தென்றல் பேசுகிறது...
அமெரிக்கா என்பது அடிப்படையில் பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தோர் நாடு. அதன் பூர்வகுடிகள் கிட்டத்தட்ட அடையாளமிழந்து நிற்கிறார்கள். அப்படியிருக்க, "முதலில் அமெரிக்கா" (America First) என்ற கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர், H-1B விசா குறைப்பு என்று பல விதங்களில் அமெரிக்காவுக்கு எவரையும் வரவிடாதபடி ட்ரம்ப் செய்து வருவது, அமெரிக்கா புத்தாக்க முன்னோடியாகத் திகழ்வதைத் தடுப்பதோடு, அதன் உற்பத்தித் திறனையும் கடுமையாகக் குறைத்துவிடும். உதாரணமாக, 2015ல் 96% ஆக இருந்த H-1B விசா அங்கீகாரம், 2018ல் 85% ஆகக் குறைந்து போனது. தவிரவும் H-1B விசாவில் இருப்பவர்களின் கணவன்/மனைவி வேலை பார்ப்பதற்கான அனுமதியை அகற்றவும் ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கக் கல்லூரிகளில் மேற்கல்வி பயில விரும்பும் பிற நாட்டவரும் இந்த அரசின் முட்டுக்கட்டைக் கொள்கைகளால் இங்கு வருவதற்கான உற்சாகத்தை இழந்திருக்கிறார்கள்.

இதை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டது ஜஸ்டின் ட்ரூடோவின் புத்திசாலித்தனமான தலைமையைக் கொண்ட கனடா. சரியான குடிவரவுக் கோட்பாடுகள், செயற்கை அறிவில் நல்ல முதலீடு, அரசு-தனியார் இணைந்த தொழில் திட்டங்கள் எனப் பல்வேறு செயல்பாடுகள், மேம்பட்ட கல்வியும் புத்தாக்கத்திறனும், தொழில்முனைப்பும் கொண்டோருக்குக் கனடாவை மிக வசீகரமான தேசம் ஆக்கியுள்ளன. இதைக் கவனியுங்கள்: 2017ல் டொராண்டோவில் உண்டான வேலை வாய்ப்புகள் மட்டுமே விரிகுடாப்பகுதி, சியாட்டில், வாஷிங்டன் D.C. ஆகிய மூன்றிலும் ஒட்டுமொத்தமாக உண்டான பணியிடங்களை விட அதிகம். வரும் ஐந்தாண்டுகளில் புத்தாக்க மையங்களை டொராண்டோ, ஒட்டாவா, வாட்டர்லூ ஆகிய நகரங்களில் ஏற்படுத்த 50 மில்லியன் கனேடிய டாலர்களை ஒதுக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசு விழித்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் விழிப்புணர்வோடு நமது நாட்டின் வளர்ச்சியைக் கருதுகிற அரசை நாம்தான் அடுத்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

*****


மரங்களை வெட்டவே கூடாதென்பது அறிவுடைமையா? எண்ணெய் ஊற்றித் திரிபோட்டு ஏற்றினாலும் எரிந்துவிடாத மரவிளக்கு சாத்தியமா? பிளாஸ்டிக் கூடாதென்று சொல்லும் நாம் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் சீப்பாங்கட்டை (pacifier) கொடுக்கிறோமே, அது உடல்நலத்துக்கு நல்லதா? மரத்தாலே செய்த கார் சாலையில் ஓடுமா? இப்படிப்பட்ட பல சுவையான கேள்விகளுக்கு விடை சொல்வதோடு, மலைக்கவைக்கும் பல மரத்தாலான படைப்புகளையும் நம் பார்வைக்குக் கொணர்கிறது சிற்பி அப்பர் லட்சுமணன் அவர்களோடான நேர்காணல். சித்தபுருஷர் சிவஸ்ரீ படேசாஹிப், முன்னோடி பிச்சையப்பா பிள்ளை ஆகியோரும் உங்களை வியப்படையச் செய்வார்கள். சமகாலச் சாதனையாளர்களும் உங்கள் நெஞ்சைப் பெருமிதத்தில் விரியச் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் திருவாசக அரண்மனை மற்றோர் அற்புதப் படைப்பு. சிறுகதைகள், கவிதைகள் வழக்கம்போலவே மானுடம் நிரம்பித் ததும்புபவை. வாருங்கள், நாங்கள் வழி விடுகிறோம், நீங்கள் தென்றலோடு நேரம் செலவிடுங்கள்.

வாசகர்களுக்கு புத்த பூர்ணிமா மற்றும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

மே 2019

© TamilOnline.com