ஃபிப்ரவரி 23, 2019 அன்று நியூ ஜெர்சியில் உள்ள எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் குழந்தைகளுக்கான போட்டிகள் காலை 9:15 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கின. முதல்வர் சாந்தி தங்கராசு வரவேற்புரை வழங்கியதுடன், பிரிட்ஜ்வாட்டர் தமிழ்ப் பள்ளியிலிருந்து காலைநேரப் போட்டிகளுக்கு நடுவர்களாக வந்திருந்த ஆசிரியர்கள் நிர்மலா சரவணன், இலட்சுமிபிரியா அருணாசலம், யமுனாபிரியா அருள்மணி ஆகியோரை அறிமுகப்படுத்தினார். போட்டியின் விதிமுறைகளை விளக்கிய பின்னர் போட்டிகள் துவங்கின.
முதல் போட்டியாக 7 வயதுக் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் தொடங்கியது. பங்கேற்ற குழந்தைகள் குறட்பாக்களைப் பிழையின்றி, தெளிவாக உச்சரித்தது நடுவர்களையும் பெற்றோர்களையும், தன்னார்வ ஆசிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்து 8 வயதுக் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.
பிறகு 3-4 வயதுக் குழந்தைகளுக்கான 'பொருளைக் காண்பித்து ஒரு நிமிட உரை' போட்டி தொடங்கியது. குழந்தைகள் தமக்குப் பிடித்த ஒரு பொருளைக் கொண்டுவந்து, மழலை மொழியில் உரையாற்றியது மனதைக் கொள்ளை கொண்டது. யானை, நாய், பூனை, தேசியக்கொடி , திருவள்ளுவர் எனப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்தது 12 வயதுக் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி. இதில் கொடுக்கப்பட்ட 25 தலைப்பு வார்த்தைகளிலிருந்து, போட்டி நடுவர்களால் தரப்படும் ஒரு வார்த்தையைப் பற்றி இரண்டு நிமிடம் தெளிவாகப் பேசினர்.
காலைநேரப் போட்டிகள் முடிந்தபின் நடுவர்களுக்குச் சிறப்பு செய்து நன்றி கூறினார் பள்ளியின் துணைமுதல்வர் இலட்சுமிகாந்தன் சுந்தர்ராசன். இத்தருணத்தில், பள்ளியின் 2017-18 ஆண்டு மலரை கார்த்திக் காவேரிசெல்வன் வெளியிட, பிரிட்ஜ்வாட்டர் ஆசிரியைகள் பெற்றுக்கொண்டனர்.
மதியநேரப் போட்டிகளுக்கு நடுவர்களாக சவுத் பிருன்ஸ்விக் தமிழ்ப் பள்ளியின் பார்கவி வெங்கடேசன், எடிசன் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் கதிரவன் லோகநாதன் மற்றும் ஆர்வலர் கார்த்திக் காவேரிசெல்வன் ஆகியோரை வரவேற்று அறிமுகப்படுத்திய பின் மதியப் போட்டிகள் தொடங்கின.
9 வயதுக் குழந்தைகளுக்கான திருக்குறளைப் பொருளுடன் ஒப்புவிக்கும் போட்டியில், முன்னரே அறிவிக்கப்பட்ட 30 குறட்பாக்களிருந்து 2 மணித்துளிக்குள் அதிகக் குறட்பாக்களைச் சொல்பவரே வெற்றியாளர். இதில் பொருளுடன் 20 குறட்பாக்களை இலகுவாகக் குழந்தைகள் ஒப்பித்தனர். அதேபோன்று 10 வயதுக் குழந்தைகள் திருக்குறள் போட்டியும் நல்லமுறையில் நடந்தது.
தொடர்ந்து, 5 வயதினருக்கான பாரதியாரின் 'புதிய ஆத்திசூடி' மனனப் போட்டியில் மழலைகள் பிழையின்றி ஒப்புவித்தது காண்போரைக் களிக்கச் செய்தது. பிறகு 6 வயதினருக்கான வார்த்தை விளையாட்டு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே தரப்பட்டுள்ள சொற்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து வந்தனர். நடுவர்கள் எழுத்தைச் சொன்னவுடன் அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களை மடமடவெனக் கூறியது குழந்தைகளின் சொல்வளத்தைக் காண்பித்தது.
இறுதியாக 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் கவிதை ஒப்புவித்தல் போட்டியில், மகாகவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிஞர் தாராபாரதி ஆகியோரின் கவிதைகளிலிருந்து இரண்டு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒப்பித்தனர். ஏற்ற இறக்கங்களுடன் மடைதிறந்த வெள்ளம்போல மாணவர்கள் ஒப்புவித்தது உணர்ச்சிபூர்வமாக இருந்தது..
பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் தரப்பட்டன. முதல் மூன்று பரிசு பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. பரிசுகளைப் பள்ளி முதல்வர் சாந்தி தங்கராசு, துணை முதல்வர் இலட்சுமிகாந்தன் சுந்தர்ராஜன், பொருளாளர் செந்தில் முத்துசாமி ஆகியோர் வழங்கினர். போட்டிகளில் சுமார் 130 மாணவர்கள் பங்கேற்றனர்.
இறுதியில், பொருளாளர் செந்தில்நாதன் முத்துசாமி நன்றி நவின்றார். நிகழ்ச்சிக்கு இளங்கோவன் சௌந்தரராஜன், ராஜேஷ் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒலி அமைத்திருந்தனர். விஜயகுமார் மற்றும் சுப்ரமணியன் புகைப்படம் எடுத்தனர்.
2010ம் ஆண்டு லாபநோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி நியூ ஜெர்சியில் தமிழ் கற்க உதவிவருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் சுமார் 670 மாணவர்கள் பயில்வது குறிப்பிடத் தக்கது.
வலைமனை: www.jerseytamilacademy.org மின்னஞ்சல்: tamilschool.edison@gmail.com
கனிமொழி ம.வீ., சாந்தி தங்கராசு |