அது அமைந்திருப்பதால்தான் அடிக்கடி அங்கே மேற்கூரைக் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன.

அங்கே 'தமிழ் அடையாளம்' ஆக ஏதாவது இருக்கவேண்டும் என்று நினைத்தேன். 47 கருத்துக்கள் எழுதிக் கொடுத்தேன். அவற்றில் தமிழ்த் தேருக்கு அனுமதி கிடைத்தது. இந்தத் தேரில் கீழே, இட்லி, இடியாப்பம் எனத் தமிழ் உணவுகளாகச் செதுக்கி வைத்திருப்பேன். அடுத்த மேல்தட்டில் கடவுளுக்கு இணையாக 'அ, இ, உ' என்ற எழுத்துக்களை அமைத்திருக்கிறேன். அதில் கடவுள் என்று தனி உருவம் கிடையாது. திருக்குறள், சிற்பச் செந்நூல், ஓலைச்சுவடிகளைப் பீடத்தில் வைத்திருக்கிறேன். நமது தமிழ்க் கலாச்சாரத்தை முழுமையாக இயக்குவது திருக்குறள். அதனால் திருவள்ளுவரை ரதத்தின் சாரதியாக அமர்த்தியிருக்கிறேன். எனக்கு மிகவும் மனநிறைவைக் கொடுத்த பணி இது.

- அப்பர் லட்சுமணன்

*****


குரு தந்த விருது
ஒரு சமயம் நான் கணபதியின் தசாவதாரச் சிற்பங்கள் உருவாக்கியதைப் பார்த்து வியந்து, "விநாயகர் இப்படி தசாவதாரம் எடுப்பாரா என இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தூக்கமே வரவில்லை. நல்ல மாடர்ன் ஆர்ட் இது" என்று பாராட்டி அவரது சாண்ட்ரொ காரைப் பரிசாகக் கொடுத்தார். அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அவர் 'பெருந்தச்சன்' என்ற விருதையும் எனக்கு அளித்தார். "வள்ளுவர் கோட்டத்தில் நான் ரதம் செய்தேன். பொதுவாக ரதத்தின் சக்கரங்கள் மரத்தில்தான் இருக்கும். நான் கல்லில் செய்திருந்தேன். அதன்மூலம் உயர்ந்தேன். எல்லாரும் காரை உலோகத்தில்தான் செய்வார்கள். இவன் மரத்தில் செய்திருக்கிறான். அதனால் இவன் இன்று முதல் பெருந்தச்சன்" என்று சொல்லி என்னைப் பாராட்டினார். அவர் எனக்கு இலங்கையில் ஒரு வேலை கொடுத்திருந்தார். 20 நாளில் முடிய வேண்டிய வேலை அது. நான் இரவு பகலாக வேலை செய்து ஏழே நாட்களில் முடித்தேன். அது கண்டு அவருக்குப் பெருவியப்பு. மனமாரப் பாராட்டினார். இவற்றை நான் மிக உயர்வாக மதிக்கிறேன்.

- அப்பர் லட்சுமணன்

*****


எனது புத்தகங்கள்
கோலத்திற்கெல்லாம் புத்தகம் இருக்கிறது. வீடு, அலுவலகங்களை வடிவமைப்பதற்குப் பட்டப்படிப்பு, புத்தகங்கள் உள்ளன. ஆனால், எங்களைப் போன்ற பரம்பரைத் தச்சர்களின் கலை நுணுக்கங்களைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை. காரணம், இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் பரம்பரையாகவே ஏட்டுக்கல்வி பயிலாதவர்கள். படிப்பறிவற்றவர்கள். ஆனால், அனுபவக் கல்வி உடையவர்கள். அந்த அனுபவத்தைக் கல்வியறிவு இல்லாததால், எழுதிவைக்க முடியவில்லை. தந்தை வழி மகன் என்று இந்த அறிவு பயணப்பட்டதே தவிர நுணுக்கங்கள் பலவும் பலர் அறிய இயலாதபடி தேங்கிப் போய்விட்டன. இந்த நிலைமையை மாற்ற நினைத்தேன். நானே எழுதத் துவங்கினேன். 'பெருந்தச்சர்களின் நுண்கலை', 'தச்சர்களின் கையேடு', 'உளிபட்டு வெளிப்பட்ட தச்சுக்கலை', 'பெருந்தச்சர்களின் டைரி', 'மய மரபின் மரக் கடைசல்', 'காலத்தின் சாரம் (கலாச்சாரம்)', 'மரமும் மனிதனும்', 'ஓவியம் பயிலுங்கள்' (3 பாகம்) என இதுவரை சுமார் 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இன்னம் மூன்று புத்தகங்கள் அச்சில் உள்ளன. அவை விரைவில் வெளியாகும்.

- அப்பர் லட்சுமணன்

© TamilOnline.com