டொராண்டொ: தமிழ் இருக்கை நிதிக்காக வில்லுப்பாட்டு
மார்ச் 9, 2019 அன்று 'மாகா' வழங்கிய 'மன்னார்குடி போன கதை 2.0' என்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வில்லுப்பாட்டு என்பது தமிழ் நாட்டின் தென்பகுதியில் வழங்கிவரும் ஒரு பாரம்பரியக் கதைசொல்லல் முறையாகும். போர்கருவியான வில்லை இசைக்கருவியாகப் பயன்படுத்தி, இசையோடும் நடிப்போடும் எளிய பேச்சுவழக்கில் மக்களுக்குக் கதை சொல்வது வில்லிசையாகும். கனடாவின் மிகப்பிரபலமான மருத்துவர் இரகுராமன் இந்த நிகழ்ச்சியைச் சுவைபட வழங்கினார்.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முடிவில், ஆதரவாளர்கள் மேடையில் தங்கள் நன்கொடைகளைக் கையளித்தனர். அன்றைய இரவு ஏறக்குறைய $65,000 தொகை குவிந்தது. இதனைக் கண்ணுற்ற பார்வையாளர் ஒருவர் குறித்த தேதிக்குள் மூன்று மில்லியன் டாலர் இலக்கை எட்டிவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அ. முத்துலிங்கம்,
டொராண்டோ, கனடா

© TamilOnline.com